8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அமலில் இருந்த மூன்று பருவக் கல்வி முறையை ரத்து செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 2012-ல் முப்பருவக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2012-13 ஆம் கல்வியாண்டில் இருந்தும் 9, 10-ம் வகுப்புகளுக்கு 2013-14 ஆம் கல்வியாண்டில் இருந்தும் முப்பருவக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு 2019- 20 ஆம் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. எனினும்,தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படாததால் பல்வேறு குழப்பங்கள் நிலவின.
இதற்கிடையே 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வித்துறை அண்மையில் அறிவித்தது. இதற்கிடையே 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ முறையில், ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாகப் பாட நூல்கள் வழங்கப்பட்டு வந்தன. நடப்புக் கல்வியாண்டு முதல் அவை ஒன்றிணைக்கப்பட்டு ஒரே பாட நூலாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தக் கல்வியாண்டிலேயே பொதுத்தேர்வு நடைபெறுவதால், அவர்களின் பாட நூல்களையும் ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், 2020- 21 ஆம் கல்வியாண்டு முதல் 8-ம் வகுப்புப் பாட நூல்களை ஒன்றாக இணைத்து, ஒரே பாடநூலாக வழங்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநருக்கு அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment