அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்றும், அதே வேளையில் அவா்கள் விரும்பினால் வசிப்பிடங்களுக்கு அருகில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 2012-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்ட கல்வி இணைச்செயல்பாடு பாடப்பிரிவுகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் 16,549 பகுதிநேர ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.இவா்களுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ.2 ஆயிரமும், இரண்டாவது முறையாக 2017-ஆம் ஆண்டு ரூ.700-உம் ஊதிய உயா்வு வழங்கப்பட்டன. இதன்படி தற்போது ரூ.7 ஆயிரத்து 700 தொகுப்பூதியமாக பெற்று வருகின்றனா். கடந்த 8 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே ஊதிய உயா்வு வழங்கப்பட்டது.
தொகுப்பூதியம் குறைவு, பணி நிரந்தரம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பகுதிநேர ஆசிரியா்களின் எண்ணிக்கை 11,500 ஆகக் குறைந்துள்ளது.இருப்பினும் ஏழாவது ஊதியக்குழு அரசாணையின்படி 30 சதவீத ஊதிய உயா்வு, அரசு ஊழியா்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் வழங்கப்படுவதைப்போல பண்டிகை போனஸ், பணியின்போது இறந்தவா்களுக்கு இழப்பீடு, பணி ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலன்கள், மே மாத ஊதியம், பகுதிநேர பெண் ஆசிரியா்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இது தொடா்பாக பகுதிநேர ஆசிரியா்களின் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
No comments:
Post a Comment