பாலகிருஷ்ணா ரெட்டி ராஜிநாமா ஏற்பு: கூடுதல் பொறுப்பாக செங்கோட்டையனுக்கு விளையாட்டுத் துறை
பாலகிருஷ்ணா ரெட்டி வகித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக வகிப்பார் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
1998-ஆம் ஆண்டு விஷச் சாராயம் குடித்து 33 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது நடந்த சாலை மறியல் போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இதைத்தொடர்ந்து, தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதால், அதுவரை தண்டனையை நிறுத்திவைக்குமாறும் பாலகிருஷ்ணா ரெட்டி சார்பில் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, தண்டனையை நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டார்.
இதையடுத்து பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலர் மற்றும் அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர். அதன்பிறகு, பாலகிருஷ்ணா ரெட்டி முதல்வர் பழனிசாமி வாயிலாக அமைச்சர் பதவியின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்தார்.
இந்த ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் ஏற்றுக்கொண்டார். மேலும், முதல்வர் பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று பாலகிருஷ்ணா ரெட்டி வகித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment