மழைக்கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவ - மாணவியருக்கு தகுந்த ஆலோசனை வழங்குமாறு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளி வளாகத்தில் நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறு இருந்தால், உடனடியாக மூட வேண்டும். நீர்த்தேக்க தொட்டி, கழிவுநீர் தொட்டி மூடிய நிலையில் உள்ளதா என்பதை, உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இடி, மின்னலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, மழை பெய்யும் நேரங்களில் மரங்கள் மற்றும் பழுதடைந்த வீடுகள், கட்டடங்கள் அருகே நிற்கக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மழை பெய்த நாட்களில், பழுதடைந்த மின்கம்பங்கள் அருகில் செல்லக்கூடாது; அறுந்து கிடக்கும் மின்கம்பியை தொடுவதோ, மிதிக்கவோ கூடாது என எச்சரிக்க வேண்டும். மழைநீர் கால்வாய் பகுதிகளை, கவனமாக கடந்து செல்ல வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள மின்சார இணைப்பு, மின்சாதனங்கள் உள்ள பகுதிகள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்; மின்சாதனங்களை இயக்க மாணவர்களை அனுமதிக்கக் கூடாது. அறிவியல் ஆய்வகங்கள், கணினி அறைகள், வகுப்பறை சுவர் பகுதிகளில் அறுந்த நிலையில், துண்டித்த நிலையில், மின்சார ஒயர்கள் இருக்கக் கூடாது. சிதிலமடைந்த பள்ளி கட்டடம், வகுப்பறை, கழிப்பிடம், சுற்றுச்சுவர், பள்ளி நுழைவாயில் இருந்தால், உடனடியாக புதுப்பிக்க வேண்டும். வகுப்பு முடிந்ததும், மாணவ - மாணவியர் தங்களது வீடுகளுக்கு செல்ல வேண்டும்.
குளம், குட்டை, ஆறு மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது என எச்சரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள், பாதுகாப்பற்ற புதர்களை அகற்ற வேண்டும். மருந்து பொருட்களுடன் முதலுதவி பெட்டி, மற்றும் தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழைக்கால முன்னெச்சரிக்கை குறித்து பள்ளியில் நடக்கும், பிரார்த்தனை கூட்டம் மற்றும் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment