நாடு முழுவதும் அவசர உதவிக்கு ஒரே எண்ணை(112) அழைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, கேரளம் உள்பட 20 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். காவல் துறை(100), ஆம்புலன்ஸ்(108), தீயணைப்புத் துறை(101) என்று ஒவ்வொரு அவசர உதவிக்கும் ஒரு எண்ணை பயன்படுத்துவதற்கு பதிலாக, நாடு முழுவதும் ஒரே அவசர எண்ணை(112), அனைத்து அவசர உதவிக்கும் அழைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தில் முதன்முதலாக ஹிமாசலப் பிரதேச மாநிலம் இணைந்தது. இந்நிலையில் 20 மாநிலங்களில் இந்த முறை அமலில் உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் திட்டத்தில், தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், குஜராத், நாகாலாந்து உள்பட 20 மாநிலங்கள் இணைந்துள்ளன. புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், டையூ மற்றும் டாமன் ஆகிய யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன.
இப்போது, அனைத்து செல்லிடப்பேசிகளிலும், அவசர அழைப்புக்கான பொத்தான் உள்ளது. அதை கிளிக் செய்யும்போது, தானாக அவசர உதவி மையத்துக்கு அழைப்பு மேற்கொள்ளப்படும். கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள், உதவி தேவைப்படுபவர்களின் இருப்பிடத்தை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவர்கள். ஸ்மார்ட் செல்லிடப்பேசிகளில் இது மிகவும் எளிது. அதில் உள்ள ஜிபிஎஸ் மூலம் ஒருவரது இடத்தை உடனடியாக அறிந்து அவர்களுக்கு தேவையான உதவி செய்யப்படும். இதுமட்டுமன்றி, பெண்களின் பாதுகாப்புக்காக, 112 இந்தியா என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த 112 இந்தியா செயலியில் ஷெளட்(சத்தமிடுதல்) என்னும் புதிய சிறப்பம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக பிரத்யேகமாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் பெண்களின் இடத்தை கண்டுபிடிக்கும் வசதியும் இதில் உள்ளது. அவசர உதவி தேவைப்படும் பெண்கள் இந்த சத்தமிடும் அம்சத்தை கிளிக் செய்தால் அவர்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ, அவசர உதவி மையத்திடம் பதிவு செய்திருக்கும் தன்னார்வலர்களுக்கோ அவசர உதவி மையத்தின் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். அதன் மூலமாக பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.