Click below
http://www.tndge.in/docs/DEE%20June%202015%20Private%20Application.pdf
ஆசிரியர் தகுதித் தேர்வான, டி.இ.டி., 2013 தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் பெறாதவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ.,வை அணுகலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
டி.ஆர்.பி.,யால், 2012 - 13ல் நடத்தப்பட்ட, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து, 'பிரின்ட் அவுட்' எடுத்துக் கொண்டனர். சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களின் சான்றிதழ்கள் மட்டும், பதிவிறக்கம் செய்யப்பட்டு, தேர்வர்கள், தேர்வு எழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட, முதன்மை கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
அந்த தேர்வர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை நேரில் அணுகி, பிப்., 14ம் தேதி வரை, அனைத்து வேலை நாட்களிலும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். டி.இ.டி., 2013 தேர்வில், குறைந்த பட்சம், 90 மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் எப்படி படிக்கின்றனர்; பாடங்களை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து, ஆய்வு நடத்துமாறு, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,), மாநில அரசுகளை அறிவுறுத்திஉள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பள்ளி களில், வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆய்வு நடத்தப்படுகிறது. மொழிப் பாடங்கள், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் ஆய்வு நடக்கும். இதற்கான பொறுப்பு, தேர்வுத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கான கேள்வித் தாள்களை, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் வழங்கிஉள்ளது. இந்த ஆய்வுக்குப் பின் 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம், கற்பித்தல் முறைகள் போன்றவற்றின் நிலைகளை அறிந்து கொள்ளலாம்.
பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தை விரிவாக்கம் செய்ய அஞ்சல்துறை முடிவெடுத்துள்ளது. இதற்காக கிராமப்புற மற்றும் சிறு அஞ்சல் நிலையங்களிலும் அத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்திய அஞ்சல் துறை, கடிதப்போக்குவரத்து மட்டுமன்றி ஏராளமான வணிக ரீதியான சேவைகளையும் வழங்கி வருகிறது. இதனடிப்படையில் அஞ்சலக சேமிப்புத்திட்டம், அஞ்சலக ஆயுள் காப்பீடு உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு நிறுவனம் வழங்கும் திட்டங்கள் என்பதால், இவற்றின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் நாடு முழுவதும் ஏராளமான பொது மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த நிதி சேவைகளில் மிக முக்கியமானதாக சொல்லப்படுவது பொது வருங்கால வைப்பு நிதியாகும். சேமிப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இத் திட்டத்தினை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பொது வருங்கால வைப்பு நிதியின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு வரிச்சலுகைகளும் உண்டு. இத்தகைய சாதக அம்சங்களை கொண்ட இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டுமே 1.5 லட்சம் கணக்குகள் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ 2300 கோடி ஆகும். இந்நிலையில் இந்த சேவையை பெற ஏராளமானவர்கள் கோரிக்கை விடுப்பதால், சிறிய மற்றும் கிராமப்புற அஞ்சல் நிலையங்களிலும், இது விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
அஞ்சலகங்களில் வழங்கப்பட்டு வரும் சேவைகளில் மிகவும் பயனுள்ளது பொது வருங்கால வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் பணத்துக்கு வரிச்சலுகைகளும் உள்ளன. இதன் வட்டித்தொகை அதிகம் என்பதாலும் இந்த திட்டத்தின் கீழ் ஏராளமானவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தில் சேர மேலும் ஏராளமானோர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த சேவை தலைமை அஞ்சல் நிலையங்கள், பிரிவு அலுவலகங்கள் போன்ற அதிகம் பேர் பணிபுரிகிற இடங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ஆனால் மிகச்சிறிய ஊர்களில் உள்ள சிறிய அஞ்சல் நிலையங்களில் இச்சேவை பயன்பாட்டில் இல்லை. ஆனால் அங்குள்ளவர்களும் இந்த சேவை வேண்டி கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், ஒரு அஞ்சல் அதிகாரி மற்றும் அஞ்சல் காரரை கொண்ட சிறு தபால் நிலையங்களிலும் இச்சேவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இத்திட்டம் முதற்கட்டமாக தற்போது சென்னை மண்டலத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதையடுத்து விரைவில் தமிழகம் முழுவதும் பரவலாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
'அரையாண்டு தேர்வில், தேர்ச்சி பெறாத, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலை, 8:00 மணி முதல் சிறப்பு வகுப்பு நடத்தி, பயிற்சியளிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 100 சதவீத தேர்ச்சி என்ற இலக்குடன் பள்ளிக்கல்வித் துறை செயல்பட்டு வருகிறது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளும், தமிழக அளவில், ஒரே மாதிரியான வினாத்தாளில் அமைவதால், அதன் தேர்ச்சி விகிதம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
இதில், தற்போது நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில், பிளஸ் 2 மாணவ, மாணவியரில், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட தேர்ச்சி இருந்தாலும், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் எதிர்பார்த்தமைக்கும் குறைவாகவே இருந்தது. எட்டாம் வகுப்பு வரை, ஆல் பாஸ் என்பதால், 10ம் வகுப்பில், 100 சதவீத தேர்ச்சியை கொண்டு வருவது, அரசு பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், 65 சதவீத அளவுக்கே இருக்கும் என்பதால், படிப்பில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சியளிக்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
அரையாண்டு தேர்வில், தேர்ச்சி பெறாத மாணவர்களை பொதுத்தேர்வில், வெற்றி பெறச்செய்வதே நம் நோக்கம். 10ம் வகுப்பு மாணவர்களை காலை, 8:00 மணிக்கே, பள்ளிக்கு வரவழைத்து, குறிப்பிட்ட ஆசிரியர்களை கொண்டு, அமைதியாக படிக்கச்செய்ய வேண்டும். திறமையான மாணவர் தலைமையில், நடுநிலை, கடைநிலை மாணவரும் இடம்பெறும் வகையில், குழு பிரித்து, அந்த குழுவுக்கு தினமும் படிக்க வேண்டிய பகுதிகளை பாட ஆசிரியர் பிரித்து தர வேண்டும். சிறுவினா, குறுவினா, பெருவினா, மனப்பாட பகுதிகளை ஒப்புவித்து, பின் எழுதிக்காட்ட செய்து, ஆசிரியர் திருத்த வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும், பள்ளி வளாகத்தில் மாலை, 6:00 மணிக்கு மேல் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது. உரிய நேரத்தில் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்க உள்ள பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கான, தேர்வு மையம், ஆசிரியர்கள், பாடவாரியாக மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட செய்முறை தேர்வு குறித்த விவரங்களை அனுப்பி வைக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், மார்ச் மாதத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது.
இதனால், பிப்ரவரி மாதத்துக்குள் செய்முறை தேர்வுகளை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பிப்ரவரி 5ம் தேதி துவங்கி, பிப்ரவரி 23ம் தேதிக்குள் முடிக்கும் வகையில், செய்முறை தேர்வு நடத்திட, ஆயத்த பணி துவங்கியுள்ளன. தேர்வு மையம் அமைப்பது, தேர்வுக்கு ஈடுபடுத்தப்படும் ஆசிரியர் நியமனம், இணை மையம் உள்ளிட்ட பணிகளில், கல்வித்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாட வாரியாக தேர்வெழுதும் மாணவர் எண்ணிக்கை, பள்ளிகளில் உள்ள ஆய்வக வசதி உள்ளிட்டவை குறித்த விவரங்களையும், தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் திரட்டப்பட்டு, செய்முறை தேர்வுக்கான மையங்கள், அதில் பணிபுரிய வேண்டிய ஆசிரியர்கள் உள்ளிட்டவை நியமிக்கப்படும்.
அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகள் 'புரஜெக்டர்' வசதியுடன் 'ஸ்மார்ட் கிளாஸ்' களாக மாற்றம் பெற்று வருகின்றன. ஆனால், உயர்நிலை பள்ளிகளில் இவ்வசதியின்றி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் தவிக்கின்றனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 5 டெஸ்க்டாப், ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள 5 லேப்டாப், இன்டர்நெட் வசதி, ரூ.35 ஆயிரத்தில் புரஜெக்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இது தவிர 'டி.வி.டி', பிளேயர்களும் வழங்கியுள்ளனர். மதிய வேளையில் மாணவர்கள் இவ்வசதிகளை பயன்படுத்துகின்றனர். ஆறு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கம்ப்யூட்டர் சார்ந்த அடிப்படை கல்வியை பெறுகின்றனர். ஆனால், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத் தின் கீழ் உயர்நிலை பள்ளிகளில் இந்த வசதிகள் செய்துதரப்படவில்லை. இதன் காரணமாக நடுநிலையில் இருந்து உயர்நிலை பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களால் கம்ப்யூட்டர் கல்வியை தொடர முடியவில்லை. பத்தாம் வகுப்பு அரசு தேர்வு எழுதும் மாணவர்களின் விபரத்தை கூட கம்ப்யூட்டரில் ஏற்ற முடியாமல் பல பள்ளிகள் தவிக்கின்றன.
உயர்நிலை பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது: எஸ்.எஸ்.ஏ., சார்பில் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு பல வசதிகள் உள்ளன. அதில், முக்கியமானது 'ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம். ஆனால், உயர்நிலை பள்ளிகளுக்கு ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் வசதிகள் செய்துதரவில்லை, என்றார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் வரும் 19ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகின்றன.
முன்னதாக, அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறை தேர்வுகளை தொடங்க வேண்டும் என்று தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் மதிய வேளையில் நடக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த தேதி மாறுபடும். இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் பட்டியல்களை தேர்வுத்துறைக்கு கடந்த வாரம் வந்து சேர்ந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு மாணவ, மாணவியருக்கான தேர்வு எண்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடக்கிறது. இந்த பணி முடிந்ததும் அந்தந்த பள்ளிக்கு மாணவர்கள் பட்டியல் தேர்வு எண்களுடன் வந்து சேரும்.
இதற்கிடையே பள்ளிகள் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தமிழ் வழி அல்லாத மாணவ, மாணவியர், தேர்வுக் கட்டண சலுகை பெற முடியாதவர்கள் 19ம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தேர்வு கட்டணத்தை நேரடியாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாணவ, மாணவியர் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உரிய நேரத்தில் கட்டணத்தை வசூலித்து அதை தேர்வுத்துறைக்கு அனுப்பவும் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பும் வரி உயர்வும் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 42 பைசாவும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 25 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 ரூபாய் 91 பைசாவாகவும் டீசல் விலை லிட்டருக்கு 48 ரூபாய் 26 பைசாவாகவும் குறைந்திருக்கிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து சரிந்து வருவதால் தற்போது அறிவிக்கப்ட்டுள்ளதை விட இரண்டு மடங்கு விலை சரிவு ஏற்பட்டிருக்கும்.
ஆனால் பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 2 ரூபாய் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. நான்காவது முறையாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை குறைவின் பலன் நுகர்வோருக்கு முழுமையாக கிடைக்கவில்லை.
வாரியத்தின் சார்பில், 2012-13ல் நடந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ், வரும் 19ம் தேதி முதல் முதன்மை கல்வி அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. இத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டது. தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
இதில் பெரும்பாலான தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொண்டனர். சரியான முறையில் பதிவிறக்கம் செய்துகொள்ளாத ஆசிரியர்களின் தகுதி சான்றிதழ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 2012-13 கல்வியாண்டில் 150க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்று, இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்கள், உரிய ஆதாரத்தினை காண்பித்து, வரும் 19ம் தேதி முதல் பிப்., 14ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.
பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்காக சென்னையில் 300 மையங்கள் அமைக்க தேர்வு துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. முன்னதாக, அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 5 அல்லது 6ம் தேதிகளில் செய்முறை தேர்வுகளை தொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 406 மேல்நிலை பள்ளிகளில் அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் 50 ஆயிரம் மாணவ&மாணவியர் செய்முறை தேர்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்காக சென்னையில் 300 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. செய்முறை தேர்வில் 30 மதிப்பெண்கள் புறமதிப்பீட்டுக்கும், 20 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டுக்கு தரப்பட்டுள்ளன. இரண்டிலும் சேர்த்து 40 மதிப்பெண்கள் எடுத்தால்தான் செய்முறை தேர்வில் மாணவ மாணவியர் தேர்ச்சி பெற முடியும். அதாவது செய்முறை தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெறவில்லை என்றால் தேர்ச்சிபெற முடியாது.