'தேர்தல் பயிற்சிக்கு வரும்படி, ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ்., வந்தாலே, அவர்களை அனுப்ப வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள். அவர்களில் சிலர், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்கின்றனர். அவர்களுக்கு, தேர்தல் பணி பயிற்சி வகுப்பிற்கு வரும்படி, தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது.
ஆனால், விடைத்தாள் திருத்தும் மைய பொறுப்பாளர்கள், 'எழுத்து பூர்வமாக, கடிதம் வந்தால் மட்டும் அனுப்புவோம்; பணிக்கு வராவிட்டால், 'மெமோ' கொடுப்போம்' என, கூறுகின்றனர். 'தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வராவிட்டால், நடவடிக்கை எடுப்போம்' என, தேர்தல் அலுவலர்கள் கூறுகின்றனர். இதனால், ஆசிரியர்கள் செய்வதறியாமல் தவித்தனர். இதுகுறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறும் போது,''எழுத்து பூர்வமான கடிதம் அனுப்ப தாமதமாகும் என்பதால் தான், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது. எஸ்.எம்.எஸ்., வந்தவர்கள், தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வர வேண்டும். எஸ்.எம்.எஸ்., தகவலை ஆதாரமாக எடுத்துக் கொண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என, பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயிற்சி முழு நாள் நடைபெறுவதாக இருந்தால், மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment