புதிய வாகனங்களில், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை, அக்டோபர், 1ம் தேதி முதல் கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், அந்த உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கைகளில், தமிழக அரசு இறங்கி உள்ளது.
'கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்து, மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியது. அதனால், 'பஸ், லாரி, வேன் உட்பட, பொது போக்குவரத்து வாகனங்களில்; இனி, உற்பத்தியின் போதே வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்; அக்., 1ம் தேதி முதல், இதை செயல்படுத்த வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி,
*அதிகபட்சம், 80 கி.மீ., வேகத்திற்கு மேல், வாகனம் செல்லாதபடி, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.
* பள்ளி வாகனம், காஸ், டீசல் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், அதிகபட்சமாக, 60 கி.மீ., வேகத்திற்குள் செல்லும் வகையில், வேகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
* போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
* தற்போது, இயக்கத்தில் உள்ள பொது போக்குவரத்து வாகனங்களிலும், அடுத்த ஆண்டு ஏப்ரல், 1ம் தேதிக்குள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும். எனவே, இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் பணியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய வாகனங்களில், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தி இருந்தால் மட்டுமே, அக்., 1ம் தேதி முதல், 'பெர்மிட்' வழங்குவோம்.
பள்ளி வாகனங்களில், ஏற்கனவே, வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளது. புதிதாக உற்பத்தி செய்யப்படும், 'ஆம்னி' பஸ்களிலும், இந்த கருவி பொருத்தப்படுகிறது. அரசு பஸ்கள், லாரி, வேன் உள்ளிட்ட பிற பொது போக்குவரத்து வாகனங்களில் மட்டுமே, இந்த கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment