இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, August 31, 2018

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்


தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் இரண்டு மாதங்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும்.

மேலும், இந்தக் காலகட்டத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-

தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்படும். மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலின் நகல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு அளிக்கப்படும்.

சிறப்பு முகாம்கள்: தமிழகத்தில் ஆகஸ்ட் மாத நிலவரப்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.82 கோடியாகும். அதில், ஆண் வாக்காளர்கள் 2.88 கோடி. பெண் வாக்காளர்கள் 2.94 கோடி. மூன்றாம் பாலித்தனவர் 5,184.

இரண்டு மாதம் கால அவகாசம்: வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காலகட்டத்தில் செப்டம்பர் 9, 23, அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் வாக்குச் சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களிலேயே நடைபெறும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான படிவங்களை அங்கேயே பூர்த்தி செய்து அளிக்கலாம். பூர்த்தி செய்த படிவங்களையும் அங்கேயே அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு முகாம்கள் நடைபெறாத நாள்களில், அலுவலக வேலை நேரத்தில் வாக்குச் சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் படிவத்தை அளித்திடலாம்.

சான்றுகளாக அளிக்க வேண்டியவை: பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ரேஷன் அட்டை, வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, தொலைபேசி, சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அண்மைக்கால ரசீது, ஆதார் கடிதம் ஆகியவற்றை முகவரிச் சான்றாக அளிக்கலாம்.
வயது சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகல் அல்லது பள்ளிச் சான்றிதழின் நகலை வழங்கலாம். 25 வயதுக்கு கீழுள்ள வாக்காளர்கள் வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இணையதளத்திலும் வசதி: வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் துறையின் இணையதளத்திலும் (elections.tn.gov.in)  சனிக்கிழமை வெளியிடப்படும்.
வாக்காளர் பெயர் சேர்ப்புப் பணிகளை இணையதளத்திலும் மேற்கொள்ளலாம்.
மேலும், www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் ஆன்-லைன் வழியாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சோழிங்கநல்லூரும் துறைமுகமும்...
காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிக வாக்காளர்களும், சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட துறைமுகம் தொகுதியில் குறைவான எண்ணிக்கையிலும் வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:-வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்கள் செப்டம்பர் 8, 22 மற்றும் அக்டோபர் 6, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் கிராம சபை மற்றும் உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களில் படிக்கப்படும். பாகம் மற்றும் பிரிவு வாரியாக பெயர்கள் படிக்கப்படும் போது அவற்றைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில், 6.07 லட்சம் வாக்காளர்களுடன் மாநிலத்திலேயே அதிகளவு வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. அங்கு ஆண்கள் 3.05 லட்சம், பெண்கள் 3.02 லட்சம், மூன்றாம் பாலினத்தவர் 73 ஆகியோர் உள்ளனர். இதே போன்று, சென்னை துறைமுகம் தொகுதியில் 1.64 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண்கள் 86 ஆயிரமும், பெண்கள் 78 ஆயிரமும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 48 ஆக உள்ளனர் என்று சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

'நெட்' தகுதி தேர்வுக்கான ஆன்லைன் பதிவு துவக்கம்


கல்லுாரி ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் உதவி தொகைக்கான, 'நெட்' தகுதி தேர்வுக்கு, இன்று விண்ணப்ப பதிவு துவங்குகிறது.

முதுநிலை பட்டம் முடித்தோர், கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின் பல்கலை மானிய குழுவின் அங்கீகாரம் பெற்ற, 'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மத்திய அரசின், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றலாம். மாநில தேர்வில் தேர்ச்சி பெற்றால், அந்த மாநிலத்திற்குள் உள்ள கல்வி நிறுவனங்களில் மட்டும் பணியாற்றலாம்.

நடப்பு கல்வி ஆண்டுக்கான, நெட் தேர்வு, நேற்று அறிவிக்கப்பட்டது. தேர்வு, டிச., 9 முதல், 23 வரை நடக்கிறது. தேர்வில் பங்கேற்க, இன்று முதல், 30ம் தேதி வரை, ஆன்லைனில் பதிவு செய்யலாம். தேர்வு முடிவு, 2019 ஜன., 10ல் வெளியிடப்படுகிறது. இளநிலை ஆராய்ச்சி மாணவருக்கான கல்வி உதவி தொகை பெறுவதற்கும், இந்த தேர்வில் பங்கேற்கலாம். கணினி வழியில் நடக்கும் இந்த தேர்வுக்கு, இரண்டு தாள்களில் வினாத்தாள் வழங்கப்படும். முதல் தாளில், 100 மதிப்பெண்களுக்கு, 50 வினாக்கள் இருக்கும். அவற்றுக்கு, ஒரு மணி நேரம் அவகாசம் தரப்படும். இரண்டாம் தாளில், 200 மதிப்பெண்களுக்கு, 100 வினாக்கள் இருக்கும். அவற்றுக்கு, இரண்டு மணி நேரம் அவகாசம் தரப்படும். தேர்வு விபரங்களை,www.ntanet.nic.inமுகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

எமிஸ்' பதிவு பணிகள் 3 நாட்கள் நிறுத்தி வைப்பு ஆசிரியர்கள் நிம்மதி


பள்ளி மாணவர்களின் முழு விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் 'எமிஸ்' (கல்வி மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு) பணிகள் சர்வர் பிரச்னையால் 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.கல்வித்துறையில் மாணவர்களின் படிப்பு, பெற்றோர் விவரங்கள், ஆதார் எண் போன்றவற்றை 'எமிஸ் தமிழ்நாடு ஸ்கூல்' என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு யூசர் நேம், பாஸ்வேர்டு ஒதுக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களின் விவரங்களை ஆக., 31க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.அனைத்து மாவட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக இப்பணி ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதால் பகல் முழுவதும் 'எமிஸ்' இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு மாணவன் விபரத்தை பதிவேற்ற அரை மணி நேரம் ஆனது.

இரவிலும், அதிகாலையிலும் மட்டுமே இணையதளம் தடங்கலின்றி இயங்கியதால் ஆசிரியர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து பதிவேற்றம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால், 'திருடர்களே ஆசிரியர்கள் வீட்டு பக்கம் இரவு போகாதீங்க... எமிஸ் பணிக்காக இரவு முழுவதும் விழித்திருக்கின்றனர். மாட்டிக்கொள்வீர்,' என சமூக வலைத்தளங்களில் கிண்டல் மீம்ஸ்கள் கூட வெளியாகின. இணையதளத்தில் பதிவேற்றுவதில் பெரும் பிரச்னை எழுந்ததால் 'எமிஸ் பதிவேற்றத்தை ஆக.,31 முதல் செப்., 2 வரை மேற்கொள்ள வேண்டாம் எனவும், மறு அறிவிப்பு வந்த பின் பணியை தொடரலாம்,' எனவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் பதிவேற்ற பணி நடந்ததால் மாஸ்டர் சர்வர் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பான பராமரிப்பு பணிக்காக பதிவேற்றம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது,''என்றார்.

Thursday, August 30, 2018

மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகப்பை, காலணிகள் டிசம்பர் மாதத்திற்குள் வழங்க ஏற்பாடு


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், வண்ண பென்சில்கள், புத்தகப்பை, காலணி, சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட 14 பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதன்படி 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் 70 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பைகள் வழங்கப்படுகிறது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் 56 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு காலணிகளும் வழங்கப்படுகிறது.

ஏற்பாடு மும்முரம்

நடப்பு கல்வியாண்டில் புத்தகப்பைகள் மற்றும் காலணிகள் இதுவரை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே அவற்றை வழங்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதையொட்டி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் டி.ஜெகன்நாதன், செயலாளர் பழனிசாமி மற்றும் அதிகாரிகள் காலணி, புத்தகப்பைகளை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

முன்னதாக வருகிற அக்டோபர் மாதம் வண்ண பென்சில்கள் 1 மற்றும் 2-ம் வகுப்பு பயிலும் 9 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் ‘ஜாமெண்ட்ரி பாக்ஸ்’ 6, 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதேபோல் வண்ண பென்சில்கள் 3 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

பிளஸ் 2வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தனித்திறனுக்கு 40 மதிப்பெண்


தமிழக அரசால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. கற்றல் என்பது தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், வினவுதல், புதியன படைத்தல் என பல நிலைகளில் நடைபெறும் ஒரு செயல்.

எழுத்து தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டில் 'காமராஜர் விருது' வழங்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களை 'காமராஜர் விருதுக்கு' பரிசீலனைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.

கலை இலக்கிய திறன், விளையாட்டு போட்டி, அறிவியல் விருது, பள்ளி இணை செயல்பாடுகளில் பங்கேற்றவர்களை தேர்வு செய்து, நான்கு செயல்பாடுகளிலும் தலா 10 மதிப்பெண் வீதம் 40க்கு கணக்கிட்டு இதில் முன்னுரிமை பெற்றவர்களை விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும்.ஒரு பள்ளி சார்பில் அதிக பட்சம் 3 பேரை பரிந்துரைக்கலாம். மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பில் 20 பேர், பிளஸ் 2வில் 20 பேரை தேர்வு செய்து அதன் பட்டியலை முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ஆயிரம், பிளஸ் 2 மாணவருக்கு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் காமராஜர் விருது அளிக்கப்பட உள்ளது. ஒரு மாவட்டத்துக்கு தலா 15 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர், என கூறப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகத்தில் நாளை வெளியீடு


சட்டசபை தேர்தல் நடக்க உள்ள, நான்கு மாநிலங்களை தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும், திருத்தப் பணிக்காக, வரைவு வாக்காளர் பட்டியல், நாளை வெளியிடப்பட உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நாளை துவங்க உள்ளது.

இதற்காக, அனைத்து மாநிலங்களிலும், சட்டசபை தொகுதி வாரியாக, நாளை காலை, 10:00 மணிக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.வரைவு பட்டியலில், பெயர் விடுபட்டவர்களும், 2019 ஜன., 1ல், 18 வயதை பூர்த்தி செய்பவர்களும், பெயர் சேர்க்க, அக்., 31 வரை விண்ணப்பிக்கலாம். பெயர், முகவரி திருத்தம் மேற்கொள்ளவும், இடமாற்றம் மற்றும் பெயர் நீக்கவும், நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.சட்டசபை தேர்தல் நடக்க உள்ள, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்கள் தவிர, மற்ற மாநிலங்கள் அனைத்திலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டங்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்க கூட்டங்களில், வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் முகாம், செப்., 8, 22 மற்றும் அக்., 6, 13ம் தேதிகளில் நடைபெறும்.ஓட்டுச்சாவடிகளில், செப்., 9, 23 மற்றும் அக்., 7, 14ம் தேதிகளில், சிறப்பு முகாம் நடத்தப்படும்.

விண்ணப்பங்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி, நவ., 16ல் நிறைவடையும். விண்ணப்ப படிவங்கள் அனைத்தையும், கள ஆய்வு செய்யும் பணி, டிச., 1ல் நிறைவடையும்.'அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், 2019 ஜன., 4ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாகு, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, மாவட்ட கலெக்டர்களுடன், ஆலோசனை நடத்தினார். இன்று, சென்னை, தலைமை செயலகத்தில், காலை, 11:00 மணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் நடக்கிறது.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாகு கூறியதாவது: வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிக்காக, 10 நாட்களாக, எந்த விண்ணப்பமும் பெறப்படவில்லை. செப்., 1ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதையொட்டி, இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும், ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அவர்களுக்கு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படும்.பட்டியலில், தவறு இருந்தால் சுட்டிக்காட்டும்படி தெரிவிக்க உள்ளோம்.வரைவு வாக்காளர் பட்டியல், கிராம சபை கூட்டத்தில் வைத்து, ஒப்புதல் பெறப்படும். வாக்காளர் சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். வரைவு பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

morning prayer -31-8-18

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடு-31-8-18

திருக்குறள்:41

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

உரை:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

பழமொழி :

Barking dogs seldom bite

குரைக்கின்ற நாய் கடிக்காது

பொன்மொழி:

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத
பெரிய சுமையாகிவிடும்.

-பெர்னார்ட்ஷா.

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன?
புவி உச்சி மாநாடு

2.ஹீப்ளி எந்த மாநிலத்திலுள்ளது?
கர்நாடகா

நீதிக்கதை :



சமயோசித புக்தியால் உயிர் தப்பிய குரங்கு

ஒரு காட்டில் ஒரு குரங்கு வசித்து வந்தது. அந்த காட்டின் நடுப் பகுதியில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம் நின்றது. அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு உயிர் வாழ்ந்து வந்தது.

அக்காட்டின் ஒரு பகுதில் பெரிய ஆறு ஒன்று ஓடியது. அந்த ஆற்றில் எப்போதுமே நீர் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றிற்கு மறுபக்கத்தில் இருக்கும் காடு மிகவும் செழிப்பாகக் காணப்பட்டதால் அங்கு போய் பார்க்க வேண்டும் என்று குரங்கிற்கு ஆசை ஏற்பட்டது. ஆனால் குரங்கிற்கு அந்த ஆற்றைக் கடந்து போக பயமாக இருந்தது.
ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து ‘நாவல் பழம் மிகவும் ருசியாக உள்ளதா?’ எனக் கேட்டது.

குரங்கும்..”முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்” என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது.

முதலையும் பழத்தை ருசித்து சாப்பிட்டது. அவற்றைச் சாப்பிட்ட முதலை இந்த சுவையான பழங்களை உண்ணும் முதலையின் ஈரன் மிகவும் ருசியாக இருக்கும் என எண்ணியது. அதனால் முதலை குரங்குடன் நண்பனாகப் பழகி அதன் ஈரலை உண்ண திட்டம் போட்டது
குரங்காரே நீர் எனக்கு நல்லபழங்களை தந்து என் பசியை தீர்த்தீர் உமக்கு நான் ஏதும் உபகாரம் செய்யலாம் என்று யோசிக்கின்றேன் என்று கூறியது. அத்துடன் ஆற்றின் மற்றக் கரையில் நல்ல பழ மரங்கள் பழுத்து தூங்குகின்றன. நீர் அங்கு சென்றால் அப் பழங்களை நீயும் உண்டு எனக்கும் தரலாம் அல்லவா என்றது.
அதற்கு குரங்கு எனக்கும் அக்காட்டைப் பார்க்க வேண்டும் என்று பல நாளாக ஆசை இருக்கு ஆனால் எனக்கு இந்த ஆற்றைக் கடந்து போகதான் பயமாக இருக்கிறது என்றது.

அதனைக் கேட்ட முதலை நான் இருக்கும் போது நீ ஏன் பயப்பட வேண்டும். இப்பவே எனது முதுகில் ஏறி இரு நான் உன்னை அக்கரையில் சேர்த்து விடுகின்றேன் என்றது.
வஞ்ச எண்ணம் கொண்ட முதலையின் அன்பு வார்த்தையை நம்பிய குரங்கும் முதலையின் முதுகின் மீது தாவி ஏறி உட்காந்தது.

தனது ஆசையை நிறைவேற்ற இதுதான் தருணம் என்று எணிய முதலை குரங்கை நடு ஆற்றுக்கு கொண்டு சென்று அங்கே குரங்கின் ஈரலை சாப்பிட இருக்கும் தனது ஆசையைச் குரங்கிற்கு சொன்னது. அப்போது குரங்கு பதட்டமடையாது.

அப்படியா! நீ அதை முதலில் சொல்லவில்லையே என்று கூறி நீரில் நனைந்து ஈரல் பழுதாகி விடும் என எண்ணி தான் தனது ஈரலை எடுத்து மரக்கிளையில் வைத்துவிட்டு வந்துவிட்டதாக கூறி; என்னை திரும்ப மரத்தடிக்கு கொண்டு செல் நான் அதை எடுத்து மாட்டிக் கொண்டு வருகிறேன் என்று சமயோசிதமாக கூறியது.
முதலையும் யோசிக்காது..குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது
வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு..’முட்டாள் முதலையே. ஈரலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..நியாயமா? என்று கேட்டது.
முதலையும் ஏமாந்து திரும்பியது.

நாமும் யாரையும் உடன் நம்பக்கூடாது. அவர்கள் நல்லவர்களா..கெட்டவர்களா என நட்பு கொள்ளுமுன் பார்க்க வேண்டும்.

இன்றைய செய்தி துளிகள்:

1.அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால் பணிநீக்கம் - தமிழக அரசு சுற்றறிக்கை!

2.கலைஞருக்கு புகழ் வணக்கம்: முன்னாள் பிரதமர் தேவகவுடா, நிதின் கட்கரி உள்ளிட்ட பல தலைவர்கள் புகழ் அஞ்சலி

3.ஸ்டெர்லைட் ஆய்வு: தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

4.நீட் தேர்வில் இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

5.ஆசிய விளையாட்டுயில் 13 வது தங்கப்பதக்கத்தை இந்தியா வென்றது. மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

Wednesday, August 29, 2018

morning prayer 30-8-18

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.18

ஆகஸ்ட் 30 :
சிறு தொழில் நிறுவன தினம்

திருக்குறள்

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

விளக்கம்:

பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.

பழமொழி

A little stream will drive a light mill

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

இரண்டொழுக்க பண்பாடு

1.  எங்கள் ஊரில் உள்ள குளம், குட்டையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பேன்.

2. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

பொன்மொழி

நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதுமே கதாநாயகன் தான்.

  -  காமராஜர்

பொது அறிவு

1. இந்தியாவின்  எலக்ட்ரானிக்  நகரம் என போற்றப்படுவது எது?

பெங்களூர்

2.  இந்தியாவில்  அமைதி பள்ளத்தாக்கு    எந்த மாநிலத்தில் உள்ளது?

கேரளா

English words and. Meanings

Tacit.              மௌனமான
Temperature வெப்பம்
Temporary   தற்காலிகம்
Target.           இலக்கு
Trial.               ஒத்திகை



நீதிக்கதை - கழுதையும் நாயும்

கழுதை ஒன்று, நிறைய பொதி சுமந்து கொண்டு சென்றது. அதன் பின்னால் கழுதையின் எஜமானரும், அவர் வளர்க்கும் நாயும் வந்து கொண்டிருந்தனர். செல்லும் வழியில் புல் தரையைப் பார்த்ததும், கழுதையை அங்கு மேயவிட்டு மரத்தின் நிழலில் படுத்துத் தூங்கினார் எஜமானர்.

கழுதை அங்கிருந்த புற்களை நன்கு மேய்ந்தது. ஆனால், நாய்க்குத் தின்பதற்கு எதுவுமில்லை. பசி, அதன் வயிற்றைப்பிடுங்கியது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாய், கடைசியாக கழுதையைப் பார்த்து, “நண்பனே, என்னால் பசி தாங்க முடியவில்லை. எஜமான ரோ தூங்குகிறார். கொஞ்சம் கீழே படு. உன் பொதியில் உள்ள உணவில் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறேன்” என்று கெஞ்சியது.

நாயின் கெஞ்சலை கழுதை பொருட்படுத்தவில்லை. அது ஆனந்தமாகப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. நாயும் விடாமல் கெஞ்சிக் கொண்டிருந்தது.

நாயின் தொந்தரவு தாங்காத கழுதை, “என்னப்பா அவசரம்? எஜமானர் எழுந்திரிக்கட்டும். அவர் சாப்பிடும்போது உனக்கும்தான் கொடுப்பாரே” என்றது. வேறு வழியில்லாமல் நாய் சோர்ந்து போய் படுத்துக் கொண்டது.

அப்போது ஓநாய் ஒன்று மேய்ந்து கொண்டிருந்த கழுதை மீது பாய்ந்தது. பயத்தால் அலறிய கழுதை, “நண்பா, சீக்கிரம் ஓடிவந்து என்னைக் காப்பாற்று” என நாயைப் பார்த்து கதறியது.

படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்திரிக்காமல், “ஏன் அவசரப்படுகிறாய்? கொஞ்சம் பொறுமையாக இரு, எஜமானர் விழிக்கட்டும். அவர்தான் கட்டாயம் உனக்கு உதவி செய்வாரே” என்றது நாய்.

கழுதை, நாய்க்கு உதவி செய்யாமல் தான் செய்த தவறை நினைத்து வருந்தியது.

நீதி: நாம் மற்றவர்களுக்கு உதவினால் தான், மற்றவர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.

இன்றைய செய்திகள்

30.08.18

* அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக சரிவைக் கண்டுள்ளது.

* ஐ.நா. சபையின் உதவி பொதுச் செயலாளராகவும், நியூயார்க்கில் உள்ள அந்த அமைப்பின் சுற்றுச்சூழல் திட்ட மையத்தின் தலைவராகவும் இந்தியாவைச் சேர்ந்த சத்யா திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.

*  கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ., முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று முதல் துவங்கின.

* ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஹெப்டத்லான் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் 6026 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

* ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் மும்முறை தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.