கடந்த 2009-ம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தைகளின் கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டம் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை ஃபெயில் செய்வதற்குத் தடை விதித்தது. தற்போது அந்தச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் கட்டாயம் பாஸ் செய்ய வேண்டும் என்கிற விதியை நீக்கியுள்ளது. மேலும், மாநிலங்கள் விருப்பப்பட்டால் கட்டாய பாஸ் விதியைத் தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம் வியாழக்கிழமை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எட்டாம் வகுப்பு வரை எந்தவொரு மாணவரையும் பள்ளி நிர்வாகம் ஃபெயில் செய்ய இயலாது.
தற்போது ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் மாணவர்கள் தோல்வியுற்றால் உரிய அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படலாம். அதிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால் மாணவர்களை ஃபெயில் செய்யலாம் எனச் சட்டத்திருத்தம் தெரிவிக்கிறது.
புதிய சட்டதிருத்தம் பற்றி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகையில், “கட்டாய பாஸ் என்பது நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கொண்டு வரப்பட்டது. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்தே கற்றுக்கொண்டுதானே வளர்ந்து வந்திருக்கிறது. திடீரென்று ஒரு குழந்தையால் எவ்வாறு கற்க முடியாமல் போகிறது. முறையாக கற்றுக்கொடுப்பதற்கான ஆசிரியர்கள் இருந்தார்களா, கற்றுக்கொள்வதற்கான சரிசமமான வாய்ப்புகள் இருந்துள்ளதா என்கிற எதையுமே ஆராயாமல் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர். அடிப்படை சிக்கல்கள் பலவும் ஆராயப்படாமலே இருக்கையில் மாணவர்கள் ஃபெயில் ஆக்குவது என்பது சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், குறிப்பாக பெண்கள் பள்ளி படிப்பைக் கைவிடுவதைத்தான் அதிகரிக்கும். கற்றல் குறைபாடுகளைக் கண்டறியாமல் குழந்தைகளின் மீது பழிபோட்டு ஃபெயில் செய்வது என்பது கல்வி மறுப்புதான். கல்வியைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாமல், குழந்தை எவ்வாறு கற்கிறது, குழந்தை கற்பதற்கான வாய்ப்புகள் சரியாக ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோமா என்பதைக்கூட அறியாமல் எடுக்கப்பட்ட முடிவு இது. இதற்கு பல மாநிலங்களும் ஆதரவு தெரிவித்திருக்கிறது என்றால் சரியான புரிதல் இல்லாமல்தான் செய்திருக்கின்றனர்” என்றார்.
மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த எம்.பி டி.ராஜா பேசுகையில், “கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய சலுகையாக இல்லாமல் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். கல்வி தனியார்மயமாகிவிட்ட சூழலில் அனைவருக்கும் சரியான வாய்ப்பு, பொதுவான, தரமான கல்விமுறை என்பது பொதுவானதாக இல்லை. அடிப்படையான விஷயங்களைப் பற்றி ஆய்வு செய்யாமல் கல்வி உரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது சரியாக இருக்காது. இதைப்பற்றி கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோருடன் விவாதிக்க வேண்டும். இப்போது அவசரப்பட வேண்டாம் எனக் கூறினேன். குழந்தைகள் ஃபெயில் ஆகிறார்கள் எனப் பொதுவாகக் கூறிவிடலாம் அவர்கள் மட்டுமா அதற்கு காரணம். அவர்களுக்குச் சரியான வசதிகள், படிப்பதற்கான சூழ்நிலைகள் உருவாக்கித் தரப்படாமல் இருக்கின்றன. அதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இதை அமல்படுத்துவதை மாநிலங்களின் கைகளில் விட்டுவிட்டதால் அவர்கள்தான் இதில் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.
No comments:
Post a Comment