பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணைக்கு தமிழ்நாடு கணித ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்தது. நிகழாண்டு, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த அட்டவணையின்படி, செப்டம்பர் 18-ஆம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாளும், 19-ஆம் தேதி கணிதத் தேர்வும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணிதத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், அட்டவணையில் விடுமுறை அளிக்கப்படாததற்கு தமிழ்நாடு கணித ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.விஜயகுமார் கூறியது: பிளஸ் 2 பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு செயல்முறைத் தேர்வின் மூலம் 50 சதவீதம் மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. ஆனால், கணிதப் பாடத்துக்கு 200 மதிப்பெண்களுக்கும் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டியுள்ளது. மேலும், பொதுத் தேர்வில் கணிதப் பாடத்தில் தோல்வியடையும் மாணவர்களே அதிகம். பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுக்கு 50 சதவீதப் பாடம் எடுத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், காலாண்டுத் தேர்வில் ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு எழுதிய அடுத்த நாளே கணிதத் தேர்வை மாணவர்கள் எழுதும்பட்சத்தில் பல மாணவர்கள் கணிதத்தில் தோல்வியடைய நேரிடலாம்.
இது அவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு, பொதுத் தேர்வு வரை தொடரவும் வழிவகுக்கக்கூடும். எனவே, மாணவர்களின் நலன் கருதி ஆங்கிலம் இரண்டாம் தாள் முடிந்து குறைந்தபட்சம் ஒருநாள் விடுமுறை விட்டு கணிதப் பாடத்துக்கான தேர்வு நடத்த வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment