இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, August 17, 2015

கலை - அறிவியல் படிப்புகளுக்கும் ஒற்றைச் சாளர முறை வருமா?

பொறியியல், மருத்துவம், ஆசிரியர் கல்வியியல் படிப்புகளுக்கு உள்ளதுபோல் கலை - அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையிலும் ஒற்றைச் சாளர பொதுக் கலந்தாய்வு முறை கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது. இதன் மூலம், வெளிப்படைத் தன்மையையும் உறுதி செய்ய முடியும் என்கின்றனர் அவர்கள். தமிழகத்தில் 536 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதுபோல் மருத்துவம், ஆசிரியர் கல்வியியல் படிப்புகளிலும் பொதுக் கலந்தாய்வு முறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தப் படிப்புகளிலான சேர்க்கையில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், கலை - அறிவியல் படிப்பு சேர்க்கையில் மட்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. தமிழகத்தில் 74 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 37 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 139 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 443 சுயநிதிக் கல்லூரிகள் என மொத்தம் 693 கலை - அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த 693 கல்லூரிகளிலும் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை அந்தந்தக் கல்லூரிகளில் நடக்கும் கலந்தாய்வு மூலமே நடைபெறுகிறது. இதனால், முறையாக இடஒதுக்கீடுகள் பின்பற்றப்படுகின்றனவா, ஆண்டுக்கு ஆண்டு கூடுதலாகப் பெறப்படுகின்ற இடங்களில் எந்த அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது போன்ற விவரங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுவதில்லை என்பதோடு, சேர்க்கையில் வெளிப்படையாகவே முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுகின்றன.

அண்மையில் சென்னை வியாசர்பாடியில் அரசுக் கல்லூரியில் எழுந்த சர்ச்சையைப் போல், பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெறுவதாகவும், காது கேளாதவர்களுக்கான படிப்பு இடங்கள்கூட விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன. அதோடு, சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கென இடங்கள் ஒதுக்கும் நடைமுறையே இல்லை என்றும் பேராசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடாச்சலம், அரசுக் கல்லூரி முதல்வர்கள் ஆகியோர் கூறியது: கலை, அறிவியல் படிப்புகளிலும் ஒற்றைச் சாளர முறை பொதுக் கலந்தாய்வு சேர்க்கை என்பது சாத்தியமே. ஆனால், ஏழை மாணவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல நேரிட்டால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவார்கள் என்பதால், மாவட்ட அளவிலான பொதுக் கலந்தாய்வு நடத்துவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி இடங்கள் மட்டுமன்றி சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட இடங்களைச் சேர்த்து ஒரே இடத்தில் சேர்க்கை நடத்துவதன் மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்பதோடு, அரசியல் தலையீடுகளையும் களைய முடியும் என்றனர். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் கூறியது: அதிக இடங்களைக் கொண்ட பி.இ. படிப்புகளுக்கு மட்டுமன்றி, குறைந்த இடங்களைக் கொண்ட எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்குக்கூட ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை நடத்தப்படுகிறது. எனவே, கலை- அறிவியல் படிப்புகளிலும் ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை நடத்த முடியும். அதை மண்டல அளவிலோ அல்லது மாவட்ட அளவிலோ நடத்துவதுகூட சாத்தியம்தான் என்றனர்.

No comments:

Post a Comment