பிளஸ் 2 முடிக்காமல் நுழைவுத் தேர்வு (Preparative Exam) எழுதி எம்.ஏ. பட்டம் பயின்றவர்களை அரசுப் பணியில் அமர்த்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் நுழைவுத் தேர்வு எழுதாமல் பட்டம் பெற்றவர்களை நிராகரித்தது சரிதான் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2008-ஆம் ஆண்டு குரூப் 2 வுக்கான அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தியது. அதில் பங்கேற்ற, பிளஸ் 2 படிக்காமல் நேரடியாக முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் பிளஸ் 2 முடிக்காமல் நுழைவுத் தேர்வு எழுதி முதுநிலைப் பட்டம் பெற்ற சிலரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
அவர்களை நிகராகரித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தங்களை அரசுப் பணியில் நியமனம் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரியும் பி.ராமன் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, பிளஸ் 2 முடிக்காமல், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2009-ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த ஒரு ஆணையில், பிளஸ் 2 முடிக்காமல் பட்டம் பெற்றது செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், பிளஸ் 2 முடிக்காமல் குரூப் 2 தேர்வு எழுதியவர்கள் நிராகரிக்கப்பட்டனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பிளஸ் 2 முடிக்காமல் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக முதுநிலைப் பட்டம் பெற்று குரூப் 2 தேர்வு எழுதியவர்களை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிராகரித்தது சரிதான். ஆனால், அரசாணை அடிப்படையில் பட்டப்படிப்பு செல்லாது என்பதை முடிவு செய்ய முடியாது. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின் அடிப்படையில்தான் பட்டப்படிப்பு செல்லுமா செல்லாதா என்பதை முடிவு செய்ய வேண்டும். பிளஸ் 2 முடிக்காமல் நுழைவுத் தேர்வு எழுதி அதன் அடிப்படையில் பட்டப்படிப்பில் சேரலாம் என யுஜிசி விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நுழைவுத் தேர்வு எழுதி பட்டம் பெற்றது செல்லும். எனவே நுழைவுத் தேர்வு எழுதி அதன் மூலம் முதுநிலைப் பட்டம் பெற்று, குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்த வேண்டும். மேலும், மனுதாரர்களில் சிலர் நுழைவுத் தேர்வின் உண்மைச் சான்றிதழை சமர்ப்பிக்காமல், அதன் நகலை இணைத்துள்ளனர். அவ்வாறு நகல் இணைத்த மனுதாரர்கள் ஒரு மாதத்துக்குள் உண்மைச் சான்றிதழை தேர்வாணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் சான்றிதழைச் சரிபார்த்து அவர்களைப் பணியில் நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment