பொறியியல் படிப்புகளில் சேரப்போகும் மாணவர்களின் வசதிக்காக பி.இ. கலந்தாய்வு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் அவற்றை எங்கே பெறுவது என்பன குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் பிளஸ் 2 தேர்வு நுழைவுச் சீட்டு ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 2015 மார்ச் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்தாய்வின்போது அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இருந்தபோதும் விண்ணப்பத்துடன் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைச் சமர்பித்தால் போதுமானது.
எலெக்ட்ரானிக் இருப்பிடச் சான்று: 8-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகியவற்றில் ஏதாவது ஒரு படிப்பையோ அல்லது இந்தப் படிப்புகள் அனைத்தையும் தமிழகத்தில் படிக்காத தமிழகத்தைச் சொந்த மாநிலமாகக் கொண்ட மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழையோ விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியது கட்டாயம். இந்தச் சான்றிதழை அந்தந்தப் பகுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பொதுச்சேவை மையங்களில் பெற வேண்டும். அதுவும் டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய எலெக்ட்ரானிக் இருப்பிடச் சான்றிதழை (இ-சர்ட்டிபிகேட்) மட்டுமே இம்முறை சமர்ப்பிக்க வேண்டும்.
முதல் தலைமுறை மாணவர் சான்று: குடும்பத்தில் வேறு யாரும் பட்டப் படிப்பு படிக்காத நிலையில், பொறியியல் படிப்பில் சேரப்போகும் மாணவருக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மட்டுமல்லாமல் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேரப்போகும் மாணவர்களும் இந்தச் சலுகையைப் பெற முடியும். இந்தச் சலுகையைப் பெற விரும்பும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள், அதற்கான சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பொதுச்சேவை மையங்களில் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இதுவும் டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய எலெக்ட்ரானிக் சான்றிதழாக (இ-சர்ட்டிபிகேட்) இருக்க வேண்டும் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
இடஒதுக்கீடு சிறப்பு சலுகைகள்: இதர படிப்புகளைப் போன்று பொறியியல் படிப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத சிறப்பு இடஒதுக்கீடும், விளையாட்டு வீரர்களுக்கு 500 இடங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படுகின்றன. இதில் 12 இடங்கள் அண்ணா பல்கலைக்கழக துறைகளில் ஒதுக்கப்படும். இதுதவிர, ராணுவத்தினரின் வாரிசுகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள், கை அல்லது கால் ஊனமுற்றவர்கள், காது கேளாதவர்கள், பார்வை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவர்கள் அது சார்ந்த சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இவர்களுக்கான சான்றிதழ் படிவங்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment