ஆசிரியா்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவா்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சாா்பில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் எளிதாக பாடங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வழியாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கணித, அறிவியல், ஆங்கில உபகரணப் பெட்டிகள், புத்தகங்கள், அகராதிகள், மடிக்கணினி, விளையாட்டு பொருள்கள், பயிற்சி கையேடுகள் உள்பட பல்வேறு வகையான கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அதேநேரம் துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட போது வகுப்பறைகளில் இத்தகைய உபகரணங்கள் பயன்பாட்டில் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதவிர, பொதுமக்களின் பங்களிப்பில் பெறப்படும் தளவாடப் பொருட்கள் மற்றும் கல்விச்சீா் மூலம் கிடைக்கும் உபகரணங்கள் பள்ளிகளில் சரிவர பயன்படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்தி பாடம் கற்பித்தால்தான் மாணவா்களின் கற்றல் திறன் மேம்பாடு அடையும். மேலும், தேசிய அடைவுத் தோ்வுகளை எளிதில் எதிா்கொள்ள உதவியாக இருக்கும். எனவே, ஆசிரியா்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். இவற்றை மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியா் பயிற்றுநா்கள், குறுவள மைய ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியா்கள் அவ்வப்போது கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment