பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு வெள்ளிக்கிழமை (மே 8) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் மே 8 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு ரூ.550-ம், பிற பாடங்களுக்கு ரூ.275-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
மறுகூட்டலுக்கு மொழிப் பாடங்களுக்கு ரூ.305-ம், ஏனைய பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கான விண்ணப்பக் கட்டணத்தை பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவோ, மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவோ இயலும்.
சிறப்புத் துணைத்தேர்வுக்கு மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் மே 15 முதல் 20-ஆம் தேதி வரை தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி தங்களது பெயரைப் பதிவு செய்யலாம்.
சிறப்புத் துணைத் தேர்வுக்காக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். இதரக் கட்டணமாக ரூ.35-ம், பதிவுக் கட்டணமாக ரூ.50-ம் செலுத்த வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment