எல்.கே.ஜி.- யு.கே.ஜி., துவங்கப்படும் அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான உத்தரவை வாங்குவதில்லை என, ஜாக்டோ-ஜியோ ஆசிரியர்கள் முடிவு செய்தனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகின்றன.
இதற்காக உபரி பெண் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணிநிரவல் செய்ய அரசு உத்தரவிட்டது.இதையடுத்து அந்தந்த ஒன்றியங்களில் இளையோராக இருக்கும் உபரி பெண் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பணிமாறுதல் உத்தரவு வழங்கும் பணி நடக்கிறது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அரசு கண்டுகொள்ளாததால், ' அங்கன்வாடி மையத்திற்கு மாற்றும் பணி உத்தரவை கையெழுத்திட்டு வாங்குவதில்லை,' என ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.
ஜாக்டோ-ஜியோ நிர்வாகி ஒருவர் கூறியதாவது: எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., குழந்தைகளுக்கு கற்பிக்க மாண்டிச்சோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். இப்பயிற்சி பெற்ற பல ஆயிரம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களை நியமிக்காமல் இடைநிலை ஆசிரியர்களை தகுதி இறக்கம் செய்து அங்கன்வாடி மையங்களில் நியமிப்பது கண்டிக்கத் தக்கது. இதனால் அங்கன்வாடிமையத்திற்கு மாற்றும் ஆணையை பெறுவதில்லை என முடிவு செய்தோம், என்றார்.
No comments:
Post a Comment