பிளஸ் 2 கணிதப் பாடத்தில் எழுத்துப் பிழையுடன் இருந்த 2 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க முயன்ற மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மதிப்பெண் வினாவில் 4, 16-ஆவது கேள்விகள் எழுத்துப் பிழையுடன் அச்சாகியிருந்தன. 16-வது கேள்வியில் குவியங்களுக்கு இடையே என்பதற்குப் பதிலாக குவியல்களுக்கு இடையே என பிழையுடன் இருந்தது. இந்த இரண்டு வினாக்களுக்கும் மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 16-வது கேள்வி ஆங்கிலத்தில் சரியாக இருந்ததால், ஆங்கில வழி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படாது.
பிளஸ் 2 முக்கியப் பாட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் புதன்கிழமை (ஏப்ரல் 2) முதல் தொடங்க உள்ளன. இதையடுத்து, விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கணிதப் பாடத்தில் 47-வது கேள்வியில் 6 மதிப்பெண் வினாவும் எழுத்துப் பிழையுடன் அச்சாகியிருந்தது. எனவே, இந்த வினாவுக்கு விடையளிக்க முயற்சி செய்தவர்களுக்கு மதிப்பெண் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படாது என்றும், குறிப்பிட்ட அந்த வினாவுக்கு விடையளிக்க முயன்ற மாணவர்களுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment