இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 17, 2018

விஜயதசமி: அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா?


ஆண்டுதோறும் நடைபெறும் விஜயதசமி மாணவச் சேர்க்கைகள் அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் அதிகரிக்கும் நிலையில், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் விஜயதசமி மாணவச் சேர்க்கை நடைபெறுமா? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் தினமான விஜயதசமி நாளன்று பெற்றோர் தங்களது குழந்தைகளை முதல்முதலில் பள்ளிகளுக்கு அனுப்புவது நம்பிக்கை. அன்றைய தினத்தில் இருந்து பள்ளிக்குச் சென்றால் எதிர்காலத்தில் மாணவர் கல்வியில் சிறந்தவராக விளங்குவார் என அனைவரது எண்ணம்.

இந்த ஆண்டு விஜயதசமி அக்டோபர் 18-ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும். இதற்காக பல தனியார் பள்ளிகள் புதிய புதிய அறிவிப்புகளை விளம்பரங்களாய் வெளியிட்டு பெற்றோர்களைக் கவர்ந்து தங்களது பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கின்றன. ஆனால் அரசுப் பள்ளிகளில் விஜயதசமி சேர்க்கை தனியார் பள்ளிகளைவிட குறைவாக இருப்பது ஏன்? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு காரணம் தற்போது பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர வயதை நிர்ணயிக்கும் தேதி 31.07. ஆகும். 31.7. அன்று 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் மட்டுமே 1-ஆம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு, இதைக் கண்டிப்பாக அமல்படுத்த கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) இணையதளத்தில் மாணவர்கள் விவரங்களைப் பதிவிடும்போது பிறந்த தேதி, சேர்க்கை தேதி ஆகியவற்றை கணக்கிட்டு 5 வயது பூர்த்தியாகி இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்கிறது. இல்லையெனில் இணையதளத்தில் ஏற்புகை மறுக்கப்படுகிறது. இந்நிலையில் 18.10.2018 அன்று விஜயதசமி தினத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்க்கைக்கு வருவோருக்கு 31.7-இல் 5 வயது பூர்த்தியாகி இருந்தால் மட்டுமே சேர்க்கைக்கு அனுமதி உண்டு. இதனால், 31.7-இல் 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் ஜூலை மாதத்திலேயே அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுவிடுவர். விஜயதசமி சேர்க்கைக்கு வரை பெற்றோர்கள் காத்திருப்பதில்லை. இதனாலேயே விஜயதசமி சேர்க்கைக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் விஜயதசமி சேர்க்கை அதிக அளவில் உள்ளது. தனியார் பள்ளிகளில் 31.7-இல் 3 வயது பூர்த்தியாகியிருந்தால், அக்குழந்தைகள் எல்.கே.ஜி. எனும் மழலையர் வகுப்புகளில் சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால் 31.7-க்குப் பிறகு 3 வயது நிறைவாகியிருக்கும் குழந்தைகள் எதிர்கால சேர்க்கையை உறுதி செய்யும் விதத்தில் பிரி-கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். ஆக தனியார் பள்ளிகளில் சேர்க்கைகள் 3 வயதிலேயே நிறைவடைகிறது.

எனவே, அங்கு விஜயதசமி சேர்க்கைக்கு ஆர்வம் காட்டப்படுகிறது. அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். தற்போது 31.7. என தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பதை 31.12. என மாற்றி நிர்ணயிக்கலாம். அதாவது 31.12-இல் 5 வயதை பூர்த்தியடைந்த மாணவர்களை விஜயதசமி சேர்க்கைகளில் அனுமதிக்கலாம். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை 6 மாதங்களில் இரு பருவப் பாடங்களைப் பயிலும் முதல் வகுப்பு மாணவர் தனது இரண்டாம் வகுப்பில் தொடர் படிப்பில் புரிந்துக் கொள்வது இயல்பானதுதான் என ஆசிரியர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். 31.12-இல் 5 வயது பூர்த்தியடையும் மாணவர்கள் 10 வகுப்பு செல்லும்போது, பதினான்கரை வயதை ஜூன் மாதத்தில் நெருங்குவர். 14.5 என்பது 15 என நிர்ணயிக்கப்படுகையில், அவர்களை 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதிக்கலாம் எனவும் ஆலோசனை கூறுகின்றனர்.

மருத்துவ உலகில் 6 மாத வளர்ச்சி ஒரு வருட வளர்ச்சிக்கு சமமாகத்தான் கருதப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதை தமிழக அரசின் கல்வித் துறையினர் பரிசீலனை செய்யலாம் என கல்வியாளர்கள் கருதுகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவச் சேர்க்கை மிகவும் குறைந்து வரும் நிலையில் அதை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு அரசும் விதிகளை தளர்த்தி சேர்க்கைக்கு உதவ வேண்டும். செப்டம்பர் இறுதியில் சேர்க்கைகள் முடிவு எனும் நிலையில் விஜயதசமி சேர்க்கைக்கு பிரத்யேகமாக அனுமதியை தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அலுவலர்கள் வழங்கலாம். எனவே இந்த ஆண்டு விஜயதசமி சேர்க்கைக்கு வயது வரம்பை 31.12. என தளர்த்தி உத்தரவிட்டு தலைமை ஆசிரியர்களுக்கு பிரத்யேக அனுமதி உத்தரவை வழங்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment