இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, September 06, 2015

அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் 2 மடங்கு மாணவர்கள்!

மாணவர்களின் சராசரி எண்ணிக்கை, அரசு தொடக்கப் பள்ளிகளைவிட தனியார் நர்சரி, பிரைமரிப் பள்ளிகளில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 24,050 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 14 லட்சத்து 88 ஆயிரத்து 235 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளிக்கான சராசரி மாணவர்களின் எண்ணிக்கை 61.88 ஆகும். அதேநேரத்தில், மொத்தமுள்ள 6,202 நர்சரி, பிரைமரிப் பள்ளிகளில் 7 லட்சத்து 65 ஆயிரத்து 279 மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளில், ஒரு பள்ளிக்கான மாணவர்களின் சராசரி எண்ணிக்கை 123.39 ஆகும்.

உயர்நிலைப் பள்ளிகளிலும் அதிக வித்தியாசம்: தமிழகம் முழுவதும் உள்ள 3,046 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 6 லட்சத்து 53 ஆயிரத்து 631 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளிக்கான மாணவர்களின் சராசரி 214.58 ஆக உள்ளது. 1,955 தனியார் உயர்நிலைப் பள்ளிகளில் 8 லட்சத்து 40 ஆயிரத்து 835 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளியில் சராசரியாக 430 மாணவர்கள் படிக்கின்றனர். மேல்நிலைப் பள்ளிகளில் வித்தியாசம் குறைவு: இந்தப் புள்ளி விவரங்களின்படி, அரசு நடுநிலைப் பள்ளிகளில் சராசரி மாணவர் எண்ணிக்கை 172.8 ஆகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 759.89 ஆகவும் உள்ளது. தனியார் நடுநிலைப் பள்ளிகளில் சராசரி மாணவர் எண்ணிக்கை 198.64 ஆகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 1082.16 ஆகவும் உள்ளது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படைக் கல்வி புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1.31 கோடி மாணவர்கள்: இந்தப் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 57,208 பள்ளிகளில் 1 கோடியே 31 லட்சத்து 93 ஆயிரத்து 950 மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 743 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 37,141 அரசுப் பள்ளிகளில் 55 லட்சத்து 40 ஆயிரத்து 425 மாணவர்கள் படிக்கின்றனர். 8,409 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 29 லட்சத்து 98 ஆயிரத்து 255 மாணவர்களும், 11,658 தனியார் பள்ளிகளில் 46 லட்சத்து 55 ஆயிரத்து 270 மாணவர்களும் படிக்கின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகள்: அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைப் பொருத்த வரை 5,059 பள்ளிகளுக்கு 6 லட்சத்து 69 ஆயிரத்து 691 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளிக்கான மாணவர்களின் சராசரி எண்ணிக்கை 132.37 ஆக உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் இந்த எண்ணிக்கை 338.37 ஆகவும், உயர்நிலைப் பள்ளிகளில் 398.03 ஆகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 1,325.40 ஆகவும் உள்ளது.

ஆசிரியர்கள் விகிதமும் குறைவு தமிழகத்தில் மொத்தமுள்ள 24,050 அரசு தொடக்கப் பள்ளிகளில் 64,279 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதன்மூலம், ஒரு பள்ளிக்கு சராசரியாக 2 முதல் 3 ஆசிரியர்கள் வரை இருக்கும் நிலையே உள்ளது. அதேநேரம், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 9 ஆசிரியர்கள் உள்ளனர். 6,202 தனியார் பள்ளிகளில் 57,264 ஆசிரியர்கள் உள்ளனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த, கல்வியாளர்கள் ஒரு வகுப்புக்கு ஓர் ஆசிரியர் கோரிக்கையை நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க பள்ளிக் கல்வித் துறை மறுத்து வருகிறது. தொடக்கப் பள்ளிகளைப் பொருத்த வரை, ஆசிரியர்- மாணவர் விகிதம் 23:1 என்ற நிலையில் உள்ளது. ஆனால், பள்ளிகள் அளவில் பெரும்பாலான பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் மட்டுமே 5 வகுப்புகளையும் கவனிக்கும் நிலை உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக 7 ஆசிரியர்கள்: 7,213 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 53,145 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஒரு நடுநிலைப் பள்ளியில் சராசரியாக 7 முதல் 8 ஆசிரியர்கள் வரை பணிபுரிகின்றனர்.

உயர்நிலைப் பள்ளிகளில் 11 ஆசிரியர்களும், மேல்நிலைப் பள்ளிகளில் சராசரியாக 29 ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். தனியார் மேல்நிலைப் பள்ளிகளைப் பொருத்த வரை 2,664 பள்ளிகளுக்கு 1 லட்சத்து 15 ஆயிரத்து 833 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஒரு பள்ளிக்கு சராசரியாக 43 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தனியார் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக 14 ஆசிரியர்களும், தனியார் உயர்நிலைப் பள்ளிகளில் சராசரியாக 20 ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர்.

5,300 காலியிடங்களுக்கு விரைவில் தேர்வு டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அறிவிப்பு

அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 5,300 பணியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வுகள் அறிவிக்கப்படும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில், 213 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான, எழுத்துத்தேர்வு நடந்தது. சென்னையில், 28 மையங்கள் உட்பட, எட்டு மாவட்டங்களில், 91 மையங்களில், 27 ஆயிரத்து, 552 பேர் தேர்வு எழுதினர். சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் பார்வையிட்டனர்.

பின், பாலசுப்ரமணியன் கூறியதாவது: உதவி பொறியாளர் தேர்வுக்கான, 'கீ ஆன்சர்' ஒரு வாரத்தில் வெளியிடப்படும்; இரு மாதங்களில் தேர்வு முடிவு வெளியாகும். வி.ஏ.ஓ., - 800; நேர்முகத்தேர்வு இல்லாத, 'குரூப் - 2 ஏ' பணியிடங்கள் - 1,700; 'குரூப் - 4' பணியிடங்கள் - 2,800 என, 5,300 காலியிடங்களுக்கு விரைவில் தேர்வு அறிவிக்கப்படும். சமீபத்தில், 4.78 லட்சம் பேர் எழுதிய, குரூப் - 2 தேர்வு முடிவு, இம்மாத இறுதியில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

பி.எப்ஃ காப்பீட்டு தொகை உயர்கிறது

��TNPTF MANI��

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கான காப்பீடு தொகையை 3 லட்சத்து ஆறாயிரம் ரூபாயில் இருந்து ஐந்தரை லட்சமாக உயர்த்த பிஎஃப் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான முடிவு வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள பிஎஃப் ஆணைய கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறகு பிஎஃப் அமைப்பின் அறக்கட்டளை உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் தர வேண்டும். இந்த ஒப்புதல் தரப்படும் பட்சத்தில் 6 கோடிக்கு மேற்பட்ட பிஎஃப் சந்தாதாரர்கள் பயன்பெறும் வாய்ப்பு ஏற்படும்.
தற்போதைய நிலையில் ஒரு ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து பிஎஃப் சந்தா தொகையை செலுத்தி வருபவர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்துக்கு காப்பீட்டு பலன் வழங்கப்படும்.
கடைசி 12 மாதங்களில் தொழிலாளி பெற்ற ஊதியத்தின் ஒரு மாத சராசரியின் 20 மடங்குத் தொகை காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும். இதன்படி அதிகபட்ச காப்பீட்டு தொகையாக 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பெற முடியும். இத்தொகையை 5 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

Saturday, September 05, 2015

பி.எட்., படிப்பிற்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு

இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ள, பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கான, முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. யோகா, 'ப்ளே ஸ்கூல்' மற்றும் பால்வாடி கல்விக்கு தனி பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.பி.எட்., - எம்.எட்., போன்ற கல்வியியல் பயிற்சி படிப்புகள், இதுவரை, ஓராண்டு பட்டப்படிப்பாக இருந்தன. இந்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்புகளாக மாற்றி, மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதை எதிர்த்து, தமிழகத்தில், சுயநிதி கல்லுாரிகள் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை, நவ., 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை, தமிழக அரசு துவங்கியுள்ளது. அத்துடன், முதலாம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தையும் வெளியிட்டுள்ளது. அதில், யோகா உட்பட, மூன்று கட்டாயப் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. மீதமுள்ள, 33 பாடங்களில், தமிழ், ஆங்கிலம், உயிரியல், அமைதி மற்றும் சுற்றுச்சூழல், கணிதம், கணினி அறிவியல், 'ப்ளே ஸ்கூல்' கல்வி போன்ற படிப்புகள் இடம் பெற்றுள்ளன.

கணினி அறிவியலில், புதிதாக, மூன்று செயலிகள் (ஆப்) கண்டுபிடிப்பது, செய்முறையில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்ஜி., பட்டதாரிகள் ஆர்வம்!தமிழகம் முழுவதும், 21 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்பில் சேர, விண்ணப்பம் வழங்கப்படுகிறது. பி.இ., படித்தவர்கள், 200 பேர் ஆர்வமாக விண்ணப்பம் வாங்கியுள்ளனர்.வரும், 10ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 11ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை கவுன்சிலிங், 28ம் தேதி நடக்க உள்ளது. பி.இ., - பி.டெக்., பட்டம் பெற்றவர்களும், பி.எட்., படிப்பில் சேரலாம் என, சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. -

Tnptf teachers day function 5-9-15

Friday, September 04, 2015

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் 2 லட்சம் மாணவர்கள்: தமிழக அரசு தகவல்

அரசுப் பள்ளிகளில் 11,992 பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் 2.60 லட்சம் மாணவர்கள் படிப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. அரசுப் பள்ளிகளில் கடந்த 2012-13-ஆம் கல்வியாண்டில் ஆங்கில வழிப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் 24,050 அரசுத் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. நர்சரிப் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்தது.

இதையடுத்து, அரசுத் தொடக்கப் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்க ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் 8,934 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 2.1 லட்சம் மாணவர்கள் ஆங்கில வழிப் பிரிவுகளில் படிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 3,058 பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தப் பள்ளிகளில் 53,668 மாணவர்கள் படிப்பதாக பள்ளிக் கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குளம்,கடலில் குளிக்க மாணவர்களுக்குத் தடை

'மாணவர்களை, நீர்நிலைகள் அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது; கடலில் குளிக்க விடக்கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக, அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பள்ளி வளாகங்களை, குப்பை, கூளங்கள், புதர்கள், தேவையற்ற செடிகள் இன்றி சுத்தமாக பாதுகாக்க வேண்டும். மாணவ, மாணவியரை, குளம், குட்டை மற்றும் நீர்நிலைகள் அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது; கடல் அருகில் இருந்தால், அங்கு குளிக்க விடக்கூடாது. பள்ளி வளாகத்தில் உயர்மின் அழுத்தக் கம்பி இருந்தால், அதை பத்திரமாக அகற்ற வேண்டும். பள்ளியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டி, கழிவுநீர்த் தொட்டி மற்றும் குடிநீர்த் தொட்டி போன்றவை மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், ஒவ்வொரு பள்ளியிலும், கண்டிப்பாக முதலுதவி பெட்டி இருக்க வேண்டும். இதுதவிர, மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான, மற்ற பல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது

Thursday, September 03, 2015

ஆண் குழந்தைகளுக்கான "பொன்மகன் பொது வைப்பு நிதித் திட்டம்': இன்று அறிமுகப்படுத்துகிறது அஞ்சல் துறை

இந்திய அஞ்சல் துறை சார்பில், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, ஆண் குழந்தைகளுக்கான -பொன்மகன் வைப்பு நிதி- திட்டம் வெள்ளிக்கிழமை முதல் அறிமுகம் செய்யப்படுவதாக, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்தார். இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் "செல்வமகள் சேமிப்புத் திட்டம்' பெரும் வரவேற்பைப் பெற்றது. இதை முன்னிட்டு, ஆண் குழந்தைகளிடமும் சேமிப்பு எண்ணத்தை அதிகரிக்கும் வகையில்,"பொன்மகன் வைப்பு நிதி' என்கிற திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இந்திய அஞ்சல் துறையால் அறிமுகம் செய்யப்படும் இந்தத் திட்டம் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுவரை, தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 10.6 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. செல்வமகள் சேமிப்புத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின்போது, ஆண் குழந்தைகளுக்கும் இதுபோன்ற திட்டத்தைத் தொடங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆகையால், இதைக் கருத்தில் கொண்டு குறைந்த, நடுத்தர வருமானமுள்ள குடும்பங்களில் சேமிப்புப் பழக்கத்தை உருவாக்கும் வகையில், "பொன்மகன் பொது வைப்பு நிதி' என்ற பொது வைப்பு நிதி திட்டம் தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் தொகைக்கு "80-சி' பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படும். பத்து வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் பாதுகாவலர் உதவியோடு, பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம்.

பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தாங்களாகவே கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், கணக்கு தொடங்குவதற்கு எந்தவிதமான வயது வரம்பும் கிடையாது. தற்போதைய நிதியாண்டில் இந்தக் கணக்குகளுக்கு 8.7 சதவீதம் வட்டி வழங்கப்படும். அதே நேரத்தில், இந்தக் கணக்கின் வாயிலாகக் கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கும் உண்டு. "பி' பிரிவில் வரும் அனைத்து அஞ்சல் நிலையங்களும், இந்தக் கணக்குக்கான முன் தொகையை ஏற்றுக் கொள்ளும். ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.100-ம், அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரையிலும், முன் பணமாகச் செலுத்தலாம். இதில் கடன் வசதி, செலுத்திய தொகையைத் திரும்பப்பெறும் வசதிகளும் உண்டு. அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பொன்மகன் பொது வைப்பு நிதித் திட்ட அறிமுக நிகழ்ச்சி நடைபெறும்.

திட்டம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சல் நிலையங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

இன்று எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்'

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. இதுகுறித்து, தேர்வுத்துறை வெளியிட்ட அறிப்பில், 'மே மாதம் நடந்த, எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படும். தேர்வு எழுதிய மையத்தில் மதிப்பெண் பட்டியலை பார்த்து கொள்ளலாம். சான்றிதழ் வழங்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.

புகாரில் சிக்கினால் இடமாறுதல் இல்லை:ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு நிபந்தனை

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் ஆசிரிய பயிற்றுனர்கள் மனமொத்த இடமாறுதலுக்கு பள்ளிக்கல்வித்துறை நிபந்தனை விதித்துள்ளது.அவை வருமாறு: புதிய பணியிடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கக்கூடாது. எந்தப்பாடப்பிரிவை சார்ந்தவரோ அதே பாடப்பிரிவைச் சேர்ந்தவரையே அவரது இடத்தில் பணியமர்த்த வேண்டும். எவ்வித புகாரும் இருக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலகங்களில் பெற்று செப்.,10க்குள் சமர்ப்பிக்க வேண்டும் செப்.,11,12ல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். மாவட்ட அளவிலான மனமொத்த மாறுதல் உத்தரவு செப்.,14, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான மாறுதல் உத்தரவு செப்.,15ல் வழங்கப்படும், என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Wednesday, September 02, 2015

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பி.எஸ்சி. படிப்புகள் அறிமுகம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பி.எஸ்சி. அறிவியல் பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 2016-17 கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையையும் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. தொலைநிலைக் கல்வி வாயிலாக விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் தொடர்பான இளநிலை பட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன என தமிழக அரசின் உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2015-16 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படிப்புகளைத் தொலைநிலைக் கல்வி முறையில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரகாந்தி ஜெயபாலன் தொலைபேசி மூலம் "தினமணி'க்கு அளித்த பேட்டி: தொலைநிலைக் கல்வி முறையில் பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் படிப்புகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தப் படிப்புகளை அறிமுகம் செய்வதற்கு பல்கலைக்கழகத்தின் கல்வி வாரியக் குழு, ஆட்சிமன்றக் குழு ஆகியவற்றின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. இந்த அறிவியல் படிப்புகளில் இடம்பெறும் செய்முறை பயிற்சிகளை மாணவர்கள் நேரடியாக மேற்கொள்ள வசதியாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட கல்லூரிகளில் ஏற்பாடு செய்து தரப்படும்.

செய்முறைத் தேர்வையும் அந்தக் கல்லூரியிலேயே மாணவர்கள் மேற்கொள்ளலாம். இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளைப் பல்கலைக்கழகம் அடுத்தகட்டமாக எடுக்க உள்ளது. எனவே, அறிவியல் பட்டப் படிப்புகளைத் தொலைநிலைக் கல்வி முறையில் அறிமுகம் செய்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. 2016-17 கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றார். இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கூறியது: அடிப்படை அறிவியல் படிப்புகளை ஏற்கெனவே சில கல்வி நிறுவனங்கள் தொலைநிலைக் கல்வி முறையில் வழங்குவதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

அவ்வாறு தொலைநிலைக் கல்வி மூலம் இந்தப் படிப்புகளை நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று. செய்முறை பயிற்சிகளை மாணவர்கள் முழுமையாகப் பெறுவது கடினம். இதற்கு யுஜிசி அனுமதி வழங்காது. இருந்தபோதும் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

'ஜாக்டோ' கூட்டமைப்பு அக்.8ல் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 8ல் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய 'ஜாக்டோ' கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.மத்திய அரசுக்கு இணையான ஊதியம், புதிய பென்ஷன் திட்டம் ரத்து, பணி பாதுகாப்பு, 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநியமன நாளில் இருந்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாக போராடி வந்தன.

இக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத தால் 27 ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து 'ஜாக்டோ' அமைப்பு உருவாக்கி, ஆக., 1 ல் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தன. இதில் எதிர் கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர். போராட்டம் நடத்தி ஒரு மாதத்திற்கு மேலாகியும் எவ்வித அரசு அறிவிப்பும் இல்லாததால் அக்., 8 ல் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய 'ஜாக்டோ' கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணதாஸ் கூறியதாவது: முதற்கட்டமாக அக்., 8 ல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். அரசு கண்டுகொள்ளாவிட்டால் பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்து வோம், என்றார்.

பி.எட்., படிக்க இன்று விண்ணப்பம்

பி.எட்., மாணவர் சேர்க்கை விண்ணப்பம், இன்று முதல், 10ம் தேதி வரை, 13 மையங்களில் கிடைக்கும் என, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் நிறுவனம் அறிவித்துள்ளது. வரும், 11ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான விவரங்கள் மற்றும் விதிமுறைகளை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.பி.இ., - பி.டெக்., படித்தோருக்கும், இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பில் சேர அனுமதி வழங்கப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய 1000 ரூபாய் நோட்டு

கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரூபாய் சின்னத்துடன் 'எல்' என்ற ஆங்கில எழுத்து இணைக்கப்பட்டும், எண்களின் அளவு சிறிய வடிவில் ஆரம்பித்து பெரிய எழுத்தில் முடிக்கும் யுக்தியும் இப்புதிய ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்படவுள்ளது

Tuesday, September 01, 2015

பத்தாம் வகுப்பு,பன்னிரண்டாம் வகுப்பு காலாண்டுத்தேர்வு அட்டவணை வெளியீடு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு அட்டவணை:

