ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் நேற்று இணையதளத்தில் 28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. இன்று தமிழக அரசின் இணையதளத்தில் மதியம் 22 அரசாணைகள் வெளியிடப்பட்டது, பின்பு இன்று மாலை 25 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று இரண்டு கட்டங்களாக வெளியிட்ட 47 அரசாணைகளில் பள்ளிக்கல்வித் துறையை சார்பாக எந்த அரசாணையும் இல்லை. இதுவரை மொத்தம் 75 அரசாணைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Friday, July 26, 2013
Thursday, July 25, 2013
தமிழகம் முழுவதும் மறியல் 1,500 அரசு ஊழியர்கள் கைது
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள இரண்டரை லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மறியல் நடந்தது. சென்னையில் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் எழிலகம் முன்பு மறியல் செய்ய முயன்ற 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை ரயில்வே சந்திப்பில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் மறியல் செய்ய முயன்ற 95 பெண்கள் உள்பட 215 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோல், தூத்துக்குடியில் மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமையில் மறியல் செய்ய முயன்ற 210 பேர், கோவையில் மாவட்ட தலைவர் சிவஜோதி தலைமையில் செஞ்சிலுவை சங்கம் முன்பு மறியல் செய்ய முயன்ற 243 பேர், திருவண்ணாமலையில் தமிழ்நாடு நில அளவை சங்க மாநில தலைவர் ஆர்.பழனி தலைமையில் மறியல் செய்த 350 பேர் என மாநிலம் முழுவதும் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.
பள்ளி கல்வித்துறையில் 17 அலுவலர்களுக்கு பதவி உயர்வு
பள்ளிக் கல்வித்துறையில், 17 மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றுள்ளனர். கல்வித்துறையில், மாவட்ட கல்வி அலுவலர்(டி.இ.ஓ.,) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) பணியிடங்கள், அதிக அளவில் காலியாக இருந்ததால், கல்விப்பணி பாதிக்கப்படுவதாக, பல்வேறு சங்கங்கள் புகார் தெரிவித்து வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம், 45 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றனர். அதுபோல், மாவட்ட கல்வி அலுவலர்களாக உள்ள, 17 பேர், முதன்மை கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றனர்.
இதற்கான உத்தரவை, பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்டது. கோவை மாவட்ட கல்வி அலுவலராக இருந்த, பாலமுரளி, நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், திருச்சி மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மதிவாணன், அரியலூர் மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சுகன்யா, திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்பள உயர்வில் பெரிய மாற்றம் இல்லை: ஆசிரியர்கள் கருத்து
"சம்பள உயர்வில், ஆசிரியர்களுக்கு, பெரிய அளவில், மாற்றம் எதுவும் இல்லை' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
"பத்து ஆண்டு, 20 ஆண்டு பணி முடித்த, தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்தில், 3 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், ஆசிரியர்களுக்கு, 1,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய், கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு பெற, தர ஊதியம் உயர வேண்டும். இந்த தர ஊதிய அளவில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி, கல்விப்படி ஆகியவற்றில், மாற்றம் வரும் என, எதிர்பார்த்தோம். அதுபோல், இந்த படிகளில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் தர ஊதியம், 4,700 ரூபாயாக, மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இவரின் கீழ் வேலை பார்க்கும் கண்காணிப்பாளரின் தர ஊதியம், 4,800 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களின் தர ஊதியம், 4,900 ரூபாயில் இருந்து 5,100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் அளவில், தர ஊதியம் உயர்த்தப்பட்டபோதும், இதை, ஆசிரியர்களுக்கு உயர்த்தவில்லை. இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 உடனடி தேர்வு 20.5 சதவீதம் பேர் "பாஸ்'
பிளஸ் 2 உடனடித் தேர்வில், வெறும், 20.5 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவ, மாணவியர், சம்பந்தப்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்று, அதே கல்வியாண்டில், உயர்கல்வியை தொடரும் வகையில், உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இந்த தேர்வுக்கு தயாராக, போதிய கால அவகாசம் இல்லாத நிலையில், மாணவர்கள், தேர்வை சந்திக்க வேண்டியுள்ளது.
இதனால், தேர்ச்சி சதவீதம், பெரிய அளவிற்கு உயரவில்லை. ஒவ்வொரு முறையும், 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான மாணவர்கள், தேர்ச்சி பெறுவர். இந்த முறை, பிளஸ் 2 உடனடித் தேர்வில், வெறும், 20.5 சதவீத மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். 66,576 மாணவர்கள், தேர்வெழுதியதில், 13,629 மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பித்த, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், "ஆப்சென்ட்' ஆனதாகவும், 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள், பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்தன. உடனடித் தேர்வு தேர்ச்சி சதவீதம், படிப்படியாக குறைந்து வருவதால், இத்திட்டம் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது
. உடனடித் தேர்வு நடந்த இரு மாதங்களில், செப்டம்பர், அக்டோபரில், தனித்தேர்வு வருகிறது. பொதுத்தேர்வுக்குப் பின், செப்டம்பர், அக்டோபர் தேர்வை சந்திக்க, போதிய கால அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, July 24, 2013
பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் டி.சபீதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:– மீண்டும் இடமாற்றம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராக (முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்து) பணியாற்றி திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஏற்கனவே மாற்றப்பட்ட ஆர்.பூபதி தற்போது திருச்சி மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (அனைவருக்கும் கல்வி திட்டம்–எஸ்.எஸ்.ஏ.) நியமிக்கப்படுகிறார். திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்து விருதுநகர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.எஸ்.ஏ.) முன்பு மாற்றப்பட்ட கே.செல்வகுமார் தற்போது திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணிஅமர்த்தப்பட்டுள்ளார். திருச்சி–வேலூர் திருச்சி மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (எஸ்.எஸ்.ஏ.) வி.ஜெயக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவர் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (எஸ்.எஸ்.ஏ.) பொறுப்பையும் கூடுதலாக கவனித்துக்கொள்வார்.
வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (எஸ்.எஸ்.ஏ.) ஆர்.மகாலிங்கம் மாற்றப்பட்டு, பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். கூடுதல் பொறுப்பு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி.வி.செங்குட்டுவன் இடமாற்றம் செய்யப்பட்டு மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.எஸ்.ஏ.) பணிஅமர்த்தப்படுகிறார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.
தலைமை ஆசிரியர் 45 பேருக்கு டி.இ.ஓ.,வாக "புரமோஷன்'
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 45 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளனர். பள்ளி கல்வித் துறையில், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள், அதிகளவில், பல மாதங்களாகக் காலியாக இருந்து வந்தன. இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுத்தன.
இந்நிலையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 45 பேருக்கு, பதவி உயர்வு வழங்கி, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதில், தொடக்கக் கல்வித் துறையில், 12 பேர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். 33 பேர், பள்ளிக் கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் கீழ், மாவட்ட அளவில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஐந்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேறு மாவட்டங்களுக்கு, மாற்றப்பட்டு உள்ளதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து, இந்த வாரத்திற்குள், காலியாக உள்ள, 17 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின், இணை இயக்குனர்கள் பதவி உயர்வு, இயக்குனர் பதவி உயர்வு உத்தரவுகளும் வெளியாகும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பத்தாம் வகுப்பு மறுகூட்டல் நாளை முடிவு வெளியீடு
பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவு, நாளை காலை, 10:30 மணிக்கு, தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வுத் துறை அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவிற்குப் பின், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள், 26ம் தேதி (நாளை) காலை, 10:30 மணிக்கு, www.dge.tn.nic.in என்ற தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும். கட்டணத்தைச் சரியாகச் செலுத்தி, அதன் விவரங்கள், தேர்வுத் துறையால் பெறப்பட்ட மாணவர்களின் முடிவுகள் மட்டும், முதல்கட்டமாக வெளியிடப்படுகிறது.
மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள், ஆக., 5 முதல், 8ம் தேதி வரை, தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து, பழைய மதிப்பெண் சான்றிதழைகளை ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். முடிவு கிடைக்காத மாணவர்கள், கட்டணம் செலுத்தியதற்கான ரசீதின் பின்புறம், பதிவு எண்ணைக் குறிப்பிட்டு, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, "இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி), தேர்வுத் துறை இயக்குனரகம், சென்னை-6' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது.
அரசு பள்ளிகளில் வருகை பதிவு முறையாக கண்காணிக்க உத்தரவு : ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு
""அரசு பள்ளிக்கு, உரிய நேரத்திற்குள் ஆசிரியர்கள் வருகிறார்களா, என்பதை கண்டறிய, வருகை பதி வேட்டை, பாரபட்சமின்றி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்கவேண்டும்,'' என, பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் உரிய நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை. காலையில் தாமதமாக வரும் ஆசிரியர்கள், மாலையில் முன்கூட்டியே செல்வதாக புகார்கள் எழுகின்றன.
இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், உரிய நேரத்திற்குள் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்துவிட்டார்களா, என கண்காணிக்க வேண்டும். தாமதமாக வரும் ஆசிரியர்களை, வருகை பதிவில் கையெழுத்திட அனுமதிக்க கூடாது. 6, 9ம் வகுப்புகளில் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கான ("பிரிட்ஜ் கோர்ஸ்' ) பயிற்சிகளை துவக்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்கள், கோர்ட் வழக்கு சார்ந்த ஆவணங்களுக்கு உரிய நாட்களில் பதில் தர வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களை உடல், மன, சமுதாய ரீதியாக நல்வழிப்படுத்தவேண்டும். பாடம் நடத்தும்போதே, பொது அறிவு, நாட்டுநடப்பு, அறிவுசார் திறன் போட்டி, ஆளுமைத்திறன் போன்ற சிறந்த ஆற்றல்களை வளர்க்கவேண்டும்
. தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதம் போன்றவற்றை, இசை ஆசிரியர் களை கொண்டு, பாட வைத்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி தேவராஜன் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது thanks tnkalvi
>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.
>தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை.
>மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் ரூ.4900 முதல் ரூ.5100 உயர்த்தி உத்தரவு.
பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படுகின்றது.
ஜூன் 19 முதல் ஜூலை 1ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றது. தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் ஜூலை 30ம் தேதி மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண http://dge.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Tuesday, July 23, 2013
அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு
. இளநிலையில் பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் ஒரு வருட கூடுதல் படிப்பு, பி.ஏ. வரலாறு, பி.எஸ்சி.-யில் கணிதம், கணினி அறிவியல், கணினி அறிவியல் நேரடி 2-ஆம் ஆண்டு, பி.எஸ்சி. சைக்காலஜி, பி.சி.ஏ, பி.சி.ஏ நேரடி 2-ஆம் ஆண்டு, பி.காம்., பி.காம் நேரடி 2-ஆம் ஆண்டு, பி.காம் சி.ஏ., பி.காம்., சி.ஏ நேரடி 2-ஆம் ஆண்டு பாடப் பிரிவுகளுக்கும், முதுநிலையில் எம்.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. (பிஎம் அன்ட் ஐஆர்), எம்.ஏ., (பிஎம் அன்ட் ஐஆர்) நேரடி 2-ஆம் ஆண்டு, எம்.ஏ., (எம்சி அன்ட் ஜே), எம்.ஏ., (சைல்டுகேர் அன்ட் எஜூகேஷன்), எம்.எஸ்சி-யில் இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், எம்.எஸ்சி (ஐ.டி), எம்.பி.ஏ. டூரிஸம், ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட், எஜூகேஷன் மேனேஜ்மெண்ட், இன்டர்நேஷனல் பிஸினஸ், புராஜெக்ட் மேனேஜ்மெண்ட், எம்.எல்.ஐ.எஸ்.சி, எம்.காம். பைனான்ஸ் கண்ட்ரோல், எம்.காம், எம்.சி.எஸ் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பி.ஜி.டி.சி.ஏ பி.ஜி டிப்ளமோ பிரிவுக்கும் தேர்வு முடிவுகள் ஜ்ஜ்ஜ்.ஹப்ஹஞ்ஹல்ல்ஹன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முடிவு வெளியான 10 தினங்களுக்குள் (ஆக. 3)மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க லாம். மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் பெற்று மறுமதிப்பீட்டு கட்டணமாக பாடம் 1-க்கு ரூ. 400 வரைவோலை பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் செலுத்தி தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் கா. உதயசூரியன் தெரிவித் துள்ளார்.
தமிழகத்தில் 17000 தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது
கடந்த 2009ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தொடக்கப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்கிறார் களா என்பது குறித்து பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல்(எஸ்.இ.எம்.ஐ.எஸ்) மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும், 17000 பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும் இயங்குவது தெரியவந்துள்ளது.
கடந்த 2011,12ம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் 34871 தொடக்கப் பள்ளிகள் இயங்கின. அவற்றில் 60986 ஆசிரியர்களும், நிதியுதவி பெறும் பள்ளிகளில் 24338 ஆசிரியர்களும் பணியாற்றினர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 33000 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 30 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர். தொடக்கப் பள்ளிகள் குறித்து எஸ்.இ.எம்.ஐ.எஸ் எடுத்த புள்ளிவிவரப்படி மேற்கண்ட தகவல் பெறப்பட்டுள்ளது. மேலும் மலைப்பிரதேசம், எல்லையோரம் போன்ற பகுதிகளில் இயங்கும் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே உள்ளதாக அந்த புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. இது தவிர 5 குழந்தைகள் மட்டுமே படிக்கும் பள்ளிகள் 500 என்பதும் தெரியவந்துள்ளது.
5 முதல் 25 குழந்தைகள் இருந்தாலும் அந்த பள்ளிக்கு 2 ஆசிரியர்தான் நியமிக்க முடியும் என்பதால் இரண்டு ஆசிரியர்களை கொண்டே இவை இயங்குகின்றன. இந்த விவரம் தற்போது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் என்பது கிடையாது. ஆனால் 2 ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் ஒருவர் மாறுதலாகியோ, மாற்றுப்பணிக்கோ சென்றுவிட்டால் ஒரு ஆசிரியர்தான் கவனிக்க வேண்டும்.
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு புள்ளி விவரம் எடுப்பது, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதால் ஒரு ஆசிரியர்தான் பள்ளிகளில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர் மாணவர் விகிதாசாரப் படி, குறைந்த மாணவர் உள்ள பள்ளிக்கு 2 ஆசிரியருக்கு மேல் நியமிக்க முடியாது என்று விதி உள்ளதே இதற்கு காரணம். இதுபோன்ற பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்த்து தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
நடை மேடை வாசிகளையும் வாக்காளர்களாக சேர்க்க உத்தரவு
இருப்பிட சான்று இல்லாத, நடைமேடை வாசிகளையும், வாக்காளர் பட்டியிலில் சேர்க்க வேண்டும், என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்?என, தேர்தல் கமிஷன் உத்தர விட்டுள்ளது. நிரந்தரமாக குடியிருப்புகளில் தங்காமல், வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்து, நடைமேடைகளில் (பிளாட்பாரங்கள்), கூடாரங்களில் தங்கியிருப்பவர்களையும், காடுகளில் தங்கியிருந்து வேலை பார்ப்பவர்களையும், பட்டியிலில் சேர்க்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, அந்த பகுதி வாக்காளர் நிலை அலுவலர், அவர்களை ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் பூர்வீகம். தற்போது செய்யும் தொழில் குறித்து கேட்டறிந்து வாக்காளர் பட்டியிலில் சேர்க்கவேண்டும். இவரிடம், இருப்பிட சான்று, வயது சான்று போன்றவற்றை ஆதாரமாக கேட்க வேண்டியதில்லை, என்றும் கூறப்பட்டுள்ளது.
Monday, July 22, 2013
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 4043 ஆசிரியர் தேர்வு 29 முதல் விண்ணப்பிக்கலாம்
கேந்திரிய வித்யாலயா சங்கதன் (கேவிஎஸ்) வாயிலாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 4043 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், வணிகவியல், கணிதம், உயிரியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், சமஸ்கிருதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உடற்கல்வி, இசை ஆசிரியர், நூலகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும்.
கல்வி தகுதி, பிஇ, பிடெக், பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்சிஏ, பிசிஏ, பிஜி டிகிரி, டிப்ளமோ, இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி, இசை ஆசிரியர், நூலகர் பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் அந்தந்த துறை சார்ந்த தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்ப கட்டணம் 750 வங்கி வழியாக செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களை http://jobapply.in/kvs அல்லது www.kvsangathan.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்துதெரிந்துகொள்ளலாம்.
திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை: மாணவ, மாணவியருக்கு அழைப்பு
மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை பெற, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம், என்று தமிழக அரசின் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக கல்லூரிக்கல்வி இயக்ககம் விடுத்துள்ள அறிக்கை: "மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால், திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழகத்தில், 2013, மார்ச்சில் வெளியான பிளஸ்2 மேல்நிலைப்பள்ளித் தேர்வு முடிவுகளில், 1200க்கு 955க்கு மேல், 80 சதவீத மதிப்பெண் பெற்ற கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெற்றோரின் ஆண்டு வருமானம், ஆறு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் வேறு எந்தவித கல்வி உதவித்தொகையையும் பெற்றிருக்க கூடாது. இத்திட்டத்தில், மத்திய அரசால் தமிழகத்துக்கு, 4,883 பேருக்கு கல்வித் தொகை வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் பெண்களுக்காகவும், மாநில அரசின் இன சுழற்சி முறை மற்றும் ஒவ்வொரு இனத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு, மூன்று சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். விண்ணப்பிப்பவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்கி, கணக்கு எண், மாணவ, மாணவியரின் இமெயில் முகவரி, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் மொபைல் எண் ஆகிய விபரங்களை வழங்க வேண்டும்.
மாணவ, மாணவியர் ஊனமுற்றவர்களாக இருப்பின் அதற்குரிய மருத்துவ சான்றிதழ் பெற்று, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லூரி முதல்வர்கள் மூலம், ஆகஸ்ட் 30ம் தேதிக்குள், "இயக்குனர், கல்லூரிக்கல்வி இயக்ககம், ஈ.வெ.கி.சம்பத் மாளிகை, 6வது தளம், கல்லூரி சாலை, சென்னை-600006." என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.