இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, April 21, 2019

பொறியியல் கலந்தாய்வு


மே 2-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 3-ந் தேதி தொடங்குகிறது

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 19-ந் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பி.இ., பி.டெக் போன்ற என்ஜினீயரிங் சேர்க்கைக்கான தற்காலிக அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

பி.இ., பி.டெக். படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு ஆன்லைன் மூலமே பெறப்பட்டன. அதேபோன்று கலந்தாய்வும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமே பெறப்படுகிறது. கலந்தாய்வும் ஆன்லைன் மூலமே நடத்தப்படுகிறது.

மாணவ-மாணவிகள் மே 2-ந் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்ப மே 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஜூன் மாதம் 3-ந் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதைத்தொடர்ந்து ஜூன் 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் செயல்படும் 42 உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடை பெறும். இதன்பின்பு, ஜூன் 17-ந் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப் படும்.

இதைத்தொடர்ந்து ஜூன் 20-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஜூன் 20-ந் தேதியும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 21-ந் தேதியும், விளையாட்டு வீரர் களுக்கு 22-ந் தேதியும் நேரடி சிறப்பு கலந்தாய்வு நடக்கிறது.

பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 3-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. தொழிற் கல்வி பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இந்த கலந்தாய்வை பொறுத்தமட்டில் நேரடியாக நடத்தப்படுகிறது.

அதேபோன்று துணை கலந்தாய்வு ஜூலை மாதம் 29-ந் தேதியும், அருந்ததியர்களுக்கான ஒதுக்கீட்டு காலி இடங்களில் ஆதிதிராவிடர் மாணவ-மாணவிகளை சேர்த்துக்கொள்வதற்கான கலந்தாய்வு ஜூலை 30-ந் தேதியும் நேரடியாக நடக்கிறது.

என்ஜினீயரிங் படிப்புக் கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் மூலம் நடத்தப்படுகிறது. இதனால் நேரடி கலந்தாய்வை பொறுத்தமட்டில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வளாகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர் சேர்க்கை குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாணவ-மாணவிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் மூலம் அந்தந்த மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட உள்ள உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பங்களை அனுப்பலாம். உதவி மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் தங்களது இ-மெயில் முகவரியை தெரிவிக்க வேண்டும். எனவே, மாணவ-மாணவிகள் முன்னதாகவே இ-மெயில் முகவரியை உருவாக்கி தயாராக வைத்துக்கொள்வது நல்லது. அதேபோன்று மாணவ-மாணவிகள் தங்களது செல்போன் எண்ணையே விண்ணப்பிக்கும் போது தெரிவிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் குறிப்பிடும் செல்போன் எண், இ-மெயில் முகவரிக்கு தான் விண்ணப்பத்தில் உள்ள குறைபாடு, கலந்தாய்வு போன்ற அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும்.

செல்போன் எண், இ-மெயில் முகவரியை சரியாக கொடுக்கும்பட்சத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களுக்கு பிடித்தமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கட்டாயக்கல்வி திட்டத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி.,யில், 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்படி, 2019-20ம் கல்வி ஆண்டில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று 22ம் தேதி முதல் வரும் மே., 18ம் தேதி வரை நடைபெறுகிறது.

பள்ளிக்கல்வி துறையின் http://rte.tnschools.gov.in/tamilnadu என்ற இணையதளத்தில் மாணவர்களின் போட்டோ, பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் முகவரி சான்று, ஆண்டு வருமான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். பெற்றோரின் தொழில், ஆதார் எண், மொபைல் எண் விபரம் இடம்பெற வேண்டும்.

Friday, April 19, 2019

மூடல்

#மாணவர்கள் இல்லாத அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூட வேண்டும்"

* "மாணவர்கள் இல்லாத பள்ளிகளுக்கு மானியம் வழங்க இயலாது"

* "அங்கீகாரத்தை திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

* ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு கல்வித்துறை உத்தரவு..

நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்


நாடு முழுவதும் அவசர உதவிக்கு ஒரே எண்ணை(112) அழைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, கேரளம் உள்பட 20 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். காவல் துறை(100), ஆம்புலன்ஸ்(108), தீயணைப்புத் துறை(101) என்று ஒவ்வொரு அவசர உதவிக்கும் ஒரு எண்ணை பயன்படுத்துவதற்கு பதிலாக, நாடு முழுவதும் ஒரே அவசர எண்ணை(112), அனைத்து அவசர உதவிக்கும் அழைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தில் முதன்முதலாக ஹிமாசலப் பிரதேச மாநிலம் இணைந்தது. இந்நிலையில் 20 மாநிலங்களில் இந்த முறை அமலில் உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் திட்டத்தில், தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், குஜராத், நாகாலாந்து உள்பட 20 மாநிலங்கள் இணைந்துள்ளன. புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், டையூ மற்றும் டாமன் ஆகிய யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன.

இப்போது, அனைத்து செல்லிடப்பேசிகளிலும், அவசர அழைப்புக்கான பொத்தான் உள்ளது. அதை கிளிக் செய்யும்போது, தானாக அவசர உதவி மையத்துக்கு அழைப்பு மேற்கொள்ளப்படும். கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள், உதவி தேவைப்படுபவர்களின் இருப்பிடத்தை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவர்கள். ஸ்மார்ட் செல்லிடப்பேசிகளில் இது மிகவும் எளிது. அதில் உள்ள ஜிபிஎஸ் மூலம் ஒருவரது இடத்தை உடனடியாக அறிந்து அவர்களுக்கு தேவையான உதவி செய்யப்படும். இதுமட்டுமன்றி, பெண்களின் பாதுகாப்புக்காக, 112 இந்தியா என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த 112 இந்தியா செயலியில் ஷெளட்(சத்தமிடுதல்) என்னும் புதிய சிறப்பம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக பிரத்யேகமாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் பெண்களின் இடத்தை கண்டுபிடிக்கும் வசதியும் இதில் உள்ளது. அவசர உதவி தேவைப்படும் பெண்கள் இந்த சத்தமிடும் அம்சத்தை கிளிக் செய்தால் அவர்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ, அவசர உதவி மையத்திடம் பதிவு செய்திருக்கும் தன்னார்வலர்களுக்கோ அவசர உதவி மையத்தின் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். அதன் மூலமாக பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, April 17, 2019

அரசுப் பள்ளிகளின் தரம்: விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு


தமிழக அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்து கிராமப்புறங்களில் உள்ள பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டைக் காட்டிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, கடந்த 1-ஆம் தேதி முதல் அதற்கான பணிகளைத் தொடங்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், வரும் 22-ஆம் தேதி முதல் இந்தப் பணியில் கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்து கிராமப்புறங்களில் உள்ள பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் கூறியது:

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது தொடர்பாக, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் கலந்தாலோசனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் மூலம் வழங்கப்படும் விலையில்லா நலத் திட்டங்களான புத்தகம், பாடக் குறிப்பேடு, சீருடை, காலணி, கணித உபகரணப் பெட்டி, கிரையான், வண்ண பென்சில்கள், அட்லஸ், புத்தகப்பை ஆகிய அனைத்தும் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன என்ற விவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து, அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அளிக்கப்படுகிறது என்றும், அந்த வகுப்புகளில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வி வழங்கப்படுகிறது என்றும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் பேரணி நடத்தி பொதுமக்கள் மத்தியில் தலைமையாசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், தனியார் பள்ளிகளில் இல்லாத அளவுக்கு மாணவர்களுக்கு வசதியான, காற்றோட்டமான கட்டடங்கள், மதிய உணவு, பாதுகாப்பான குடிநீர், கழிப்பிட வசதி, தகுதி படைத்த நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் இருப்பதை எடுத்துக் கூறுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.

ஜூன் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு


ஆசிரியர் தகுதித் தேர்வினை வரும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் டெட்' எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட்' தேர்வு 2 தாள் கொண்டது. தலா 150 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படும்.

முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆரம்பக் கல்வி வகுப்புகள் வரையும், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை வகுப்பு வரையும் பாடம் நடத்த முடியும். இந்நிலையில் நிகழாண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி கடந்த 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தத் தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

தற்போது தேர்வர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஜூன் மாதம் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான தேதி, காலிப் பணியிடம், பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் இம்மாதம் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சின்னம் ஒதுக்குவது?

எப்படி நடக்கிறது சின்னம் ஒதுக்கீடு ?

இந்தியாவில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 3 ஆயிரம்  கட்சிகள் உள்ளன. அதில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், 57 மாநில கட்சிகளும் நிரந்தர சின்னம் கொண்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்கப்படுவதில்லை. அந்த கட்சிகள் தேர்தலில் நின்றால் சுயேட்சை வேட்பாளர்களாகக் கருதப்படுகின்றனர். தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயேட்சைகள் களம் இறங்குவார்கள் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 530 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தங்களின் கொள்கையை உணர்த்தும் வகையிலோ அல்லது மக்களை கவரும் வகையிலோ சின்னங்களை உருவாக்கி ஆணையத்தில் அனுமதி பெறுகின்றன. சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்குவதற்கு முன்னர் அவர்கள் மூன்று சின்னங்களை தேர்வு செய்ய வேண்டும். அதிலிருந்து ஒரு சின்னம் ஒதுக்கப்படும். சின்னம் ஒதுக்கிய பிறகு வேறொரு கட்சியினர் அந்த சின்னத்தை பயன்படுத்தக்கூடாது. தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்படும் சின்னங்கள் மக்கள் அன்றாடம் புழங்கும் பொருட்களாக இருப்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். பூட்டு, சாவி  கத்தரிகோல், டார்ச் லைட்,  துடைப்பம், பேன், பானை, பலூன், பழக்கூடை பெல்ட், டார்ச் லைட், கேஸ் அடுப்பு, சப்பாத்தி கட்டை ஆகியவை சின்னமாக இடம் பிடித்துள்ளன. தமிழகத்தில் களம் இறங்கும் 530 சுயேட்சை வேட்பாளர்களில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 33 பேரும் தென் சென்னையில் 31 பேரும் போட்டியிடுகின்றனர்.

அவர்களுக்கு தொலைபேசி, மின்கம்பம், காலிபிளவர், கப் அண்ட் சாசர், பொரிக்கும் சட்டி, வேர்க்கடலை, செருப்பு உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சின்னங்களுக்கு வாக்காளர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக வேட்பாளர்கள் கருதுவதால் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் வீட்டு உபயோக பொருட்களையே பெற்றுள்ளனர். சில வேட்பாளர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர்வு செய்ய ஆர்வம் காட்டியதாக ஆணையம் கூறியுள்ளது. ஏசி, பேஸ்ட் வாக்கும் கிளீனர் போன்ற 200 க்கும் மேற்பட்ட சின்னங்களை தேர்வு செய்ய சுயேட்சைகள் ஆர்வம் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிதாக சின்னம் கேட்பவர்களுக்கு உயிருடன் உள்ள விலங்குகளையோ பறவைகளையோ ஒதுக்கப்படுவதில்லை.

ஆனால் ஏற்கெனவே இதுபோன்ற சின்னத்தை வாங்கியவர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முதலில் 1950 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது, மக்களிடம் சின்னங்களை கொண்டு செல்வது பெரும் சவாலாகவே  இருந்துள்ளது. சின்னங்களை மக்கள் எளிதாக நினைவு வைத்துக் கொள்ளும் வகையில், அப்போது  ஆணையத்தில் பணியாற்றிய எம். எஸ். சேத்தி ( M. S. Sethi) என்கிற ஓவியர் உருவாக்கியதுதான் நாம் அழுத்தும் ஒவ்வொரு சின்னமும். அவரது பாணி சின்னங்களையே இப்போதும் உருவாக்கி வருகிறது தேர்தல் ஆணையம். சின்னங்கள் எளிமை மிக்கதாக உள்ளன. ஆனால் தேர்தல்தான் ஒவ்வொரு முறையும் கடும் சவாலாக மாறிக் கொண்டிருக்கிறது.

Tuesday, April 16, 2019

சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்கள் இருப்பிடத்துக்கு அருகில் வாக்களிக்கலாம்


மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்ல முடியாதவர்கள், அவர்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக nvsp.in (national voters service portal) என்ற வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் படிவம் 6-ஐ பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் வாக்காளர்கள் தங்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இதன் மூலம் கள்ள வாக்குகளும் தடுக்கப்படும். இதற்கு தேவை வாக்காளர் அடையாள அட்டை எண் (Epic No. என்று சொல்வார்கள்), திருமணமாகி வந்திருந்தால் உங்கள் மனைவியின் வாக்காளர் அட்டை எண், உங்களின் மார்பளவு புகைப்படம் (jpeg or jpg format only), தற்போதைய முகவரி சான்று (jpeg or jpg), மற்றும் உங்களின் பிறந்த தேதிக்கான சான்றுகளுடன் (ஆதார் எண், etc) படிவத்தைச் சமர்ப்பித்த பின் உங்களின் கைப்பேசி எண்ணிற்கு Ref No. அனுப்பப்படும்.

மேலும் படிவம் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நாம் இடத்துக்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும்.

புத்தக வங்கி

தமிழகப் பள்ளிகளில் புத்தக வங்கி!' - வருடத்திற்கு 8 லட்சம் மரங்களைக் காப்பாற்ற புதிய வழி

அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்துப் பள்ளிகளிலும் இனி 'புத்தக வங்கி' செயல்படும் என  தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது. அதன்படி, மாணவர்கள் தேர்ச்சிபெற்றவுடன் தாங்கள் பயன்படுத்திய புத்தகங்களை இந்த வங்கியில் சமர்ப்பிக்கலாம். அடுத்த வகுப்பிற்கான புத்தகங்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். இது, சுழற்சி முறையில் நடக்கும்.

ஒரு வருடத்திற்கு 40 ஆயிரம் டன் காகிதங்களைப் பயன்படுத்தி, எட்டுக் கோடி புத்தகங்களை ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தயாரிக்கிறது. இந்த அளவுக்குக்கு கணிசமான காகிதப் பயன்பாட்டிற்கு எட்டு லட்சம் மரங்களை அழிக்க வேண்டியிருக்கிறது.

அரசு கொண்டுவந்திருக்கும் இப்புதிய அறிவிப்பான புத்தக வங்கியின்மூலம் மரங்களை நாம் பாதுகாக்க முடியும். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி இதை நடைமுறைப்படுத்த இருக்கிறது, தமிழக பள்ளிக் கல்வித்துறை

காலம் தப்பி பெய்யும் பருவ மழை, குளிர்ப் பிரதேசங்களிலும் அடிக்கிற கொடூர வெய்யில், குடிநீர் பற்றாக்குறை என முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பருவநிலை மாற்றத்தை எல்லோரும் உணர்ந்துவருகிறோம். இதற்கு, முக்கியமாக  மரங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இனி, நடக்கப்போகும் மோசமான விளைவுகளை முடிந்த அளவு தடுக்கும் பொருட்டு உலக நாடுகள் அனைத்தும் 'மரங்களைக் காப்போம்' என்கிற முழக்கத்தை அடிப்படையாகவைத்து, பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவருகிறார்கள். இந்தியா இயன்ற அளவு செய்வது போலவே, தமிழ்நாடும் பசுமையைப் பாதுகாப்பதற்கு தன்னளவில் முயன்றுவருகிறது. அதில் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்பைப் பார்க்கவேண்டியிருக்கிறது

Saturday, April 13, 2019

பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளையை கட்டாயமாக்க முடிவு


மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைகளை கட்டாயமாக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 44 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1.2 கோடி மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளிக்கல்வித் துறையில் புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கு பரவலாக வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், அனைத்து வகையான பள்ளிகளிலும் உடற்கல்விக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது. உடற்கல்வி பாடவேளைகளில் பிற வகுப்புகளை நடத்துவதால் மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. இதனால் விளையாட்டில் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாமல் மாணவர்கள் தவிப்பதாக விளையாட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைகளில் பிற பாடங்கள் கற்பிப்பதை தவிர்த்து, மாணவர்கள் கட்டாயம் விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும். வரும் கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறையை அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக் கல்வித் துறைஅறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Thursday, April 11, 2019

மக்களவைத் தேர்தல்: அரசு ஊழியர்களுக்கு நாளை இறுதிக் கட்ட பயிற்சி


மக்களவை, பேரவை இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 13) இறுதிக் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்பின் அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மக்களவை, சட்டப் பேரவை இடைத்தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி கடந்த மார்ச் இறுதியில் நடைபெற்றது. இதன்பின், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டாம் கட்ட பயிற்சி நடத்தப்பட்டது. தபால் வாக்குகள்-தேர்தல் சான்று:

சொந்த தொகுதியில் இல்லாமல் வேறு தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. சொந்தத் தொகுதியிலேயே தேர்தல் பணியாற்ற உள்ளவர்களுக்கு பணிச் சான்று அளிக்கப்படுகிறது. இந்தச் சான்றுகளைப் பயன்படுத்தி அவர்கள் தாங்கள் தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடியிலேயே தங்களது வாக்குகளைச் செலுத்தலாம். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பின்போது, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்பட்டன. இறுதிக் கட்ட பயிற்சி: ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட தபால் வாக்குகளை வரும் சனிக்கிழமை (ஏப். 13) நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பிலேயே செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடங்களில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். அந்தப் பெட்டிகளில் தபால் வாக்குகளைச் செலுத்தலாம். பயிற்சி வகுப்பில் தபால் வாக்குகளைச் செலுத்த இயலாதவர்கள், அஞ்சல் துறையின் மூலமாக வாக்குகளை அனுப்பலாம். வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாளான 17-ஆம் தேதி அன்று, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் எந்தெந்த வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தெரிவிக்கப்படும்.

தொலைவாக உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ளோர், வரும் 17-ஆம் தேதியன்று இரவு அங்கேயே தங்கி மறுநாள் தேர்தல் பணிகளை மேற்கொள்வர். வாக்குப்பதிவு முடிவடைந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, அவை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகே, ஊழியர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.

ஏப்.16, 17 ல் அனைத்து பள்ளிகளையும் திறக்க உத்தரவு


தமிழகத்தில் லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தல்களை முன்னிட்டு அனைத்து பள்ளிகளையும் ஏப்.,16 மற்றும் 17 திறந்து வைக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்.,18 ஓட்டுப் பதிவு நடக்கிறது.

இதையொட்டி மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு, உதவி பெறும், மெட்ரிக் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்.,13 கோடை விடுமுறை துவங்குகிறது. ஏப்.,18 ஓட்டுப் பதிவு என்பதால் ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ள வசதியாக இரண்டு நாட்களுக்கு முன்பே ஓட்டுச்சாவடி அமைந்துள்ள அனைத்து வகை பள்ளிகளையும் திறந்து வைக்கவும், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் ஒரு உதவியாளர் பள்ளியில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Wednesday, April 10, 2019

டெட் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்


2019 ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மூலம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப்.,12) கடைசி நாள். www.trb.tn.nic.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

2019 ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மூலம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப்.,12) கடைசி நாள். www.trb.tn.nic.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.