கடந்த பொதுத்தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி கண்ட, 617 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வரும் பொதுத்தேர்வில், 80 சதவீதத்திற்கும் அதிகமாக, தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும்' என, பள்ளி கல்வித் துறை, "கெடு' விதித்துள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், சராசரியாக, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில், அதிகமான பள்ளிகள், 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியே பெறுகின்றன. கடந்த பொதுத்தேர்வில், 5,767 பள்ளிகளில், 329 பள்ளிகள், பத்தாம் வகுப்பில், 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியை பெற்றன.
2,595 மேல்நிலைப் பள்ளிகளில், 288 பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியை பெற்றன. இந்த, 617 பள்ளிகளின் தலைமை ஆசிரியர், வரும் பொதுத்தேர்வில், 80 சதவீதத்திற்கும் அதிகமாக, தேர்ச்சியை உயர்த்தி காட்ட வேண்டும் என, பள்ளி கல்வித் துறை, கெடு விதித்துள்ளது. இலக்கை எட்டுவதற்காக, தலைமை ஆசிரியர் முதல், பாட ஆசிரியர் வரை, அனைவருக்கும், பேராசிரியர்களைக் கொண்டு, சிறப்பு பயிற்சியை, கல்வித் துறை அளித்து வருகிறது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள பொறியியல் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் உதவியுடன், பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கபடுகின்றன.
இதில், அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்களும், ஈடுபடுகின்றனர். மாணவர்களுக்கு, பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் நடத்துவதுடன், முக்கிய பாடங்கள், திரும்ப திரும்ப, கேட்கப்படும் கேள்விகள், கேள்விகளுக்கு, விடை அளிக்கும் முறைகள் குறித்தும், விளக்கப்படுகின்றன. இவ்வளவிற்குப் பிறகும், தேர்ச்சி அதிகரிக்கவில்லை எனில், முதல்கட்டமாக, தலைமை ஆசிரியர், "பலிகடா' ஆக்கப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, சம்பந்தபட்ட பள்ளி தலைமை ஆசிரியர், வேறு பள்ளிகளுக்கு, மாற்றப்படுவர். இதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவாவது, கடுமையாக உழைப்பதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment