இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, October 29, 2015

வாக்காளர் சரிபார்ப்பு பணி'மொபைல் ஆப்ஸ்' அறிமுகம்


வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்களது அறிக்கையை, 'மொபைல் ஆப்ஸ்' மூலம், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அறிக்கை:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 16.94 லட்சம்; நீக்கம் செய்ய, 1.76 லட்சம்; திருத்தம் செய்ய, 2.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களில் உள்ள விவரம், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது;

விண்ணப்பங்களும், 'ஸ்கேன்' செய்யப்பட்டுள்ளன. இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து, 'செக் லிஸ்ட்' தயார் செய்யப்படுகிறது. இது, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வழங்கப்படும். அவர்கள், சம்பந்தப்பட்ட வாக்காளர் வீட்டுக்கு சென்று, விண்ணப்பத்தில் உள்ள விவரம் உண்மையா என, ஆய்வு செய்வர். தவறு இருந்தால், திருத்தம் செய்வர். ஆய்வு விவர அறிக்கையை, மொபைல் ஆப்ஸ் மூலம் பதிவேற்றம் செய்து, நேரடியாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்புவர்.இதனால், நேரம் மிச்சமாகும். மேலும், தங்களுடைய விண்ணப்பம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் அறியலாம். மொபைல் எண் கொடுத்த வாக்காளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு


சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது.பெண் கல்வியின் முக்கியத்துவம், தனித்திறன் வளர்ப்பு, உடல் நலன் மற்றும் சுயதொழில் போன்ற தலைப்புகளில், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

ஆசிரியைகள் 'ஓவர் கோட்' திட்டம் 'பணால்!'


பள்ளிகளில், 'ஓவர் கோட்' அணியும் திட்டத்திற்கு ஆசிரியை களிடம் வரவேற்பில்லை; அதனால், இத்திட்டம், ஒரு பள்ளியுடன் கைவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தவறான எண்ணமுடைய சில ஆசிரியர்களின் கேலி, கிண்டல் மற்றும் தவறான பார்வையில் இருந்து தப்பிக்க, ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது. மதுரை மாவட்டத்தில், ஆசிரியைகளுக்கு, 'ஓவர் கோட்' என்ற மேலங்கி அணியும் முறை, ஒரு பள்ளியில் மட்டும், ஒரு மாதத்திற்கு முன் அறிமுகமானது.

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, வன்னிவேலன் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தான் இந்த திட்டம் அறிமுகமானது. 'படிப்படியாக மற்ற பள்ளிகளிலும், இந்தத் திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்த தடையில்லை' என, கல்வித்துறை அதிகாரிகளும் வாய்மொழியாக ஒப்புதல் அளித்தனர்.ஆனாலும், இதுவரை எந்த பள்ளியிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவில்லை. இதுபற்றி விசாரித்த போது, 'ஆசிரியைகளே, 'ஓவர் கோட்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அவர்களுக்கு இதில் ஆர்வம் இல்லை' என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆசிரியைகள் சிலர் கூறும்போது, 'ஒரு சில மாணவர்கள் தவறாக நடக்கின்றனர் என்பதற்காக, இதுவரை பின்பற்றிய உடை விதிகளை மாற்ற எங்களுக்கு ஆர்வமில்லை. மாணவர்களை திருத்த வேண்டும்; பெற்றோருக்கு அறிவுரை வழங்கி, அவர்களை நல்லவர்களாக வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 'மாறாக, இதுபோன்ற தடுப்புத் திட்டங்கள் கொண்டு வந்தால், தவறான மாணவர்களின் செயல்பாடு அதிகரிக்குமே தவிர, கட்டுக்குள் வராது' என்றனர்.

Tuesday, October 27, 2015

அனைத்து நாள்களிலும் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு


பள்ளிகளில் விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட் டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

ஒரு பள்ளியில் ஆதார் எண்ணுக்குப் பதிவு செய்யாத மாணவர்களின் எண்ணிக்கை 100 அல்லது அதற்கு மேல் இருந்தால், அந்தப் பள்ளியில் ஆதார் எண் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வகைப் பள்ளிகளிலும் இந்தப் பணியை சிறப்பாக நடத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முதன்மை ஒருங்கிணைப்பாளராக இருந்து, மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். பள்ளி வேலைநாள்களில் பள்ளி தொடங்கும் நேரம் முதல் மாலை 5.30 மணி வரையில் முகாம் நடத்தப்பட வேண்டும்.

விடுமுறை உள்பட அனைத்து நாள்களிலும் நடத்த வேண்டும். பள்ளி வேலை நாள்களில் வேலை நேரம் முடிந்த பின்பும், அனைத்து விடுமுறை நாள்களிலும் பொதுமக்கள் ஆதார் எண் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். பள்ளி ஆசிரியரையும், வகுப்பறையும் ஒதுக்க வேண்டும்: ஆதார் முகாம்களுக்கான ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர்களில் ஒருவரை அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் நியமிக்க வேண்டும். ஆதார் எண் பதிவு செய்யும் கருவிகளைப் பொருத்த ஒரு வகுப்பறைகளை ஒதுக்கி தேவையான வசதிகளைச் செய்ய வேண்டும். பதிவுகளை மேற்கொள்வதற்கான கால அட்டவணையையும் தயாரிக்க வேண்டும். பதிவு செய்யப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக இருக்கிற பள்ளிகளைக் கண்டறிந்து, அந்தப் பள்ளிகளுக்கு அருகில் நடைபெறும் ஆதார் பதிவு செய்யும் முகாமை தொடர்பு மையமாக அமைத்து, இந்த மாணவர்களுக்கு ஆதார் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 100-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையைக் கண்டறிந்து அந்தப் பள்ளிகளுக்கு அருகில் நடைபெறும் எந்த முகாமில் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்ற கால அட்டவணையை மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஆகியோர் தயார் செய்ய வேண்டும். அந்தப் பள்ளிகளுக்கும் அட்டவணையை முன்கூட்டியே அளிக்க வேண்டும். முக்கியமான இந்தப் பணியில் தனிக் கவனம் செலுத்தி, தங்கள் மாவட்டத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஆதார் அட்டை பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்து 100 சதவீத இலக்கை அடைந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய திறனாய்வு தேர்வு இன்று 'ஹால் டிக்கெட்'


மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியாகிறது. இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு, இன்று முதல், 'ஹால் டிக்கெட்' வழங்கப்படும். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர் மூலம், www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ரகசிய எண் மூலம், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம்


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் நடைபெற உள்ளன. அதற்கான, வினாத்தாள் தயாரிக்கும் பணியை, தேர்வுத் துறை துவங்கியுள்ளது. இதற்காக, ஐந்துக்கும் மேற்பட்ட ரகசிய குழு அமைத்து, ஒவ்வொரு பாடத்துக்கும், பகுதிவாரியாக கேள்விகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும், நுாற்றுக்கு நுாறு, 'சென்டம்' எடுக்கும் மாணவர்; மாநில, 'ரேங்க்' பெறும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இதற்கு எளிமையான கேள்விகளும், மதிப்பெண்ணில் காட்டப்படும் தாராளமும் காரணம். எனவே, மாணவர்கள் பாடங்களை புரிந்து படித்துள்ளனரா அல்லது மனப்பாடம் செய்துள்ளனரா என, அறிய முடிவதில்லை. இதை, சோதனை செய்யும் விதமாக, இந்த ஆண்டு வினாத்தாள்களை சற்று கடினமாக தயாரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதனால், வினாத்தாள் தயாரிக்கும் ஆசிரியர்களுக்கு, பாடங்களின் உள் அம்சங்களில் இருந்து, புதிய கேள்விகள் கேட்குமாறு, உத்தரவிடப்பட்டு உள்ளது.எனவே, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு வினாத்தாள், கடினமாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. எனவே, முந்தைய ஆண்டு தேர்வுகளின் வினாத்தாள், கெய்டுகள், புத்தகத்தில் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள வினாக்களை படித்தால் மட்டும் போதாது.

பாடப்புத்தகத்தில் உள்ள வழக்கமான கேள்விகள் மட்டுமின்றி, பாடத்தின் முழு சாராம்சத்தையும் புரிந்து படித்தால்தான், அதிக மதிப்பெண் பெற முடியும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கிடையில், பாடப்புத்தகம் முழுவதையும், மாணவர்களை படிக்க வைக்குமாறு, அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவுறுத்தி உள்ளார்.-

Monday, October 26, 2015

எஸ்.எஸ்.ஏ., திட்டம் ஏமாறும் மாணவர்கள்


மத்திய அரசின் அனைவருக்கும்கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு முன், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதலில் பயிற்சி தரப்பட்டது.ஆனால், இந்த பயிற்சியில், அரசு உதவிபெறும் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், அனைத்து அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களும் பயன்பெற வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், எஸ்.எஸ்.ஏ., திட்டங்களை செயல்படுத்தாமல், எங்களது பள்ளிகள் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால், மாணவர்கள் ஏமாற்ற மடைகின்றனர். எனவே, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தை, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்த, திட்ட இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Sunday, October 25, 2015

பள்ளிகளில் பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு


வட கிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதையடுத்து, பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:- பருவ மழை தொடங்க உள்ளதையடுத்து, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் பள்ளிக் கல்வி அலுவலர்களும், தலைமையாசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர்த் தொட்டிகள் ஆகியன மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என உறுதி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது எனவும், இடி, மின்னல் ஆபத்து குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் மின் அழுத்த மின் கம்பங்கள், அறுந்து தொங்கும் கம்பங்கள் இருந்தால் அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும். சிதிலமடைந்த கட்டடங்கள், சுவர்கள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், துண்டித்த நிலையில் உள்ள மின்சார கம்பிகள் இல்லாதவாறு தலைமை ஆசிரியர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் விழும் நிலையில் உள்ள மரங்கள், பழுதடைந்த சுவர்கள், வகுப்பறை, கழிவறை, சுற்றுச்சுவர்கள் இருந்தால் அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் கட்டடப் பணிகள், புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்லத் தடை விதிக்கவும் பள்ளங்களைச் சுற்றிப் பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்துக்குள் வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தலைமையாசிரியர்களால் எடுக்கப்பட வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Saturday, October 24, 2015

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: மேல்முறையீடு செய்வதில் புதிய நடைமுறை:தகவல் ஆணையம் நடவடிக்கை


தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், இரண்டாவது முறை மேல்முறையீடு செய்வதற்கான புதிய நடைமுறையை தகவல் ஆணையம் வகுத்துள்ளது. அரசுத் துறை சார்ந்த தகவல்கள், விவரங்களை கேட்டுப் பெறுவதற்கான உரிமையை வழங்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், இரண்டு முறை மேல் முறையீடு செய்யலாம்.

இந்த நிலையில், இரண்டாவது முறை மேல்முறையீடு தாக்கல் செய்வது குறித்து எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், புதிய வழிமுறைகளை தகவல் ஆணையம் வகுத்துள்ளது. அதன் விவரம்: 2-ஆவது முறை மேல்முறையீட்டுக்கு கட்டணம் ஏதுமில்லை. விண்ணப்பம் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்யப்பட்டதாகவோ அல்லது தெளிவாகக் எழுதப்பட்டதாகவோ இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் கையெழுத்திட வேண்டும். இது சட்டப் பூர்வமான நடவடிக்கை என்பதால், தனிநபர் பெயர்களைக் கொண்ட தாளிலோ அல்லது மனுவுக்குத் தொடர்பில்லாத விவரங்களைச் சேர்ப்பதோ கூடாது. மேல்முறையீட்டு விண்ணப்பம் தலைமை தகவல் ஆணையாளர் அல்லது மாநில தகவல் ஆணையர்கள் பெயருக்கு அனுப்பக் கூடாது. திரும்பப் பெறப்படுவது எப்போது? மேல்முறையீட்டு மனுக்கள் சில காரணங்களுக்காக திரும்பப் பெறப்படலாம். அதன்படி, முதல் கட்டமாக பொதுத் தகவல் அலுவலருக்கோ அல்லது மேல்முறையீட்டு அலுவலருக்கோ மனு அனுப்பப்படாமல் ஆணையத்தில் நேரடியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் நிராகரிக்கப்படும். முதல் மேல்முறையீட்டு அலுவலரிடம் இருந்து பதில் வரப் பெற்ற அல்லது வரப் பெற வேண்டிய தேதிக்கு 90 நாள்கள் கழித்துச் செய்யப்படும் மேல்முறையீடு மனுக்கள், தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாதவை, மாநில தகவல் ஆணைய வரம்புக்குள் வராத அமைப்புகள், கையெழுத்திடாத, மேல்முறையீடு படிக்கக் கூடிய அல்லது புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இல்லாமல் இருந்தால் நிராகரிக்கப்படும்.

புதிதாக உறுதிமொழி: இரண்டாம் முறையீட்டில் பல புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டதுடன், வரையறுக்கப்பட்ட உறுதிமொழிப் படிவத்திலும் கையெழுத்திட வேண்டும் என தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், "விண்ணப்பதாரராகிய நான் அளித்த விவரங்கள், தகவல்கள் அனைத்தும் எனக்கு நேரடியாகத் தெரிந்தவை. அவை அனைத்தும் நான் அறிந்த வகையில் உண்மை. சரியானவை என்றும் நம்புகிறேன் என இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்' எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே பொருள் குறித்து ஆணையத்திடம் எந்த மேல்முறையீடும் செய்யவில்லை என்றும் உறுதியளிப்பதாக அந்தப் படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வலர்கள் எதிர்ப்பு: புதிய நடைமுறைகளுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளளனர். "தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவே மேல்முறையீடு செய்யப்படுகிறது, மனுதாரர்கள் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையென உறுதிமொழி அளிப்பதென்றால் எதற்காக மனு செய்ய வேண்டும்' என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

டிச.,2ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்


எஸ்.பி.ஐ., வங்கியுடன் இணைந்துள்ள துணை வங்கிகளை நீக்கவும், அரசு வழிகாட்டுதல்படி கருணை அடிப்படையில் செய்யப்படும் பணி நியமனங்களை நீடிக்க வலியுறுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச.,2ல் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறும் என, அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தர சிறப்பு பயிற்சி


மாணவர்களுடன், ஆசிரியர்களுக்கும் ஒழுக்கத்தை கற்று கொடுக்க, வரும், 27ல், சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தவும், மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன், நற்பண்புகள் மற்றும் தனித்திறனை வளர்க்கும் வகையில் பாடம் நடத்தவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஆசிரியர்களுக்கு, முதற்கட்டமாக ஒழுக்கம் மற்றும் நற்பண்பு மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் டி.பி.ஐ., வளாகத்திலுள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், 27, 28ல், பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அடிப்படை கணினி அறிவை வளர்க்கும் சிறப்பு பயிற்சியை, மூன்று நாட்கள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும், 50 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஆசிரியர்களுக்கு தீபாவளி முன்பணம் சந்தேகம்


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை பண்டிகை முன்பணம் என, 5,000 ரூபாய் வழங்கப்படும். தீபாவளியை ஒட்டிதான், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், அதிக அளவில், முன்பணத்துக்கு விண்ணப்பிப்பர். அதேபோல், அனைத்து பள்ளிகளில் இருந்தும், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு, விண்ணப்பங்கள் வந்துள்ளன, ஆனால், இதுவரை நிதித் துறை அனுமதி வரவில்லை. அதனால், முன்பணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:வழக்கமாக, தீபாவளிக்கு, 15 நாள் முன்பே, முன்பணம் வழங்கப்பட்டு விடும். ஆனால், இன்னும் நிதித் துறை ஒதுக்கீடு உத்தரவு வரவில்லை என்கின்றனர். ஏற்கனவே, அகவிலைப்படி உயர்வுக்கான, நான்கு மாத நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளதால், பண்டிகை முன்பணம் கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

Friday, October 23, 2015

தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் கட்டடங்கள் கட்டும் பணி தொடக்கம்


தமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் ரூ.555 கோடியில் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட தனது 75 சதவீதப் பங்கான ரூ.518 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பள்ளிக்குக் கட்டடம் கட்ட அனுமதிக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லாததால், அந்தப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. மத்திய அரசு ஒரு சதுர அடிக்கு ரூ.600 ஒதுக்குகிறது. ஆனால், கட்டடம் கட்டுவதற்கு ஒரு சதுர அடிக்கு ரூ.1,300 வரை செலவாகிறது. இந்தப் பள்ளிகளுக்கான கட்டடங்களைக் கட்டுவதற்காக கூடுதல் நிதியையும் சேர்த்து மாநில அரசு ரூ.1,263 கோடி ஒதுக்கீடு செய்யும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, முதல் கட்டமாக 344 பள்ளிகளைக் கட்டுவதற்காக இப்போது தமிழக அரசின் பங்காக ரூ.380 கோடி, மத்திய அரசின் பங்காக ரூ.175 கோடி என ரூ.555 கோடி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டது. இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டடங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரூப் 2ஏ விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்படுமா?


தமிழக அரசின், 33 துறைகளில், குரூப் - 2 ஏ பதவியில் காலியாக உள்ள, 1,863 இடங்களுக்கு, டிசம்பர், 27ல் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே தேதியில், மத்திய அரசின், 'நெட்' தேர்வு நடக்க உள்ளதால், குழப்பம் ஏற்பட்டது.இதையடுத்து, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி, தேர்வு தேதியை ஜனவரி, 24க்கு தள்ளிவைத்தார். 'கூடுதலாக, மூன்று துறைகளில், 84 காலியிடங்களும் சேர்த்து நிரப்பப்படும்' என, அறிவித்துள்ளார்.ஆனால், விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை, டி.என்.பி.எஸ்.சி., நீட்டிக்கவில்லை. நவம்பர், 11, இரவு, 11:59க்குள் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவ.16ம் தேதி முதல் 2ம் பருவ இடைத்தேர்வு துவக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நவ., 16ம் தேதி முதல், இரண்டாம் பருவ இடைத்தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ தேர்வு மற்றும் கற்பித்தல் முறை அமலாகிறது. 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை ஆண்டு தேர்வு நடத்தப்படுகிறது. காலாண்டுத் தேர்வு முடிந்து, பள்ளிகளில் இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, தீபாவளி விடுமுறைக்கு பின், இரண்டாம் பருவ இடைத்தேர்வை நடத்த, அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

நவ., 16ம் தேதி தேர்வுகளை துவங்கி, 20ம் தேதிக்குள் முடிக்கவும், அதன்பின், அரையாண்டுத் தேர்வுக்கான பாடப்பகுதிகளை முடிக்கவும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 'இந்தத் தேர்வுக்கு மாவட்ட அளவில், மாவட்ட தேர்வுக்குழு மூலம், ஒரே வகையான வினாத்தாள்கள் வழங்கப்படும்' என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.