கடந்த, 2011ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கு, இந்த ஆண்டு கூடுதலாக, ஒரு வாய்ப்பு வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., நடத்திய, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூலையில், ஏராளமான மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வின் இரண்டாம் தாளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சிவில் சர்வீசஸ் இரண்டாம் தாளில், ஆங்கில மொழிப்பிரிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கான மதிப்பெண், தகுதி மதிப்பெண்ணில் சேர்க்கப்படாது. இந்த மாற்றம், 2014ம் ஆண்டின், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் இருந்து அமலுக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டது. அத்துடன், 2011ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் ஒரு முறை தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும், மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், பார்லிமென்டில் அறிவித்தார்.
கடந்த, 2011ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு எழுத, 4.72 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 2.43 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அவர்களுக்கு, இந்த ஆண்டு மீண்டும் ஒரு முறை தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வில், 2011ம் ஆண்டில் தான் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கு முன், முதல்நிலை தேர்வு முதல் தாளில், பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. இரண்டாள் தாள், விருப்ப பாடத்திற்குரியதாக இருந்தது. கடந்த ஆண்டு, யு.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிக்கையின் படி, பொதுப்பிரிவு மாணவர்கள், சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வை ஆறு முறை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, பணியாளர் நலத்துறை உயர் அதிகாரி கூறினார்.
No comments:
Post a Comment