Friday, December 22, 2017
ஆந்திராவை பின்பற்றி தமிழக டெட் தேர்வில் விரைவில் மாற்றம்
தமிழகத்தில் டெட் (டி.இ.டி) தேர்வு மூலம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்த தேர்வு கடந்த 2012ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளின் வினாத்தாள் 1 முதல் 12ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி பாடத்திட்ட புத்தகங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கணிதம், அறிவியல் என குறிப்பிட்ட பாடத்தை தேர்வு செய்து, அந்த பாட ஆசிரியராக செல்வார்கள்.
அவ்வாறு செல்லும் அவர்கள், மாணவர்கள் மீது அக்கறை செலுத்தாமல், கற்பித்தலில் ஆர்வம் குறைவாகவே இருக்கும். இதனால் மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவர். எனவே இவற்றை தடுக்க டெட் தேர்வில் மாற்றம் கொண்டுவர பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் ஆசிரியர் தகுதித்தேர்வில் மேற்கண்ட அம்சங்கள் தவிர வகுப்பறைகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் நடந்து கொள்ளும் முறை, ஒவ்வொரு மாணவனுக்கும் உளவியல் ரீதியான பிரச்னைகள், அவற்றை புரிந்து கொண்டு அவனிடம் ஆசிரியர் அணுகும் முறை, கற்பித்தல் மற்றும் மாணவனின் கற்றல் திறனை மேம்படுத்துதல் உட்பட பல்வேறு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படுகிறது.
இதனை அப்படியே தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தும் முனைப்புகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதற்காக தமிழக கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்களுடன் கருத்து பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் அடிப்படையில் திரட்டப்படும் தகவல்களுடன் ஆந்திராவில் ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் தமிழக டெட் தேர்வில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனவரி 10ல் இறுதி வாக்காளர் பட்டியல்
தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அக்., 1ல் துவங்கி, 31ல் நிறைவடைந்தது. அதன்பின், மேலும் ஒன்றரை மாதம், கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்யக் கோரி வந்த மனுக்களை, ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பட்டியலில், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் இறந்தவர்களின் பெயரை நீக்கும் பணியும் நடந்து வருகிறது. இப்பணிகள் அனைத்தும் முடிந்து, ஜன., 10ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்
Thursday, December 21, 2017
மார்ச் 16ம் தேதி தொடங்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றம் : அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
2018-2019ம் கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு மாணவர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். 10.10 மணிக்கு மாணவர்களிடம் வினாத்தாள் வழங்கப்படும். அதை மாணவர்கள் படித்து பார்க்க வேண்டும்.
பின்னர் 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளில் மாணவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்யவேண்டும். 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்க வேண்டும். மதியம் 12.45 மணிக்குள் மாணவர்கள் தேர்வு எழுதி முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அரசாணை மற்றும் சுற்றறிக்கை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
2018 முதல் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகத்தில் குழு அமைப்பு
தமிழகத்தில் உள்ள 523 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக். இடங்களில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்தி வருகிறது. இதற்காக மாணவர்கள் பெற்றோருடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு வந்து சென்றனர்.
இனி 2018-ம் ஆண்டு முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழக அதிகாரியான, பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் ஆன்லைனில் கலந்தாய்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். மாணவர்கள் அவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான தேதிகள் கொடுக்கப்படும். உதாரணமாக அவர்களுக்கு 5 நாட்கள் வரை வாய்ப்பு கொடுக்கப்படும்.
இதில் ஒரு நாளில் மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். 2017-ம் ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வில் முதல் தரமான கல்லூரிகளை தேர்ந்தெடுத்த சில மாணவர்கள் பின்னர் மருத்துவம் மற்றும் வேளாண்மை படிப்பில் இடம் கிடைத்து அதில் சேர்ந்துவிட்டனர். இதனால் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, எம்.ஐ.டி. கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் 300 இடங்களுக்கு மேல் காலியாக உள்ளது. அதுபோல் காலி இடங்கள் ஏற்படுவதை தடுக்கவே ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் நிச்சயம் காலி இடங்கள் ஏற்படாது.
Wednesday, December 20, 2017
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் அரையாண்டு தேர்வு மார்க் விவரங்களை கல்வித்துறையில் சமர்ப்பிக்க வேண்டும்: விடுமுறையில் விடைத்தாள் திருத்தவும் உத்தரவு
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் அரையாண்டு தேர்வு மதிப்பெண் விவரங்களை கல்வித்துறையில் சமர்ப்பிக்கவும், இதற்காக விடுமுறை நாட்களிலேயே விடைத்தாள்களை திருத்தி வழங்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த 7ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியது.
வரும் 23ம் தேதி தேர்வுகள் முடிந்து 24ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. அதேசமயம் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை கிடையாது. இந்த விடுமுறையில் இவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவேண்டும். 10ம் வகுப்புக்கு தினந்தோறும் ஒரு பாட ஆசிரியர் வரவேண்டும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரை நாளுக்கு ஒரு பாட ஆசிரியர் வீதம் வரவேண்டும். இந்த சிறப்பு வகுப்புகளில் செய்முறை தேர்வு மற்றும் பாடத்தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் அரையாண்டு விடுமுறையில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தி அவர்களுக்கு வழங்கவேண்டும். அதோடு அனைத்து மாவட்டங்களில் உள்ள பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் அரையாண்டு தேர்வின் மதிப்பெண் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அடுத்த மாதம் ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்தப்படும். பின்னர் மாணவர்களின் தேர்ச்சிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் பொதுத்தேர்வு மாணவர்களின் விடைத்தாள்களை தற்போதே ஆசிரியர்கள் திருத்த தொடங்கி விட்டனர்.
8ம் வகுப்பு வரை கணினி வழி தேர்வு : அரசு பள்ளிகளில் அறிமுகம்
அரசு பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கணினி வழி தேர்வு மற்றும் மதிப்பீடு முறை அறிமுகமாகிறது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, பள்ளிகளில் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்துதல் என, பல புதிய திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.
இதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், புதிய வசதிகள் செய்து தரப்படுகின்றன. இந்த வரிசையில், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், கணினி வழியில் தேர்வும், மதிப்பீடும் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில், எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகம் இறங்கிஉள்ளது. முதல் கட்டமாக, 800 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகளுடன், கணினி வழி தேர்வுக்கான வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும், வினாத்தாளில் கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகையிலான, கேள்விகளும், பதிலுக்கான குறிப்புகளும் இடம்பெறும்.
கேள்விகளுடன், படங்கள், வண்ண குறிப்புகள் இருக்கும். இந்த வினாத்தாள், 'ஸ்மார்ட்' வகுப்பில் கணினி வழியாக வெளியிடப்பட்டு, அதற்கான பதில்களை தேர்வு செய்ய, மாணவர்கள் அறிவுறுத்தப்படுவர். மேலும், மாணவர்களின் விடைத்தாள்களை, 'ஸ்கேன்' செய்து, கணினி மூலமாக திருத்தவும், பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான மாதிரி தேர்வு, ௨௦௧௮ மார்ச்சில் நடக்கும் என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக எம்ஃபில் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் செல்லும் - தமிழக அரசு
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக எம்ஃபில் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் செல்லும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட அரசாணையில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பதிவாளரின் கருத்துருவினை ஆய்வு செய்த பின் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் முழு நேரம் அல்லது பகுதி நேரத்தில் சேர்ந்து பெறப்பட்ட எம்ஃபில் மற்றும் பி.எச்.டி பட்டங்கள், அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Tuesday, December 19, 2017
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித் தேர்வர்கள் டிச.22 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வர்கள் பங்கேற்பதற்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் அந்தந்த கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலமாக டிசம்பர் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்ய டிசம்பர் 29 கடைசி நாளாகும்.
நேரடி தனித் தேர்வர்கள்: பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரடித் தனித் தேர்வர்கள் அனைவரும் பகுதி 1-இல் மொழிப் பாடத்தில் தமிழ் மொழிப் பாடத்தை முதல் மொழிப் பாடமாக தேர்வெழுதுவது கட்டாயம். மேலும், இவர்கள் 1-3-2018 அன்று பதினான்கரை வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதோடு, அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, அறிவியல் செய்முறைப் பயிற்சிக்கு ஏற்கெனவே பதிவு செய்து, பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே, பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.
ஏற்கெனவே தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள்... ஏற்கெனவே பத்தாம் வகுப்பு பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியடைந்தவர்கள், தோல்வியடைந்த பாடங்களை மட்டும் தற்போதுள்ள பாடத் திட்டத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தைப் பொருத்தவரை, செய்முறைத் தேர்வுக்குப் பின்னரே, எழுத்துத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். எனவே, ஏற்கெனவே அறிவியல் பயிற்சி வகுப்பில் சேர்ந்திருத்தல் வேண்டும். இல்லையெனில், இப்போது வழங்கப்படும் சலுகையைப் பயன்படுத்தி, அறிவியல் செய்முறை வகுப்பில் பதிவு செய்யவேண்டும். தேர்வுக் கட்டணம்: பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ. 125 மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ. 50 என மொத்தம் ரூ. 175 கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும்.
பார்வையற்றவர்கள், காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வாய்ப்பு: இயக்குநர் அலுவலகத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித் தேர்வர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, தனித் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் ரூ. 125 கட்டணம் செலுத்தி, செய்முறை பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து டிசம்பர் 22 முதல் 29 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு துறைத் தேர்வுகள்: 23-இல் தொடக்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை அரசு துறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை: மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத் திட்டத்தின்படி, அரசு துறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
கொள்குறி தேர்வு முறை, விரிவாக விடை எழுதும் முறை மற்றும் கொள்குறியுடன் விரிவாக விடை எழுதும் முறை என மூன்று வகைகளில் மொத்தம் 147 தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட OMR தாள் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள், கால அட்டவணை, நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் ஆகிய விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, December 17, 2017
பணி நியமனம் வழங்க நடவடிக்கை தாமதம்:இடைநிலை ஆசிரியராக தேர்வானவர்கள் வேதனை
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணிநியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தாமதமடைவதால், தேர்ச்சி பெற்றவர்கள் வேதனையடைந்துள்ளனர்.நடப்பு கல்வியாண்டில், ஏப்., மாதம் 29ம் தேதி, இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கான, 'ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 நடந்தது. இத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இதுவரை, அரசு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தாமல் உள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் -2, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, பணி நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை துரிதமாக நடக்கிறது. ஆனால், இடைநிலை ஆசிரியர் தகுதிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இப்பணிகள் தாமதமடைவதால், தேர்ச்சி பெற்றும் வேதனையில் உள்ளனர்.இதுகுறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட தகவல்களுக்கும், முறையாக விடை இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தொடக்கக்கல்வி இயக்ககம், காலிப்பணியிடங்களை தெரிவிக்கவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியமும், ஆசிரியர் தேர்வு வாரியமே இது குறித்து முடிவு செய்யும் என, தொடக்கக் கல்வி இயக்ககமும், மாறி மாறி தெரிவித்துள்ளதால், தேர்ச்சி பெற்றவர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
குறிப்பிட்ட காரணங்கள் ஏதுமின்றி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன நடவடிக்கைகளை அரசு தாமதப்படுத்துகிறது என புகார் தெரிவித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, காலிப்பணியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கனகமணி கூறுகையில்,
''பல அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 'கூடுதல் எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ளனர். அதை ஒழுங்குபடுத்திய பின், சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள், அவ்வப்போது தொடர்ந்து அனுப்புகிறோம்,'' என்றார்.
Saturday, December 16, 2017
மாணவர்கள் ஆதார் எண்ணை டிச.31-க்குள் இணைக்க உத்தரவு
தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் 'எமிஸ்' எண்ணோடு, ஆதார் எண்ணை டிச.31-க்குள் 100 சதவீதம் இணைத்து அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை போலியாக காண்பித்தல், நலத்திட்ட உதவிகளில் முறைகேட்டில் ஈடுபடுதல் உள்ளிட்டவையை களைய 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டது.
மாணவர்களுக்கு தனி இலக்க அடையாள எண் வழங்கப்பட்டு, அவர்களது பெயர், ரத்த வகை, பெற்றோர் பெயர், வருமானம், முகவரி, புகைப்படம், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 'எமிஸ்' எண்ணோடு மாணவர்களின் ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 'எமிஸ்' எண்ணோடு இதுவரை ஆதார் எண் பதியாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் டிச.31-க்குள் ஆதார் எண்ணை பதிவு செய்து 100 சதவீத பணியை நிறைவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: 'எமிஸ்' எண்ணோடு ஆதாரை இணைப்பதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்படும். 'எமிஸ்' அடிப்படையில் வருகின்ற கல்வி ஆண்டில் பள்ளி கல்வி துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கான பிரத்யேக அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் விபரங்களை எங்கிருந்தும் கண்காணிக்கலாம். வேறு பள்ளிக்கு மாணவர் மாற்றம் கேட்டால், 'எமிஸ்' இணையதளத்தில் மாணவரை மாற்றம் செய்தால் மட்டுமே, புதிய பள்ளியில் சேர்க்க முடியும், என்றார்.
Friday, December 15, 2017
TNPSC GROUP.IV விண்ணப்பிக்க காலக்கெடுப்பு நீட்டிப்பு
குரூப்-4 தேர்வுக்கு வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) மா.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -IV 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிக்கையினை 14.11.2017 அன்று வெளியிட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க14.11.2017 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 13.12.2017 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இத்தேர்வுக்கென, இதுவரை தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக 18.33 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் இதுவரை நடந்த தேர்வுகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களைக்காட்டிலும் இத்தேர்வுக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இருப்பினும் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையிலும் இதர விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் இந்த குரூப்-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 20.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்வுக் கட்டணம் செலுத்த 21.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இப்பதவிக்கான தேர்வினை குறிப்பிட்டுள்ள 11.02.2018 ஆம் தேதியன்று நடத்த பல்வேறு ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டபடியாலும், குறுகிய கால இடைவெளியே உள்ளபடியாலும், மேற்படி தேர்விற்கு இதன்பிறகு எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
எனவே அனைத்து மாவட்டத்தையும் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத்தேவையில்லை. அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டால் போதுமானது. தேர்வுநடக்கும் தேதியான 11.02.2018ல் எவ்வித மாற்றமுல் இல்லை'' என்று விஜயகுமார் தெரிவித்துள்ளார்
Thursday, December 14, 2017
பேராசிரியர் தகுதிக்கான 'செட்' தேர்வு அறிவிப்பு
பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, வரும், 18ல், துவங்குகிறது.தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகள், கல்லுாரிகளில் பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, 'நெட்' அல்லது தமிழக அளவிலான, 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தமிழக 'செட்' தேர்வை, அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை, இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்வை, தெரசா பல்கலையே நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு, தெரசா பல்கலையின்,www.motherteresawomenuniv.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான, செட் தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்க உள்ளது.இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும், 18ல், துவங்குகிறது. பிப்.,9க்குள் விண்ணப்பிக்க, தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கூடுதல் விபரங்களை, தெரசா பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.