இந்திய ரூபாய் தாள்களில் பெயர், கவிதை, தனிநபர் புகழ் என்று பலவகையில் எழுதப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். இவ்வாறு எழுதப்பட்ட ரூபாய் தாள்கள், வரும் 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து வங்கிகளில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி அறிவிக்கப்படுவதாக வாட்ஸ் அப் சமூக வலைத்தளத்தில், தகவல் பரவி வருகிறது.
இது தொடர்பாக சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் தென் மண்டல அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது,” அவ்வாறு எழுதப்பட்ட ரூபாய் தாள்கள் செல்லாது என்றோ, ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றோ ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. மாறாக ரூபாய் நோட்டுகளில் பெயர்கள், கவிதைகள், தனிநபர் புகழ் வார்த்தைகள், மதம் தொடர்புடைய வார்த்தைகள் என்று எந்த வகையில் எழுதப்பட்டிருந்தாலும் அந்த ரூபாய்த் தாள்கள் செல்லுமா செல்லாதா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய அதிகாரம், ரிசர்வ் வங்கியின் மண்டலங்களில் உள்ள தீர்வை ஆபிஸர்க்கு உள்ளது என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.
இது போன்று எழுதப்பட்ட ரூபாய்த் தாள்கள் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வருவதாக அவ்வப்போது தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் எழுதப்பட்ட ரூபாய்த் தாள்கள் செல்லாது என்றும் செய்திகள் பரவுகின்றன. ஆனால் உண்மையில், மாநிலங்களில் உள்ள பல்வேறு வங்கிகளின் தலைமை அலுவலகங்களுக்கு எழுதப்பட்ட ரூபாய்த் தாள்கள் எடுத்துச் செல்லப்பட்டு, நவீன எந்திரம் மூலம் பிரிக்கப்படுகின்றன. இதன்படி ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்படும் ரூபாய்த் தாள்கள் தனியாகவும், பொதுமக்களுக்காகப் புழக்கத்தில் விடும் ரூபாய்த் தாள்கள் தனியாகவும், கிழிந்த, அழுக்கான, எழுதப்பட்ட ரூபாய் தாள்கள் தனியாகவும் பிரிக்கப்படுகின்றன.
கிழிந்த, அழுக்கான, எழுதப்பட்ட ரூபாய்த் தாள்கள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் இவற்றில் 100 தாள்களில் 90 தாள்கள் எழுதப்பட்ட ரூபாய்களாக உள்ளன. 2014-ம் ஆண்டு அச்சிடப்பட்ட ரூபாய் தாள்கள் கூட அழிக்கப்படுவதற்காக அனுப்பப்படுகின்றன என்பதால் ரிசர்வ் வங்கி இந்த விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
ரூபாய் அச்சடிப்பதற்கு மத்திய அரசு அதிகம் செலவழிக்கிறது. ஆனால் இன்னும் பல ஆண்டுகள் புழக்கத்தில் இருக்க வேண்டிய ஆயிரம் ரூபாய், 500 ரூபாய்த் தாள்கள் கூட அழிப்பதற்காக அனுப்பப்படுவது அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனல் அரசுக்கு ஏற்படும் வீண் செலவைத் தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து ரூபாய் தாள்களில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment