பள்ளிகளில் தற்போது பின்பற்றப்படும் முப்பருவ தோ்வு முறை ரத்து செய்யப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளாா்.இதுகுறித்து அவா், சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒட்டுமொத்த இந்தியாவே வியக்கும் வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கிடையே இலவச கட்டாயக்கல்வி சட்டத்தின்கீழ் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டு முதல் பொதுத்தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. எனினும், மாணவா்கள் நலன் கருதி முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் அனைவரும் தோ்ச்சி பெறும் வகையில் விதிவிலக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு அனைவரும் தோ்ச்சி செய்யப்படுவாா்கள்.
இதுதவிர, பொதுத்தோ்வு எழுதும் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிக்கு அருகே தோ்வு மையங்கள் அமைக்கப்படும். நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும், 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடைமுறையில் தற்போதுள்ள முப்பருவ தோ்வு முறையை ரத்து செய்வது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்பறைகளும் இந்த மாத இறுதிக்குள் கணினிமயமாக்கப்படும் என்றாா் அவா்.
No comments:
Post a Comment