இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, January 17, 2015

தேசிய வாக்காளர் தினம்

பள்ளி, கல்லூரிகளில் தேசிய வாக்காளர் தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி கவர்ச்சிகரமான பரிசுகளை அளிக்கவும் ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் சிறப்பு விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும். இதை, மாவட்ட தேர்தல் அதிகாரியோ அல்லது தேர்தல் நடத்தும் அதிகாரியோ மேற்கொள்வார். இந்த விழாவில் பங்கேற்போருக்கு, "வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம்- வாக்களிக்கத் தயாராவோம்' என்ற வாசகங்கள் அடங்கிய வில்லைகள் (பேட்ஜ்கள்) வழங்கப்படுகிறது. பஞ்சாயத்து அமைப்புகள், கல்வி நிலையங்கள், நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்தும் தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தின் போது, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களைச் சேர்த்த இளம் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும். நிகழாண்டு எளிதில் கிழிந்து விடாத வகையில், பிளாஸ்டிக்காலான அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு: மேலும், வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பழைய வாக்காளர் அட்டைகளைத் திருப்பி அளித்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்காக விண்ணப்பங்களை அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதை ஊக்குவிக்கவும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தவும் கல்லூரிகளில் இளைய வாக்காளர்கள் தினம் கொண்டாடப்படும். மேலும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சிறப்புப் போட்டிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கி பாராட்ட வேண்டும். இது தவிர, பள்ளி மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வுப் பேரணி உள்ளிட்டவற்றையும் நடத்தலாம். இளைய சமுதாயத்தினர் இணையதளங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால், இணைய வழியிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யலாம். வெற்றி பெற்றவர்களின் பட்டியலை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பெண் வாக்காளர்களை அதிகரிக்க... வாக்காளர் பட்டியலில் பெண் வாக்காளர்களை அதிகரிக்க பல்வேறு உத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக திருமணமாகும் பெண்கள், திருமணமாகும் இடத்திலேயே தங்களது பெயரை உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், பழைய இடத்திலுள்ள பெயரை நீக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமுதாயத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி அனைத்துத் தரப்பினரையும் ஈர்த்த பெண்களைக் கொண்டு பெண் வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அரசுப்பள்ளிகளில் கூடுதலாக 6000 கழிப்பறைகள்

அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கூடுதலாகக் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு கழிப்பறை ரூ.35 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து இந்தப் பணிகளை அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் மேற்கொண்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதிகள் தொடர்பாக கடந்த 2013-14 ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தகவல்களை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 1,442 பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறை வசதியும், 4,278 பள்ளிகளில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதியும் இல்லாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மாவட்ட கல்வித் தகவல் முறையின் கீழ் இந்தத் தகவல் கிடைத்ததும் ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து பள்ளிகளில் புதிதாக கழிப்பறைகள் கட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதேபோல், பயன்படுத்தப்படாமல் உள்ள 300 கழிப்பறைகளிலும் சிறிய அளவிலான பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 490 கழிப்பறைகள்... அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு 490 கழிப்பறைகள் புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கழிப்பறையும் தலா ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளும் விரைவில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த நிதியாண்டில் 474 கழிப்பறைகள் இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டன. புதிய பள்ளிகள் பெரும்பாலும் கழிப்பறைகளுடன் கட்டப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நபார்டு வங்கி நிதியுதவியுடன்... தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 656 கழிப்பறைக் கட்டடங்கள் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன. இதற்கான நிதியுதவியை நபார்டு வங்கி வழங்குகிறது. உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என்பதால் அதிக மாணவர்களுக்கான கழிப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. எனவே, இந்தக் கட்டடங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

10ம் வகுப்பு மாணவர் கற்றல் அடைவுத்திறன் ஆய்வு

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. 10}ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது, அவர்கள் பாடத்திட்டங்களில் உள்ள பாடங்களை எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பது தொடர்பாக ஆய்வு நடத்துமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) அறிவுறுத்தியுள்ளது. மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல் ஆகியப் பாடங்களை மாணவர்கள் எந்த அளவுக்கு புரிந்து கொண்டுள்ளனர் என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு நடைபெற உள்ளது.தமிழகத்தில் இந்த ஆய்வு நடத்தும் பொறுப்பு அரசுத் தேர்வுகள் இயக்ககத்திடம் வழங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்துக்குள் இந்த ஆய்வு முடிக்கப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வுக்கான மாதிரி கேள்வித்தாள்களை தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் வழங்கியுள்ளது. இந்த ஆய்வை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கற்றல் அடைவுத் திறன் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்போதுதான் முதல் முறையாக 10}ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆய்வுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள 10}ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம், கற்பித்தல் முறைகள் போன்றவற்றின் நிலைகளை அறிந்துகொள்ளலாம். அதேபோல், கற்பித்தல் முறைகளில் தேவைப்பட்டால் மாறுதல்களைக் கொண்டுவரவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது.

அரையாண்டுத்தேர்வில் தவறிய மாணவர்கள் காலை 8மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும்

'அரையாண்டு தேர்வில், தேர்ச்சி பெறாத, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலை, 8:00 மணி முதல் சிறப்பு வகுப்பு நடத்தி, பயிற்சியளிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 100 சதவீத தேர்ச்சி என்ற இலக்குடன் பள்ளிக்கல்வித் துறை செயல்பட்டு வருகிறது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளும், தமிழக அளவில், ஒரே மாதிரியான வினாத்தாளில் அமைவதால், அதன் தேர்ச்சி விகிதம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

இதில், தற்போது நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில், பிளஸ் 2 மாணவ, மாணவியரில், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட தேர்ச்சி இருந்தாலும், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் எதிர்பார்த்தமைக்கும் குறைவாகவே இருந்தது. எட்டாம் வகுப்பு வரை, ஆல் பாஸ் என்பதால், 10ம் வகுப்பில், 100 சதவீத தேர்ச்சியை கொண்டு வருவது, அரசு பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், 65 சதவீத அளவுக்கே இருக்கும் என்பதால், படிப்பில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சியளிக்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

அரையாண்டு தேர்வில், தேர்ச்சி பெறாத மாணவர்களை பொதுத்தேர்வில், வெற்றி பெறச்செய்வதே நம் நோக்கம். 10ம் வகுப்பு மாணவர்களை காலை, 8:00 மணிக்கே, பள்ளிக்கு வரவழைத்து, குறிப்பிட்ட ஆசிரியர்களை கொண்டு, அமைதியாக படிக்கச்செய்ய வேண்டும். திறமையான மாணவர் தலைமையில், நடுநிலை, கடைநிலை மாணவரும் இடம்பெறும் வகையில், குழு பிரித்து, அந்த குழுவுக்கு தினமும் படிக்க வேண்டிய பகுதிகளை பாட ஆசிரியர் பிரித்து தர வேண்டும். சிறுவினா, குறுவினா, பெருவினா, மனப்பாட பகுதிகளை ஒப்புவித்து, பின் எழுதிக்காட்ட செய்து, ஆசிரியர் திருத்த வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும், பள்ளி வளாகத்தில் மாலை, 6:00 மணிக்கு மேல் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது. உரிய நேரத்தில் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறை தேர்வு விபரம் சேகரித்து அனுப்பு உத்தரவு

பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்க உள்ள பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கான, தேர்வு மையம், ஆசிரியர்கள், பாடவாரியாக மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட செய்முறை தேர்வு குறித்த விவரங்களை அனுப்பி வைக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், மார்ச் மாதத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது.

இதனால், பிப்ரவரி மாதத்துக்குள் செய்முறை தேர்வுகளை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பிப்ரவரி 5ம் தேதி துவங்கி, பிப்ரவரி 23ம் தேதிக்குள் முடிக்கும் வகையில், செய்முறை தேர்வு நடத்திட, ஆயத்த பணி துவங்கியுள்ளன. தேர்வு மையம் அமைப்பது, தேர்வுக்கு ஈடுபடுத்தப்படும் ஆசிரியர் நியமனம், இணை மையம் உள்ளிட்ட பணிகளில், கல்வித்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாட வாரியாக தேர்வெழுதும் மாணவர் எண்ணிக்கை, பள்ளிகளில் உள்ள ஆய்வக வசதி உள்ளிட்டவை குறித்த விவரங்களையும், தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் திரட்டப்பட்டு, செய்முறை தேர்வுக்கான மையங்கள், அதில் பணிபுரிய வேண்டிய ஆசிரியர்கள் உள்ளிட்டவை நியமிக்கப்படும்.

ஸ்மார்ட் கிளாஸ்களாகும் நடுநிலைப்பள்ளிகள்.உயர்நிலைப்பள்ளிகள் புறக்கணிப்பு

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகள் 'புரஜெக்டர்' வசதியுடன் 'ஸ்மார்ட் கிளாஸ்' களாக மாற்றம் பெற்று வருகின்றன. ஆனால், உயர்நிலை பள்ளிகளில் இவ்வசதியின்றி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் தவிக்கின்றனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 5 டெஸ்க்டாப், ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள 5 லேப்டாப், இன்டர்நெட் வசதி, ரூ.35 ஆயிரத்தில் புரஜெக்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர 'டி.வி.டி', பிளேயர்களும் வழங்கியுள்ளனர். மதிய வேளையில் மாணவர்கள் இவ்வசதிகளை பயன்படுத்துகின்றனர். ஆறு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கம்ப்யூட்டர் சார்ந்த அடிப்படை கல்வியை பெறுகின்றனர். ஆனால், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத் தின் கீழ் உயர்நிலை பள்ளிகளில் இந்த வசதிகள் செய்துதரப்படவில்லை. இதன் காரணமாக நடுநிலையில் இருந்து உயர்நிலை பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களால் கம்ப்யூட்டர் கல்வியை தொடர முடியவில்லை. பத்தாம் வகுப்பு அரசு தேர்வு எழுதும் மாணவர்களின் விபரத்தை கூட கம்ப்யூட்டரில் ஏற்ற முடியாமல் பல பள்ளிகள் தவிக்கின்றன.

உயர்நிலை பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது: எஸ்.எஸ்.ஏ., சார்பில் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு பல வசதிகள் உள்ளன. அதில், முக்கியமானது 'ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம். ஆனால், உயர்நிலை பள்ளிகளுக்கு ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் வசதிகள் செய்துதரவில்லை, என்றார்.

உயர்நிலைப்பள்ளிகளில் லேப் உபகரணம் பயன்படுத்தாத அவலம்

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், ஆண்டு தோறும் வழங்கப்படும் லேப் உபகரணங்கள் பள்ளிகளில், பயனற்று தேங்கி கிடப்பதால், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. நிதி: தமிழகத்தில், மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை மேம்படுத்துவதற்கு, பல்வேறு தலைப்புகளில், நிதி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் ஆண்டுதோறும் பள்ளி மானிய நிதியாக, ஒவ்வொரு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கும், 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் அறிவியல் உபகரணங்கள், 25 ஆயிரம் ரூபாய்க்கும், மின்சார மற்றும் போன் பில்லுக்கு, 15 ஆயிரம் ரூபாயும், செய்தித்தாள் மற்றும் இதழ்களுக்கு, 10 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கப்படுகிறது. கடந்த, 2009 - 10ம் ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக, ஆண்டுதோறும், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக, 5,700க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, 15 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழக அரசு உயர்நிலைப்பள்ளிகளில், இதுவரை லேப்களுக்கு என தனியாக அறை வசதியும், அதற்கான டேபிள், அலமாரி உள்ளிட்ட எந்த வசதியும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் லேப் உபகரணங்கள் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வழங்கி வருவதால், அவை தலைமை ஆசிரியருக்கு பெரும் சுமையாக மாறிவருகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட லேப் உபகரண, 'பார்சலை' கூட பிரிக்காமல் பயனற்று கிடந்த நிலையில், நடப்பு கல்வியாண்டிலும், கணித ஆய்வகம் மற்றும் அறிவியல் ஆய்வக பொருட்களே வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆய்வக பொருட்களை வழங்கி, அவை பயனற்று கிடப்பதை விட, விளையாட்டு உபகரணம் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. தரம் குறைவு: இதுகுறித்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் எந்த உயர்நிலைப்பள்ளிக்கும் லேப் அறை மற்றும் அதற்கான வசதி செய்து தரப்படவில்லை. ஆனால் திட்ட நிதியில் பணம் வருகிறது என்பதற்காக, அனைத்து பள்ளிகளுக்கும் லேப் கருவிகளுக்கு என, ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், ஒரே நிறுவனத்தின் மூலம் இந்த உபகரணங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இவை விலைக்கேற்ற தரத்தில் இருப்பதில்லை. இயக்குனரக உத்தரவின் காரணமாக அவர்களிடமே வாங்க வேண்டிய கட்டாயத்துக்கும் உள்ளாக வேண்டியுள்ளது. லேப் அறை வசதி இல்லாததால், பெரும்பாலான உயர்நிலைப்பள்ளிகளில், 'பார்சலை' பிரிக்காமலேயே பத்திரமாக பாதுகாக்கின்றனர். பல முறை கோரிக்கை விடுத்தும், லேப் உபகரணங்களே மீண்டும் மீண்டும் வழங்குவது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகிறது. பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்களே இல்லாத நிலை காணப்படுகிறது. இதற்கு எந்த திட்டத்திலும் நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. அதுமட்டுமின்றி, அவை ஆண்டுக்கொருமுறையாவது கொள்முதல் செய்யவேண்டியிருக்கும். இதுபோல் மாணவர்களுக்கு தேவைப்படும் உபகரணங்கள் வாங்க இந்நிதியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

கிராமப்புற மாணவர் வாசிக்கும் திறன் அதிகரித்துள்ளது.ஆய்வில் தகவல்

தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம், தமிழ், ஆங்கிலம் வாசிக்கும் திறன் அதிகரித்து உள்ளதாக, தனியார் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது. 'பிரதம்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், 2006 முதல், கிராமங்களில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்லுதல்; அவர்கள் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்து, 'ஏசர்' என்ற தலைப்பில் வெளியிடுகிறது. இந்த ஆண்டு, நாடு முழுவதும், 577 மாவட்டங்கள்; 16,497 கிராமங்களில், மூன்று முதல், 16 வயதுக்குட்பட்ட, 5,70 லட்சம் குழந்தைகளிடம் ஆய்வு நடந்தது. நாடு முழுவதும் கட்டாய கல்விச் சட்டம் அறிமுகமாகி உள்ள நிலையில், 'ஏசர்' குழு, 15,206 அரசுப் பள்ளிகளையும் ஆய்வில் சேர்த்துக் கொண்டது. தமிழகத்தில், 29 மாவட்டங்கள்; 823 கிராமங்கள்; 17,335 வீடுகள்; 3571, 3 - 5 வயதில், 3571; 6 - 14 வயதில்,13, 948; 15 - 16 வயதுடைய, 2,674 குழந்தைகளிடம், ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவுகள் * 6 - 14 வயதில், பள்ளி சேராத குழந்தைகள் எண்ணிக்கை, 2013 ஆண்டை விட, 2014ல் சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், தேசிய அளவை விட மிக குறைவாக உள்ளது. * 6 - 14 வயதில், தனியார் பள்ளிகளில் சேர்ந்த குழந்தைகள் எண்ணிக்கை, ஆண்டு தோறும் அதிகரித்து உள்ளது. 2014ல், 31.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, தேசிய அளவான, 30.8 சதவீதம் விட அதிகம். * மூன்றாம் வகுப்பு மாணவர்களில், முதல் வகுப்பு தமிழ் பாடத்தை வாசிக்கும் திறன் பெற்றவர்கள் எண்ணிக்கை, 2013ல், 29 சதவீதம்; 2014ல், 37.9 சதவீதமாக அதிகரித்து உள்ளது. * ஐந்தாம் வகுப்பு மாணவர்களில், இரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தை வாசிக்கும் திறன் பெற்றவர்கள் எண்ணிக்கை, 2013ல், 31.9 சதவீதம்; 2014ல், 46.9 சதவீதமாக அதிகரித்து உள்ளது. * கணித பாடத்தை படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. * ஐந்தாம் வகுப்பு மாணவர்களின், ஆங்கில வார்த்தைகளை வாசிக்கும் திறன், 2013ல், 57.7 சதவீதம்; 2014ல், 65.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, தேசிய அளவான, 49.2 சதவீதத்தை விட அதிகம். * மூன்றாம் வகுப்பு மாணவர்களின் ஆங்கில வார்த்தைகள் வாசிப்பு திறனும் அதிகரித்துள்ளது.

Friday, January 16, 2015

10ம் வகுப்பு தேர்வு கட்டணம் செலுத்த 19ம்தேதி கடைசிநாள்


           பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் வரும் 19ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகின்றன.

             முன்னதாக, அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறை தேர்வுகளை தொடங்க வேண்டும் என்று தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் மதிய வேளையில் நடக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த தேதி மாறுபடும். இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் பட்டியல்களை தேர்வுத்துறைக்கு கடந்த வாரம் வந்து சேர்ந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு மாணவ, மாணவியருக்கான தேர்வு எண்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடக்கிறது. இந்த பணி முடிந்ததும் அந்தந்த பள்ளிக்கு மாணவர்கள் பட்டியல் தேர்வு எண்களுடன் வந்து சேரும்.

          இதற்கிடையே பள்ளிகள் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தமிழ் வழி அல்லாத மாணவ, மாணவியர், தேர்வுக் கட்டண சலுகை பெற முடியாதவர்கள் 19ம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தேர்வு கட்டணத்தை நேரடியாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாணவ, மாணவியர் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உரிய நேரத்தில் கட்டணத்தை வசூலித்து அதை தேர்வுத்துறைக்கு அனுப்பவும் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பும் வரி உயர்வும் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 42 பைசாவும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 25 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 ரூபாய் 91 பைசாவாகவும் டீசல் விலை லிட்டருக்கு 48 ரூபாய் 26 பைசாவாகவும் குறைந்திருக்கிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து சரிந்து வருவதால் தற்போது அறிவிக்கப்ட்டுள்ளதை விட இரண்டு மடங்கு விலை சரிவு ஏற்பட்டிருக்கும்.

ஆனால் பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 2 ரூபாய் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. நான்காவது முறையாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை குறைவின் பலன் நுகர்வோருக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

நாளை போலியோ முகாம்

தமிழகத்தில், நாளை 43 ஆயிரம் போலியோ சொட்டு மருந்து முகாம்களில், 70 லட்சம் குழந்தை களுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. * தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம், நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. * தமிழகத்தில், 43,051 சொட்டு மருந்து மையங் கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. * காலை 7:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, மையங்கள் செயல்படும். * ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, முதல் தவணையாக, வரும் 18ம் தேதியும், இரண்டாம் தவணையாக, பிப்., 22ம் தேதியும், சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். * தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாட்களுக்கு முன், சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாட்களில், மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். * புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும், முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். * சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு, விரலில் மை வைக்கப்படும். இது விடுபடும் குழந்தை களை கண்டறிய உதவுகிறது. * முகாம் நாள் அன்று, சொட்டு மருந்து வழங்கும்படி, தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். * இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், முகாம் நாளன்று, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். * பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்காக, பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், ஆகிய இடங்களில், 1,652 நடமாடும் மையங்கள் மூலம், சொட்டு மருந்து வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. * மேலும், 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக, தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. * நாளை, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட, சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் தவறு இருந்தால் நீக்க கலெக்டர்களுக்க் உத்தரவு

வாக்காளர் பட்டியலில், குளறுபடிகள் இருந்தால், அவற்றை சரி செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். 'வாக்காளர் பட்டியலில், ஓட்டுச்சாவடிக்கு, 100 வாக்காளர் வீதம், தொகுதிக்கு குறைந்தது 25 ஆயிரம் போலி வாக்காளர் உள்ளனர். இவர்களை நீக்க, ஓட்டுச் சாவடி அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று, நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்' என, கருணாநிதி தெரிவித்து இருந்தார். இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறும்போது, ''வாக்காளர் பட்டியலில், தவறு உள்ளதா என ஆய்வு செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு இருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

தமிழக அரசு விருது அறிவிப்பு

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் திருவள்ளுவர், பெரியார், அண்ணா, திரு.வி.க. விருதுகளைப் பெறும் அறிஞர்களின் பெயர்களை முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர் கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர், பெரியார், அண்ணா, திரு.வி.க. உட்பட பல்வேறு விருதுகளை பெறத் தேர்வு பெற்றோர் பட்டியலை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். விருதுபெறுவோர் விவரம் வருமாறு: திருவள்ளுவர் விருது - திருக்குறள் க.பாஸ்கரன், தந்தை பெரியார் விருது - டாக்டர் தாவூஜீ குப்தா, அண்ணல் அம்பேத்கர் விருது ஆழி கு.மகாலிங்கம், பேரறிஞர் அண்ணா விருது - பேராசிரியர் கஸ்தூரி ராஜா, பெருந் தலைவர் காமராஜர் விருது - கருமுத்து தி.கண்ணன், மகாகவி பாரதியார் விருது - முனைவர் இளசை சுந்தரம், பாவேந்தர் பாரதிதாசன் விருது - கவிஞர் கண்மதியன், தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது - முனைவர் கரு.நாகராஜன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ் ஆகியோருக்கு வழங்கப் படுகிறது. சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் 16-ம் தேதி (இன்று) நடக்கும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருதுகளை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விருது பெறுவோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு பவுன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரை ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு, நிதியுதவி அளிப்பதற் கான அரசாணைகளும் இவ்விழா வில் வழங்கப்படும். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thursday, January 15, 2015

டி.இ.டி., தேறியவர்களுக்கு 19ம் தேதி முதல் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு

வாரியத்தின் சார்பில், 2012-13ல் நடந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ், வரும் 19ம் தேதி முதல் முதன்மை கல்வி அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. இத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டது. தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

இதில் பெரும்பாலான தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொண்டனர். சரியான முறையில் பதிவிறக்கம் செய்துகொள்ளாத ஆசிரியர்களின் தகுதி சான்றிதழ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 2012-13 கல்வியாண்டில் 150க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்று, இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்கள், உரிய ஆதாரத்தினை காண்பித்து, வரும் 19ம் தேதி முதல் பிப்., 14ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5ல் தொடங்க திட்டம்

பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்காக சென்னையில் 300 மையங்கள் அமைக்க தேர்வு துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. முன்னதாக, அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 5 அல்லது 6ம் தேதிகளில் செய்முறை தேர்வுகளை தொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னையில் மொத்தம் உள்ள 406 மேல்நிலை பள்ளிகளில் அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் 50 ஆயிரம் மாணவ&மாணவியர் செய்முறை தேர்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்காக சென்னையில் 300 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. செய்முறை தேர்வில் 30 மதிப்பெண்கள் புறமதிப்பீட்டுக்கும், 20 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டுக்கு தரப்பட்டுள்ளன. இரண்டிலும் சேர்த்து 40 மதிப்பெண்கள் எடுத்தால்தான் செய்முறை தேர்வில் மாணவ மாணவியர் தேர்ச்சி பெற முடியும். அதாவது செய்முறை தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெறவில்லை என்றால் தேர்ச்சிபெற முடியாது.

வீட்டுக்கடன் வட்டி குறையும்

யாரும் எதிர்பாராத வகையில், வங்கிகளுக்கான, 'ரெப்போ' வட்டி வீதத்தை, ரிசர்வ் வங்கி, 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வாகனங்கள் மற்றும், வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கைக்கு, தொழில் துறையினரும், வங்கியாளர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, பணவீக்கம் குறைந்துள்ளது, உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு போன்ற காரணங்களால், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான, 'ரெப்போ' வட்டி வீதம், 8.0 சதவீதத்தில் இருந்து, 7.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி வீதம், 7 சதவீதத்தில் இருந்து, 6.75 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு வீதத்தில் மாற்றமில்லை. அது, 4 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர், 3ம் தேதி, ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி ஆய்வு கொள்கையில், 'பணவீக்கம் உட்பட, பல அம்சங்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில், வட்டி வீதம் குறித்து முடிவு எடுக்கப்படும்' என, தெரிவித்திருந்தது. அது, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அதேநேரத்தில், கடந்த நவம்பரில் மொத்த விலை பணவீக்கம் பூஜ்யத்தை எட்டியிருந்தது. இது, டிசம்பரில் 0.11 சதவீதமாக உயர்ந்தது. இதே கால கட்டத்தில், சில்லரை விலை பணவீக்கம், 4.38 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக சற்றே உயர்ந்தது.

ஆனாலும், இது, ரிசர்வ் வங்கியின், 6 சதவீத இலக்கிற்குள்ளேயே உள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பின் தற்போது வரை, சர்வதேச கச்சா எண்ணெய் விலை, 60 சதவீதம் குறைந்துள்ளது. இது போன்ற காரணங்களால், ரிசர்வ் வங்கி, வரும் பிப்ரவரி, 3ம் தேதி வெளியிட உள்ள நிதி ஆய்வு கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி வீதத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றே, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், திடீரென, ரெப்போ வட்டி வீதத்தை குறைத்து, நிதிச் சந்தைக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். 18 மாதங்களுக்கு முன், அதாவது, 2013 மே மாதம் தான், ரெப்போ வட்டி வீதம், 7.50 சதவீதத்தில் இருந்து, 7.25 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதன் பின், உயர்த்தப்பட்ட ரெப்போ வீதம், சமீப நாட்கள் வரை குறைக்கப்படவில்லை. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, வட்டி வீதத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும், 'காலம் கனியவில்லை' என்று கூறி வந்த ரகுராம் ராஜன், அதிரடியாக தற்போது வட்டி வீதத்தை குறைத்து பல தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட வங்கிகளும், தொழில்துறையினரும், ரிசர்வ் வங்கியின் முடிவை வரவேற்றுள்ளனர்.

பள்ளிக்குழந்தைகளுக்கு தனியாக ஆதார் சிறப்பு முகாம்

பள்ளிக் குழந்தைகளுக்கு என்று தனியாக ஆதார் சிறப்பு முகாம் நடத்தி, இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில், மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும்' என, மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.பள்ளிக் கல்வித் துறைக்கு என தனியாக வடிவமைக்கப்பட்ட, மாநில கல்வி மேலாண் தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.,) என்ற வலைதளத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் விவரம் :சேகரிக்கும் திட்டம், கடந்த, 2012ம் ஆண்டு துவங்கப்பட்டது.குறிப்பாக, 14 வயதுக்குட்பட்ட மாணவர் படிக்கும் பள்ளி பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டது. அதனால், மாணவரின் இடைநிற்றல், இடம் பெயர்தல் உள்ளிட்ட காரணங்களால், மாணவரின் படிப்பு பாதிக்கப் படாமல் இருக்க தொடர் கண்காணிப்பு செய்ய முடியும்.இ.எம்.ஐ.எஸ்., பதிவில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவரின், பெயர், பெற்றோர் பெயர், வகுப்பு, முகவரி, ரத்த வகை, உடன் பிறந்தோர், அவர்களின் கல்வி விபரம், தொழில், பெற்றோர் மாத வருமானம், மொபைல் போன் எண், மாற்றுத்திறன் தகுதி, ஆதார் அடையாள எண் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட விவரம் சேகரிக்கப்பட்டது. கடந்த, 2013-14ம் கல்வியாண்டில், ஆன்லைன் மூலம் பதியப்பட்ட விவரங்களில், பல்வேறு குளறுபடிகள் இருந்ததால், பள்ளி செல்லா மாணவரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், மீண்டும் இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தின்படி, மாணவரின் எடை, உயரம் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க, பள்ளிக்கல்வி இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இருந்தும், பெரும்பாலான அரசு பள்ளிகளில், ஆன்லைன் மூலம் விவரங்கள் 'அப்டேட்' செய்ய, போதுமான தகவல் தொடர்பு வசதி இல்லாததால், இ.எம்.ஐ.எஸ்., விவரங்களை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, அந்தந்த தலைமையாசிரியர்கள் அருகில் உள்ள வட்டார வளமையம், பள்ளிக்கு சென்று 'அப்டேட்' செய்து வருகின்றனர். இதற்கிடையே, மாநில திட்ட இயக்குனரகம் கூறிய உத்தரவுபடி, புதியதாக துவங்கப்பட்ட பள்ளிகள், மூடப்பட்ட பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் என, மூன்று பிரிவுகளாக பள்ளிகளை பிரித்து, தனித்தனியாக கணக்கிட வேண்டும். ஏற்கனவே உள்ள பள்ளிகளை வழக்கம் போல், 'அப்டேட்' செய்ய வேண்டும். கல்வி அதிகாரிகள் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில், 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவரின் விவரம், முதல்கட்டமாக, வரும், 31ம் தேதிக்குள், 'அப்டேட்' செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான துவக்கப்பள்ளியில் ஆன்லைன் வசதியில்லாததால், அருகில் உள்ள பள்ளி மற்றும் வட்டார வள மையங்களை நாட வேண்டியுள்ளது. பள்ளிகளை மூன்று பிரிவாக பிரித்து கணக்கெடுப்பு நடத்துவதால், மாணவரை எளிதாக அடையாளம் காண முடியும். மேலும், ஒன்று முதல், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர் வரை, ஆதார் எண் பதிய வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், அந்தந்த பகுதி ஆய்வு அலுவலர்கள் மூலமாக, மாவட்ட கலெக்டருக்கு கடிதம் வைத்து, மாணவருக்கு என்று சிறப்பு ஆதார் முகாமை, மண்டலம் வாரியாக நடத்தி, ஆதார் எண்ணை, 'அப்டேட்' செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொங்கல் போனஸ் கிடைக்காமல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் கொந்தளிப்பு


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நடக்கும் நிலையிலும் போனஸ் கிடைக்காமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொதிப்பில் உள்ளனர்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டார். இதையடுத்து ஆண்டுதோறும் பொங்கல் போனஸாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தலா ரூ.3000, உயர் அதிகாரிகளுக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு பொங்கல் போனஸ் அறிவிப்பை முதல்வர் பன்னீர்செல்வம் ஜன.,8 ல் வெளியிட்டார். கடந்தாண்டு பொங்கல் போனஸ் ஜன.,12ல் வழங்கப்பட்டது. இந்தாண்டு பொங்கல் முடிந்த நிலையிலும் போனஸ் கிடைக்காமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொதிப்பில் உள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக அடுத்த வாரம்தான் கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும் கருவூலத்துறை ஊழியர்கள், அதிகாரிகளுக்கு மட்டும் பொங்கல் போனஸ் கிடைத்துள்ளது.

Tuesday, January 13, 2015

தொடக்க கல்வி ஆசிரியர் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் ஜனவரி 19 முதல் 24 வரை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகலை இணைத்து, தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சென்று சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கணினி புகைப்படக் கருவிகள் மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்னர், அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழுக்கு ரூ.100, இணையதள பதிவுக் கட்டணம் ரூ.50, சேவைக் கட்டணம் ரூ.15 ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 19 முதல் 24-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பொங்கல் விடுமுறையில் பள்ளிகள் இயங்ககூடாது.கல்வித்துறை உத்தரவு

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், உதவிபெறும் பள்ளிகளை பொங்கல் விடுமுறைக் காலத்தில் இயக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்காக பள்ளிகளுக்கு ஜனவரி 15-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் அந்த விடுமுறை நாள்களிலும் மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டுமென உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, பொங்கல் விடுமுறையில் பள்ளிகளை இயக்கவுள்ள நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அரையாண்டுத் தேர்வு குறித்த மீளாய்வுக் கூட்டம், முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.ஞானகெளரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், தாளாளர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் பேசிய முதன்மைக் கல்வி அலுவலர், அரசு விடுமுறை நாள்களில் பள்ளிகளை இயக்குவது சட்ட விரோதமானது. எனவே, பொங்கல் விடுமுறை மட்டுமின்றி எந்த ஒரு அரசு விடுமுறையின்போதும் பள்ளிகளை இயக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். விதிகளை மீறி பள்ளிகள் செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இதற்கிடையே, பொங்கல் விடுமுறையில் பள்ளிகளை இயக்கக் கூடாது என்ற சுற்றறிக்கையை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாக கல்வித் துறை அனுப்பியுள்ளது.

பள்ளிக்கழிப்பறைக்கு பூட்டு.கல்வித்துறை அதிர்ச்சி

தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த அரக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. கலெக்டர்கள் மூலம் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஜன., 10 ல் நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வுக்கான முன்னேற்பாடுகளை கவனிக்க இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் மாநிலம் முழுவதும் ஆய்வு செய்தபோது பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் பயன்பாடின்றி பூட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் பள்ளி கல்வி இயக்குனரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ' சிறிய அளவிலான பழுதுக்குக் கூட கழிப்பறைகளை பூட்டி வைத்துள்ளனர்,' என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிளஸ் 2, 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்குள் கழிப்பறைகளை திறக்காவிட்டால் தலைமைஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. கல்வித்துறை அதிகாரி கூறியதாவது: கழிப்பறை பழுதுகளை சீரமைக்க எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., பள்ளி பராமரிப்பு நிதியை பயன்படுத்தலாம். பற்றாக்குறை ஏற்பட்டால் பெற்றோர் ஆசிரியர் சங்க நிதியை பயன்படுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது, என்றார்.

குரூப் 2ஏ கலந்தாய்வு தேதி அறிவிப்பு

குரூப் - 2 ஏ கலந்தாய்வில், காலியிடங்களை ஆய்வு செய்து, இடம் இருப்பின், விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2013 - 14க்கான, குரூப் - 2 ஏ பிரிவில் அடங்கிய, நேர்முகத் தேர்வு அல்லாத, உதவியாளர், நேர்முக உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டு ஜூனில் நடந்தது. அந்த, 2,508 காலிப் பணியிடங்களுக்கான, முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு, கடந்த மாதம் 29ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கலந்தாய்வு முடிந்த பின், மீதமுள்ள காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை, இனம், துறை வாரியாக தேர்வாணைய இணையதளத்தில், அன்றே வெளியிடப்படுகிறது. எனவே, விண்ணப்பதாரர்கள், இனவாரியான மீதமுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை, ஆய்வு செய்ய வேண்டும். அவரவர் பிரிவில், காலியிடங்கள் இருந்தால் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் நாளில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

மாலை 6.00 மணிக்குமேல் சிறப்பு வகுப்பு கூடாது

'பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை, 6:00 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களை கல்வித்துறை கண்டித்துள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு: * அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை, பொதுத் தேர்வில் வெற்றி பெற செய்வதே, நம் நோக்கம். பத்தாம் வகுப்பு மாணவர்களை, காலை, 8:00 மணிக்கு பள்ளிக்கு வரவழைத்து, குறிப்பிட்ட ஆசிரியர்களைக் கொண்டு அமைதியாக படிக்கச் செய்ய வேண்டும். * திறமையான மாணவர் தலைமையில் நடுநிலை, கடைநிலை மாணவரும் இடம்பெறும் வகையில் குழு பிரிக்க வேண்டும். அந்த குழுவுக்கு, தினமும் படிக்க வேண்டிய பகுதிகளை பாட ஆசிரியர் பிரித்து தரவேண்டும். * சிறு வினா, குறுவினா, பெருவினா, மனப்பாட பகுதிகளை ஒப்புவித்து, பின் எழுதி காட்டச் செய்து ஆசிரியர் திருத்த வேண்டும். * எந்தக் காரணத்தை முன்னிட்டும், பள்ளி வளாகத்தில் மாலை 6:00 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. உரிய நேரத்தில் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, இயக்குனர் கூறியுள்ளார்.

உள்ளூர் விடுமுறை

'போகிப் பொங்கலான இன்று, அந்தந்த பள்ளிகள் உள்ளூர் விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம்' என, பள்ளி கல்வித்துறை தெரிவித்ததை அடுத்து, அரசுப் பள்ளிகள் உட்பட, அனைத்து வகை பள்ளிகளும், இன்று விடுமுறை அறிவித்துள்ளன. இத்தகவல், நேற்று, பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இன்றைய நாளை ஈடுகட்ட, பொங்கல் பண்டிகைக்குப்பின் வரும் சனிக்கிழமையில் பள்ளியை நடத்தவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.