பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு : ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை மற்றும் தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் சுமார் 1.50 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்தவும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும், மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பயிற்சியில் எடுத்து கூறப்படுகிறது. இருப்பினும் வகுப்பில் பாடம் நடத்தும் போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தண்டனை வழங்குவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்க கூடாது, திட்டக்கூடாது, மனம் புண்படும்படி எதுவும் சொல்லக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இது தவிர மாணவர்கள் பள்ளிக்கு வரும் போதும், தேர்வு எழுதும் போதும் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்பட்டது. அதே போல் ஆசிரியர்களுக்கும் செல்போன் பயன்படுத்துவது தொடர்பான தடை 3 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த உத்தரவை ஆசிரியர்கள் சரியாக பின்பற்றுவதில்லை. இதனால் பள்ளிகளில் விரும்பத்தகாத சம்பவங்கள் மற்றும் ஆசிரியைகளை செல்போனில் படம் பிடித்ததாக குற்றச்சாட்டுகள் எழுத் தொடங்கின.
மேலும் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை விட்டு விட்டு செல்போனில் பேசிக் கொண்டிருப்பது தொடர்கி றது. வகுப்பில் பாடம் நடத்தும் போது செல்போன் அழைப்பு வருவதால், பாடம் நடத்துவது தடை படுகிறது. நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தனியார் பள்ளி ஆசிரியர்கள் கேள்வித் தாளை செல்போனில் படம் பிடித்து அனுப்பினர். இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதால் ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளி நேரத்திலோ, பள்ளி வளாகத்திலோ செல்போன் பயன்படுத்த கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை தடை கொண்டு வந்துள்ளது. ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த பிறகு ஆசிரியர்கள் கட்டாயம் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment