பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்துவதற்காகவும், ஆங்கில பேச்சுத்திறன் விருப்பத்திற்காகவும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் விரும்புகின்றனர். அதனை குறைத்து அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கில் ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
இதற்காக கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் ஆங்கில ஆசிரியர்கள் மேற்கொள்ளவும், மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு பயிற்சி அளிக்கவும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்ட பட்டியலை தயாரித்து இருக்கிறது.
தொடக்க நிலை வகுப்புகளுக்கு 2-ம் பருவத்துக்கு 12 பாட வேளைகளும், 6 முதல் 9-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 30 பாட வேளைகளும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் கற்பிக்கப்பட உள்ளது.
1 முதல் 5-ம் வகுப்பு வரை வாரத்துக்கு 90 நிமிடத்துக்கான பாடவேளையிலும், 6 முதல் 9-ம் வகுப்பு வரை வாரத்துக்கு 45 நிமிடத்துக்கான பாடவேளையிலும் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி அளிக்கும் வகையில் கால அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும்.
கல்வி தொலைக்காட்சி வாயிலான காணொலி உதவியுடனும், ஆங்கில பேச்சுத்திறன் பட்டியலில் உள்ள செயல்பாடுகள் வாயிலாகவும் அனைத்து ஆசிரியர்களும் கற்பிக்கும் வகையில் தங்களை தயார் செய்து பாடப்பொருளை கற்பித்தல் வேண்டும். இந்த வகுப்புகள் இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment