தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு பதிவேடுகள், பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு மாற்றப்பட உள்ளன. கடந்த, 2003க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர், அரசு ஊழியர்களின், அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில், 10 சதவீதம், பங்களிப்பு ஓய்வூதியமாக, மாத சம்பளத்தில், பிடித்தம் செய்யப்படுகிறது. பள்ளி கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்குகள், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, பொது கணக்கு தணிக்கை அலுவலகத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கு, நிலுவை தொகை விவரம் குறித்த பட்டியல் தரப்படுகிறது.
ஆனால், தொடக்க கல்வித்துறையில் பணி புரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் கணக்கு விவரம், சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, 'டேட்டா சென்டரில்' பராமரிக்கப்படுகிறது. உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்து, கருவூலத்தில் செலுத்துகின்றனர். உள்ளூர் தணிக்கை அலுவலர்கள் தணிக்கை செய்த பின், அதன் விவரம், டேட்டா சென்டருக்கு அனுப்பப்படும். பின், விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு, கணக்கு பட்டியல் தர வேண்டும்.ஆனால், உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில், உள்ளூர் தணிக்கை, முழுமையாக நடக்கவில்லை.
இதனால், இந்த துறை ஆசிரியர்களுக்கு, இதுவரை எவ்வளவு பணம் பிடிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியாமல், அல்லாடி வருகின்றனர். மேலும், இறந்த ஆசிரியர், ஊழியர்களுக்கு கூட, பிடித்தம் செய்த தொகை வழங்கவில்லை என்ற புகாரும் இருக்கிறது. இந்த பிரச்னையை தீர்க்கும் வகையில், டேட்டா சென்டரில் உள்ள கணக்குகள் அனைத்தையும், பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு மாற்ற, தமிழக அரசுக்கு, தொடக்க கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. அரசாணை வெளியானதும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், ஊழியர்களின் கணக்குகள், மாறுதல் செய்யப்படும் என, தெரிகிறது. இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுசெயலர்,
பேட்ரிக் கூறியதாவது:கடந்த, 2003க்குப் பின், கல்வித்துறையில், ஒரு லட்சம் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களின் பணம், கோடிக்கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம், ஆசிரியர்களுக்கே தெரியாது. பல ஆசிரியர்கள் இறந்துவிட்டனர். அவர்களுக்குரிய பணம், இதுவரை சென்று சேரவில்லை. உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில், முறையாக கணக்கு பராமரிக்கப்படுவதில்லை. உள்ளூர் தணிக்கையும் நடப்பதில்லை. பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு, கணக்குகளை மாற்றினால், பிரச்னை தீரும் என நம்புகிறோம். இவ்வாறு, பேட்ரிக் தெரிவித்தார்.
No comments:
Post a Comment