சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர், முதல் துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.மணியனை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வியாழக்கிழமை நியமனம் செய்து உத்தரவிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, முறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்தப் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டது. அந்தக் குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகியாக ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஷிவ்தாஸ்மீனாவை கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி தமிழக அரசு நியமனம் செய்தது. அப்போதிருந்த துணைவேந்தர் எம்.ராமநாதன் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். பேரவையில் தீர்மானம்: பின்னர், தமிழக அரசு உயர் கல்வித் துறை மூலம் தமிழக சட்டப் பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர், பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
துணைவேந்தர் நியமனம்: இந்த நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தமிழக அரசு குழு ஒன்றை நியமித்தது. அந்தக் குழுவினர் மூவரை பரிந்துரை செய்து தமிழக ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக தாவரவியல் துறைப் பேராசிரியர் எஸ்.மணியனை துணைவேந்தராக நியமனம் செய்து தமிழக ஆளுநர் கே.ரோசய்யா உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய துணைவேந்தர் விரைவில் பொறுப்பேற்பார் என பல்கலைக்கழக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment