அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பொறியியல் கலந்தாய்வு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) நிலுவையில் உள்ள பொறியியல் கல்லூரி விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஒரு வாரம் கால அவகாசத்தை அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த 26-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து கடந்த 27-ஆம் தேதி தொடங்கியிருந்த பொதுப் பிரிவு கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்தி வைத்தது.
இதனால் கடும் பாதிப்புக்கு ஆளான, மாணவர்களும் பெற்றோரும், கலந்தாய்வு மறு தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், நிலுவையில் உள்ள கல்லூரி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணி திங்கள்கிழமை (ஜூன் 30) முடிக்கப்பட்டு விடும் என்றும், அதன் பிறகு பொதுப் பிரிவு கலந்தாய்வு மறு தேதியை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இரு தினங்களுக்கு முன்பு ஏஐசிடிஇ அனுமதி அளித்தது. இதனடிப்படையில், கலந்தாய்வு மறு தேதியை இறுதி செய்வதற்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் திங்கள்கிழமை கூட்டுகிறது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் கூறியது:
கலந்தாய்வு மறு தேதியை நிர்ணயம் செய்ய பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கூட்டப்பட உள்ளது. பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஏற்கெனவே கலந்தாய்வு தொடங்குவதற்கான மூன்று தேதிகள் தெரிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இதில் ஏதாவது ஒரு தேதி இறுதி செய்யப்பட்டு உடனடியாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
No comments:
Post a Comment