தமிழகத்தில், இன்று மாலை, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், வரும், 24ம் தேதி, ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில், மார்ச், 29ம் தேதி, மனு தாக்கல் துவங்கியது. கடந்த, 5ம் தேதி நிறைவு பெற்றது. 1,134 ஆண்கள், 121 பெண்கள், ஒரு திருநங்கை என, மொத்தம் 1,256 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள், நேற்றுமுன்தினம் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது, 291 ஆண்கள், 57 பெண்கள் என, மொத்தம், 348 மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள, 908 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆலந்தூர் சட்டசபை தொகுதியில், மூன்று பெண்கள் உட்பட, 19 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களில், ஒரு பெண் உட்பட, ஐந்து பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர், இன்று மாலை, 3:00 மணிக்குள், வாபஸ் பெற வேண்டும். அதன்பின், அங்கீகாரம் இல்லாத, பதிவு பெற்ற கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு, சின்னம் ஒதுக்கப்படும்.
ஒரே சின்னத்திற்கு, இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டால், குலுக்கல் முறையில், சின்னம் ஒதுக்கப்படும். இப்பணி முடிந்த பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment