பி.இ., கலந்தாய்வு தேதியை, நாளை அல்லது நாளை மறுநாள், அண்ணா பல்கலை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 27ம் தேதி துவங்க வேண்டிய பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு, உச்சநீதிமன்றம் உத்தரவு காரணமாக, கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது. ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு), தன்னிடம் நிலுவையில் உள்ள புதிய பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுத்ததும், அதன்பின், இணைப்பு அங்கீகாரம் வழங்க வேண்டிய பணியை, அண்ணா பல்கலை செய்யும். ஏ.ஐ.சி.டி.இ., நாளைக்குள், நிலுவை விண்ணப்பங்கள் மீது முடிவை எடுத்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது
. எனவே, அதற்கடுத்த ஓரிரு நாளில், தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்க, அண்ணா பல்கலை நடவடிக்கை எடுத்துவிடும்.எனவே, நாளை மாலைக்குள், ஏ.ஐ.சி.டி.இ., முடிவு தெரிந்துவிடும் என, அண்ணா பல்கலை எதிர்பார்க்கிறது. அதன்படி, நாளை, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு வந்ததும், கலந்தாய்வு துவங்கும் தேதியை, அண்ணா பல்கலை அறிவிக்கும். இழப்பு நாட்களை ஈடுகட்டும் வகையில், கலந்தாய்வு சுற்றுக்களை அதிகப்படுத்த, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப, ஏற்கனவே வெளியிட்ட கலந்தாய்வு அட்டவணையை மாற்றி, புதிய அட்டவணையை வெளியிடவும், பல்கலை திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment