ஏதோ சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வந்தது போல, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் சொன்னவுடன் பெற்றோர்கள் பயத்துடன் மாணவர்களையும் பயமுறுத்தி, வாழ்க்கையே மதிப்பெண்கள்தான் என்பதுபோல மன அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும், வெற்றியோ,தோல்வியோ எதுவாக இருந்தாலும் வாழ்வின் வெற்றியை அது நிர்ணயிக்காது. தேர்வு முடிவுகள், தேர்வின் மதிப்பெண்கள் வாழ்வின் முதல்படிதான். அதுவே வாழ்வின் முடிவு அல்ல என்பதையும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்வதை விட்டு விட்டு, அவர்களும் மாணவர்களை குழப்புவது என்பது வாடிக்கையான ஒன்று தான்.
மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயம் செய்வதாக நினைத்தால் அதிக மதிப்பெண் பெற்றும் வாழ்வில் தோல்வி அடைந்தவர்களது நிலைக்கு எது காரணம்?. மதிப்பெண் குறைவாக இருந்தால் முட்டாள் என்றோ,அதிகம் என்றால் அறிவாளி என்றோ நினைப்பது பெரும் தவறாகும். இன்றைய உழைப்பு மட்டுமே மதிப்பெண்களை நிர்ணயிக்கிறது. கவனக்குறைவால் மதிப்பெண் இழப்பு ஏற்படுகிறது என்பதே
உண்மை. சில நேரங்களில் பெற்றோர் பேசுவதை மாணவர்கள் தவறாக எடுத்துக்கொண்டு அன்பை இழந்தும் ,மது,புகை ,போதைக்கு அடிமையாவதும்,வாழ்வின் அடுத்த கட்டத்தைத் தவற விடுவதும், சிலர் தற்கொலை செய்து கொள்வதும் காலம் காலமாக நடக்கும் அவலமாகவே உள்ளது.
தேர்வு முடிவுகள் வரும் காலங்களில் பெற்றோர் மத்தியில், "என் கௌரவமே போச்சு...உன் வாழ்க்கையை போச்சு, தெருவில் தலை காட்ட முடியல,எவ்வளவு பணம் கொட்டி உன்னை படிக்க வைத்தேன், நீயெல்லாம் இனி எப்படி உருப்படுவே, தண்டச் செலவு...!" என்ற புலம்பல்கள் அதிகம் கேட்கும்.
ஆனால் இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு பெரியவர்களான பெற்றோர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டியாக மாறி அவர்களின் மனதிற்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசவேண்டும். அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் உற்சாகத்தை வழங்கும் சக்தி பெற்றோர்களுக்கே உண்டு என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
ஆகவே பெற்றோர்களே மாணவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கும் விதமாகவும், அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பேசாமலும் அடுத்த நடக்க வேண்டிய காரியத்தை பார்ப்பது மாணவர்களின் எதிர்கால வாழ்விற்கு நல்லது.
படிப்பு வரவில்லை என்றாலும் தொழில் மூலம் சாதித்தவர்கள் மிக அதிகம். ஆரம்ப காலத்தில் குரல் வளம் சரி இல்லை என நிராகரிக்கப்பட்ட ஹிந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் குரலுக்கு இன்று பல கோடி ரூபாய் மதிப்புண்டு. செய்யும் தொழிலில் வித்தியாசம் காட்டி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து சம்பாதித்தவர்கள் அதிகம்.
உடலை வளைக்கும் உடற்பயிற்சியான யோகா மூலமும் சம்பாதித்தவர்கள் அதிகம். தமிழ் தானே என்று ஏளனமாக பார்த்தவர்கள் மத்தியில் தமிழுக்கும் தனி மரியாதை உண்டு என நிரூபித்து இலக்கியம்,கதை,பட்டி மன்றம், கட்டுரைகள் என பல வகையில் புகழ் பெற்றவர்கள் அதிகம்.
ஆகவே வாழ்வின் வெற்றிக்கு தேவை மதிப்பெண்ணை விட கடின உழைப்பும் , தனித்துவமும், உலக அனுபவமுமே என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இந்தத் தேர்வில் மதிப்பெண் குறைந்தாலும் உயர் கல்வியில் மதிப்பெண் பெற்று சாதிக்க முடியும். மாவட்ட ஆட்சியர் தேர்வுக்கு கூட ஏதாவது ஒரு பட்ட படிப்பும்,நுண்ணறிவும்,சமயோசித புத்தியுமே தேவை .
ஆகவே மாணவர்களை கஷ்டப்படுத்தாமல் அவரவர் ஆசைப்படி விரும்பிய பாடப்பிரிவை படிக்கவும், பெற்றோர்கள் வழிகாட்டியாக இருக்கவும் வேண்டியது மாணவர்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும்.
எஸ் .அசோக்
No comments:
Post a Comment