அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அவர் சனிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், புத்தகப் பை, சீருடை, வண்ண பென்சில்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, போதிய ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. தேவையின் அடிப்படையில் ஆங்கில வழி இணைப் பிரிவுகளைத் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்கவும் வேண்டியது தலைமையாசிரியர்களின் கடமை ஆகும். பள்ளி மாணவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும். சேரும் மாணவர்கள் தரமான கல்வியைப் பெற்று முன்னேறும் நிலையை உறுதி செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கூட்டங்களை நடத்த வேண்டும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுடன் ஒருங்கிணைந்து தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களின் பட்டியலைப் பெற்று அவர்களை தங்களது பள்ளியில் சேர்க்க முனைப்புடன் செயல்பட வேண்டும்.
அதேபோன்று, நடுநிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் தங்களது பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடப் புத்தகங்கள்.... பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு ஏற்கெனவே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான புத்தகங்களை பள்ளி திறக்கும் ஜூன் 1-ஆம் தேதியே வழங்க வேண்டும். இதற்காக புத்தகங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறப்பு மையங்களிலிருந்து பெற்று பள்ளிகளில் விநியோகிக்க வேண்டும். ஆன்-லைனில் வேலைவாய்ப்புக்குப் பதிவு: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி, மதிப்பெண் சான்றிதழ்கள் பெறப்பட்டதும், வேலைவாய்ப்புக்காக மாணவர்களின் கல்வித் தகுதியை பள்ளிகளின் மூலம் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment