அரசு பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில், பாஸ் மார்க் மற்றும் அதிக மதிப்பெண் பெறும் வகையில், பாடம் நடத்துவது எப்படி என, ஆசிரியர்கள், 1,556 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓரளவுக்கு...:தமிழகத்தில், நான்கு ஆண்டுகளாக, பிளஸ் 2 தேர்வில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், மாநில, 'ரேங்க்' பெறவில்லை.
அதேநேரத்தில், 10ம் வகுப்பில், அரசு பள்ளி மாணவர்கள், மாநில அளவில், ஓரளவுக்கு முன்னிலை பெற்றனர். அதனால், பிளஸ் 2 தேர்விலும், அரசு பள்ளி மாணவர்கள், மாநிலத்தின் முதல் மூன்று இடங்களை பெறும் வகையில், முயற்சிகள் எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு, 'பயிற்சிக் கட்டகம்' என்ற புத்தகம் மூலம் பயிற்சி தரப்படுகிறது; இப்புத்தகத்தின் நகல்கள், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு முதற்கட்டமாக, ஒரு மாவட்டத்தில், ஒரு பாடத்துக்கு, மூன்று முதுநிலை ஆசிரியர்கள் வீதம், 32 மாவட்டங்களிலும், 11 பாடங்களுக்கு, 1,556 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான பயிற்சியை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் அளிக்க உள்ளனர். முதற்கட்டமாக, ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களுக்குபின், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இங்கு பயிற்சி பெறும் மூன்று ஆசிரியர்களும், தங்கள் ஒன்றியத்திலுள்ள மற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தருவர்.
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வரலாறு, வணிகவியல், கணிதப் பதிவியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர்களுக்கு, இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment