. தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள், மானிய விலையில் விற்கப்படுகின்றன. இவற்றை பொது மக்கள் வாங்குவதற்கும், அரசின் நல திட்டங்களை பெறுவதற்கும், ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக திகழ்கிறது. உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ரேஷன் கார்டு வழங்கும் பணியை செய்து வருகிறது. நடப்பில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 2011, டிசம்பருடன் முடிவடைந்து விட்டது. "போலி ரேஷன் கார்டை ஒழிக்க, "ஸ்மார்ட் கார்டு' திட்டம் செயல்படுத்தப்படும்' என, சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
ஆதார் அட்டை வழங்கும் பணி இன்னும் முடிவடையாததால், 'ஸ்மார்ட் கார்டு' வடிவில், ரேஷன் கார்டு வழங்கும் பணியை, அரசு, இதுவரை துவக்கவில்லை. மேலும், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, காலம் அவகாசம் தேவைப்படுவதால், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில், உள்தாள் ஒட்டப்பட்டு, செல்லத்தக்க காலம், 2013, டிச., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதை மேலும், ஓராண்டுக்கு நீட்டிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது, ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. ஆதார் அட்டையில், ஐந்து வயதுக்கு கீழ் உள்ளவர்களின் விவரம் சேகரிக்கப்படுவதில்லை. "ஸ்மார்ட் கார்டு' வடிவிலான ரேஷன் கார்டில், அவர்கள் விவரம் சேர்க்க வேண்டியுள்ளது. ஆதார் அட்டை பணி முடிந்ததும், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி துவங்கும். ஏற்கனவே, உள் தாள் ஒட்டப்பட்ட போது, கடைசி பக்கத்தில், "2014ம் ஆண்டு' என, குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில், அரசாணை வெளியிடப்பட்டு, அதை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார். எத்தனை ரேஷன் கார்டுகள் உள்ளன? :
தற்போது, 1.84 கோடி அரிசி கார்டு; 10.50 லட்சம் சர்க்கரை கார்டு; 62 ஆயிரம் காவலர் கார்டு; 61 ஆயிரம், "என்' கார்டு (எந்த பொருளும் வாங்க விரும்பாதவர்) என, மொத்தம், 1.96 கோடி ரேஷன் கார்டுகள், தமிழகம் முழுவதும் புழக்கத்தில் உள்ளது.
No comments:
Post a Comment