இந்தியா முழுவதும் சுகாதாரமான 500 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கும் பிரதமர் மோடியின் தேசிய இயக்கத்திற்கு 'ஆன்லைனில்' பதிவு நடைபெறுகிறது.
துாய்மை பாரதம் திட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி கழிப்பறைகள் தினமும் இருவேளை பராமரிக்க பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதசம்பளம், கிருமி நாசினி வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து, கை கழுவ சோப்பு, டவல் தரப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரதமர் மோடியின் 'துாய்மையான பாரதம், துாய்மையான பள்ளிகள்' எனும் புதிய தேசிய இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இதில் சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் அரசு பள்ளிகளுக்கு 'துாய்மை பள்ளி' என தேசிய விருது வழங்கப்படுகிறது. 500 பள்ளிகளை தேர்வு செய்து தலா ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட உள்ளது. இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் துவக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
சுய மதிப்பீடு
இத்தேர்வு 'ஆன்லைன்' மூலம் நடத்தப்படுகிறது. பள்ளிகளுக்கு 39 கேள்விகளுடன் நான்கு விடைகள் அடங்கிய சுயமதிப்பீட்டு படிவம் அளிக்கப்பட்டுள்ளன. அதில் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள், பயன்பாடு ஆகியவற்றை மையப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
பள்ளியில் குடிநீருக்கு என்ன செய்கிறீர்கள் என கேள்விக்கு, 4 விடைகள் அளிக்கப்பட்டிருக்கும். வசதியினை 'டிக்' செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். பதில்களுக்கு ஏற்ப மொத்தம் 100 மதிப்பெண் வழங்கப்படும்.
தேர்வு குழுக்கள்
மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான குழுவினர் பள்ளிகளை ஆய்வு செய்வர். மாவட்ட குழுவில் கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலர், சிறந்த மூன்று தலைமை ஆசிரியர்கள், இன்ஜினியர், உடல்நல அலுவலர், இரு தன்னார்வலர்கள் இடம்பெறுவர். மாநில குழுவில் பள்ளி கல்வி செயலர், இயக்குனர், உடல்நல இயக்குனர், இரு தலைமை ஆசிரியர்கள், தலைமை இன்ஜினியர் , பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் இடம் பெறுவர். தேசிய குழுவில் தலைமை கல்வி செயலர், துணை செயலர் இடம் பெறுவர்.
மாநிலத்தில் 40 பள்ளிகள் தேர்வு செய்து, அதில் 20 பள்ளிகள் தேசிய போட்டிக்கு பரிந்துரை செய்யப்படும். 20 பள்ளிகளுக்கு விருது, அங்கீகார சான்று வழங்கப்படும். சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யும் 500 பள்ளிகளுக்கு தலா ரூ.50ஆயிரம் நிதி, உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்துவதற்கு வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பள்ளிகள் விபரம் நவ., 25ல் அறிவிக்கப்படும்.
போட்டிகளில் பங்கேற்க பள்ளிகள் சுயமதிப்பீடு கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றன.
No comments:
Post a Comment