'மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்தும், மாணவர்களை கண்காணித்து, அவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள பயிற்சி அளிக்க வேண்டும்' என, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்விஇயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன், கோவையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி மாணவி, மது குடித்து விட்டு, பொது இடத்தில் ரகளை செய்தார். இந்தச் சம்பவம், ஆசிரியர் மற்றும் பெற்றோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதையில் ரகளை செய்த, நான்கு மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர். கலெக்டர் உத்தரவின்படி, அந்த மாணவர்கள் திருந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், போதைப் பொருட்களை, மாணவர்கள் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அனைத்து முதன்மை கல்வி அதிகாரி களுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பியுள்ளார். 'ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோருடன் பள்ளி தலைமை ஆசிரியரும் இணைந்து, மாணவ, மாணவியரை கண்காணிக்க வேண்டும்.
அவர்களுக்கு போதைப் பழக்கம் தொற்றிக் கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ, மாணவியரிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. போதைப் பொருட்கள் பக்கம் அவர்கள் கவனம் செல்லாமல், படிப்பின் பக்கம் அவர்களின் கவனத்தை திருப்ப வேண்டும். போதைப் பழக்கத்துக்கு ஆளான மாணவர்கள் அதில் இருந்து மீள, ஆசிரியர்கள் உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.'இவ்வாறு, அந்த அறிவுறுத்தல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment