வெள்ளத்தில் சிக்கிய கார்களுக்கு, காப்பீட்டு தொகை பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி, பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவன மோட்டார் இன்சூரன்ஸ் தலைமை தொழில்நுட்ப அதிகாரி விஜய்குமார் கூறியதாவது:
தண்ணீரில் கார் மூழ்கி விட்டாலோ, டயர் அளவுக்கு நீரில் சிக்கி விட்டாலோ, அப்படியே நிறுத்தி விட வேண்டும். காரை, 'ஸ்டார்ட்' செய்யக் கூடாது; 'பேட்டரி' இணைப்பை துண்டிக்க வேண்டும். இன்ஜின் மற்றும் இதர பகுதிகளில் தண்ணீர் புகுந்திருந்தால், அங்கீகாரம் பெற்ற, 'டெக்னீஷியனை' வைத்து, தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இது, இருசக்கர வாகனத்துக்கும் பொருந்தும். வாகன பாதிப்பு பற்றி, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்; புகைப்படம் எடுத்து வைப்பது கூடுதல் பாதுகாப்பு. இன்சூரன்ஸ் அதிகாரிகள் வந்து பார்த்து பின், காரை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்ல உதவுவர்.
ஒருவேளை, முன்கூட்டியே காரை சர்வீஸ் சென்டரில் விட்டு விட்டால், இன்சூரன்ஸ். 'சர்வேயர்' வந்து பார்வையிடாமல், 'ரிப்பேர்' செய்ய அனுமதிக்கக் கூடாது. ஆவணங்கள் வெள்ளத்தில் தொலைந்தால், சர்வேயர் தரும் அறிக்கை முக்கிய ஆவணமாக இருக்கும். சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள, 'மொபைல் ஆப்' வசதியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாகவும் இழப்பீடு கோரி பதிவு செய்யலாம். கார் மற்றும் இன்சூரன்ஸ் அசல் ஆவணங்களை, தவறாது கொண்டு செல்ல வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் பழுது பார்த்தால், செலவை இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்கும். அப்படி இல்லையேல், செலவுக்கான ரசீதுகளை கொடுத்தால், பணம் திருப்பித் தரப்படும். முன்னதாக, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், 'கி.ௌய்ம் ரெபரன்ஸ் நம்பர்' அளிக்கப்படும்.
வெள்ளத்தில் வாகனம் சிக்கிய பின், இன்ஜினை, 'ஸ்டார்ட்' செய்ய முயற்சித்து, வாகனம் நின்று விட்டிருந்தால், மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியில் இழப்பீடு கிடையாது. ஆனால், 'இன்ஜின் புரொடெக்டர்' என்ற அம்சத்தை பெற்றிருந்தால், இழப்பீடு கோரலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment