தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியாகும். மே மாதம் கலந்தாய்வுக்கான கால அட்டவணை வகுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.
இதனால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கலந்தாய்வு முன்கூட்டியே நடைபெற்றால் ஆசிரியர்கள் இடம் மாறி செல்கின்ற பகுதிகளில் கல்வியாண்டு தொடக்கத்திலேயே ஒரே பள்ளியில் பணிபுரிவதுடன் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் இதுவரை விண்ணப்ப விநியோகமே நடைபெறாததுடன் காலி பணியிடங்களை மறைத்து பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திவிட்டு மறைமுகமாக இதர ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் கல்வித்துறையால் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டும் இதுபோன்று ஆசிரியர் பணி நியமனங்கள் அதிக அளவு நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக ஆசிரியர் இயக்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு தொடர்பான பணிகளை உடனே தொடங்க வேண்டும். இடமாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பம் பெற வேண்டும். ஒளிவு மறைவற்ற முறையில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் பணி ஒட்டுமொத்த காலி இடங்கள், விபரங்களை கல்வித்துறை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மாவட்ட வாரியாக, பாட வாரியாக இணையதளத்திலும் காலியிட விபரங்களை வெளியிட வேண்டும்’ என்றார்.
No comments:
Post a Comment