செப். 14 - தமிழ் முதல் தாள், 15ம் தேதி - தமிழ் 2ம் தாள், 16ம் தேதி - ஆங்கிலம் முதல்தாள், 18ம் தேதி - ஆங்கிலம் 2ம் தாள், 21ம் தேதி - கணிதம், 23ம் தேதி - அறிவியல், 25ம் தேதி - சமூக அறிவியல். பிளஸ் 2 அட்டவணை: செப். 10 - தமிழ் முதல்தாள், 11ம் தேதி - தமிழ் 2ம் தாள், 14ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள், 15ம் தேதி - ஆங்கிலம் 2ம் தாள், 16ம் தேதி - வணிகவியல், மனையியல், புவியியல் தேர்வு. செப் 18 - கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், சத்துணவு மற்றும் உணவு வகைப்பாடு, ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தைப் பராமரிப்பு, அரசியல் அறிவியல், நர்சிங், நர்சிங் (பொது), கணக்குப்பதிவியல் மற்றும் தணிக்கை தேர்வுகள்.

செப். 21 - இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராப்ட்ஸ்மேன் சிவில், எலக்ட்ரிக்கல் மெஷினிஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஆபீஸ் மேனேஜ்மென்ட். செப் 22 - தொடர்பு ஆங்கிலம், இந்திய நாகரிகம், கணினி அறிவியல், பயோவேதியியல், புள்ளியியல், பொதுத்தமிழ். செப். 23 - வேதியியல், கணக்குப்பதிவியல். 25ம் தேதி - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம். மாநிலம் முழுவதும் செப். 26 முதல் அக். 4 வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளிகல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

​ஒரே பதிவெண்; ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்: அமைச்சர் தகவல்

மேல்நிலை / இடைநிலை தேர்வெழுதும் தேர்வர்களுக்கு ஒவ்வொரு பருவ தேர்வின் போதும் தனித்தனி பதிவெண் வழங்கும் முறைக்கு பதிலாக ஒரு தேர்வருக்கு ஒரே பதிவெண் வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.

பள்ளி கல்வித்துறை மீதான மானிய கோரிக்கையின் போது பேசிய அவர், மாணவர்களுக்கான புதிய கற்றல் இணையதளம் அமைக்கப்படும் என்றார். மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

All india general strike demand s

இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தும் தொழிற்சங்கங்கள் முன் வைக்கும் கோரிக்கைகள்

#தொழிலாளர் நலச்சட்ட விதிகளை எந்தவித விதிவிலக்கும் இன்றி அமல்படுத்த வேண்டும்

#குறைந்தபட்ச மாத சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும்

#அமைப்பு சாரா தொழில்துறைக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும்

#மோட்டார் வாகனச் சட்டத்திலுள்ள பாதகமாக அம்சங்களை கைவிட வேண்டும்

#அரசுப் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது மற்றும் பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும்

#புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்

#விண்ணப்பித்த 45 நாட்களில் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்

#விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

பி.இ. முடித்தவர்கள் பி.எட். படிக்கலாமா? அமைச்சர் விளக்கம்

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே பொறியியல் முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேர அனுமதி வழங்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கூறினார். சட்டப் பேரவையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, இந்திய கம்யூனிஸ்ட் சட்டப் பேரவை உறுப்பினர் பொன்னுப்பாண்டி பேசுகையில், ""பி.எட். படிப்பை பொறியியல் முடித்தவர்களும் படிக்கலாம் என இம்முறை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படியானால், பி.இ. முடிப்பவர்கள் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் சேரமுடியுமா என்ற சந்தேகமும், குழப்பமும் ஏற்படுகிறது'' என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கூறியது: ஆசிரியர் கல்வியியல் (பி.எட், எம்.எட்.) படிப்புகளுக்கான புதிய வழிகாட்டுதலை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வகுத்து அளித்துள்ளது. அதன் அடிப்படையில், பொறியியல் படிப்பில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களைத் துணைப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் மட்டுமே பி.எட். படிப்பில் சேர அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நிகழாண்டு முதல்தான் நடைமுறைக்கு வர உள்ளது. அவ்வாறு அவர்கள் சேர்ந்து, படித்து முடிக்கின்றபோது பள்ளிகளில் பணிபுரிகின்ற வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.