பொது இ-சேவை மையங்களில் ரூ. 30 கட்டணம் செலுத்தினால், பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழக செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் குமரகுருபரன் நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: இ-சேவை மையம் மூலம் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், பொது இ-சேவை மையங்களுக்கு சென்று, உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் விரல் கைரேகைகளை பதிவு செய்தால் 2 நிமிடங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படும்.
இதற்கு கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும். ஆதார் அட்டை இருந்து, அதை தவறவிட்டவர்களும் ஆதார் எண் மட்டும் தெரிந்திருந்தாலே பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற முடியும். இதற்காக விண்ணப்பம் எதுவும் நிரப்பி கொடுக்க தேவையில்லை. அதேபோன்று, ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையங்களுக்கு சென்று, ஒப்புகை சீட்டில் உள்ள பதிவு எண்ணை கூறி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறலாம். இதற்கு கட்டணமாக ரூ.40 செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் எந்த பகுதியை சார்ந்தவராக இருந்தாலும் ஏதாவது ஒரு பொது இ-சேவை மையத்தில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறலாம். அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பொது இ-சேவை மையம் மூலம் இதுவரை சுமார் 76 ஆயிரம் பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment