Tuesday, February 19, 2013
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மாற்றம்
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, விடுவிக்கப்பட்டார். பாடநூல் கழக செயலர் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் இயக்குனராக இருந்த செந்தமிழ்ச் செல்வி, டிசம்பரில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
விரைவில், பள்ளி பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இதனால், தேர்வுத்துறை இயக்குனர், தேர்வுப் பணிகளில், முழு கவனம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதை அறிந்து, அவரை, மெட்ரிக் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தமிழக அரசு விடுவித்துள்ளது. பாடநூல் கழக செயலராக இருக்கும் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : டி.ஆர்.பி., "பகீர்' தகவல்
முதுகலை, தமிழ்வழி படிப்பில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., "பகீர்' தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது. தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய தி.மு.க., அரசு உத்தரவிட்டது.
சமீபத்தில், 3,000 முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்வழி ஒதுக்கீட்டிற்கான, தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியாகவில்லை.முதுகலையில், வரலாறு, வணிகவியல் மற்றும் புவியியல் ஆகிய மூன்று பாடங்களில் மட்டுமே, தமிழ்வழிப் பிரிவுகள் உள்ளன. இந்த பாடங்கள் உட்பட, வேறு சில பாடங்களையும், தமிழ் வழியில் படித்ததாக, ஏராளமான முதுகலை பட்டதாரிகள், டி.ஆர்.பி.,யிடம் விண்ணப்பித்துள்ளனர். உண்மையில், எந்தெந்த கல்லூரிகளில், முதுகலை, தமிழ்வழிப் பிரிவு பாடத் திட்டங்கள் உள்ளன என்ற விவரங்களை அறிய, அனைத்து பல்கலைகளுக்கும், டி.ஆர்.பி., கடிதம் அனுப்பி, விவரம் கேட்டது.தற்போது, ஒரு சில பல்கலைகள், டி.ஆர்.பி.,க்கு பதில் அளித்துள்ளன.
அதில், "எங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், மேற்குறிப்பிட்ட பாடங்களில், தமிழ்வழிப் பிரிவு இல்லை' என, தெரிவித்துள்ளன. இந்த பதிலைப் பார்த்து, டி.ஆர்.பி., அதிர்ச்சி அடைந்துள்ளது. மாணவர்கள் குறிப்பிட்டுள்ள பாடங்கள், சம்பந்தப்பட்ட பல்கலையில், தமிழ்வழிப் பிரிவு இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளது. இதன் மூலம், தேர்வர்கள் சிலர், போலி சான்றிதழ்களை சமர்ப்பித்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளது.எனவே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டில், வேலை கோருவோரின் விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டு பட்டியல் இறுதி செய்யப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், தமிழ்வழி தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.
Monday, February 18, 2013
எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது எம்.எஸ்சி. தொழிலக வேதியியல்: அரசாணை வெளியீடு
பாரதிதாசன், அழகப்பா பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் எம்.எஸ்சி. தொழிலக வேதியியல் (இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி) படிப்பு, எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழக அரசுப் பணிகளில் இந்த கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு இணையாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இணையான படிப்புகளுக்கு சான்றளிக்கும் குழுவின் கூட்டத்தில் மேற்கண்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் தொழிலக வேதியியல் படிப்பை, வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை கவனத்துடன் பரிசீலித்த பிறகு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் எம்.எஸ்சி. தொழிலக வேதியியல் படிப்பு, வேதியியல் படிப்புக்கு இணையானது என்று உத்தரவிடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசுப் பணி, பதவி உயர்வுக்கு இதை வேதியியல் படிப்புக்கு இணையான படிப்பாகக் கருத வேண்டும் என்றும் உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Friday, February 15, 2013
குரூப் 2 தேர்வு முடிவு வெளியீடு: பிப்ரவரி 22-ல் நேர்காணல் B
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.)குரூப் 2 தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம் மாதம் 22-ம் தேதி முதல் நேர்காணல் நடைபெறுகிறது. குரூப் 2 பிரிவுக்கு உள்பட்ட 3,631 பணியிடங்களுக்கு கடந்த நவம்பர் 4-ம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். முன்னதாக கடந்த ஆகஸ்ட் 12- ல் நடைபெற்ற குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதால் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மறு தேர்வு கடந்த நவம்பர் 4-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள் குரூப் 2-ன் கீழ் வருகின்றன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம் மாதம் 22-ம் தேதி நேர்காணல் நடைபெறும் என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 45 காசும் உயருகிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த இரு வாரங்களில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வந்தன. இந்த நிலையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியானது.
Thursday, February 14, 2013
அரசு ஊழியர்களுக்கானஓய்வூதிய திட்ட வட்டி அதிகரிப்பு
தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான, ஓய்வூதியத் திட்டத்தின் வட்டி, எட்டு சதவீதத்தில் இருந்து, 8.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம், 2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களில் இருந்து மாற்றம் கண்டது. அதாவது, அந்தாண்டிற்கு பின் சேர்ந்தவர்கள் அனைவரும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.
இத்திட்டத்தின் மூலம், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து, 10 சதவீதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு இணையான தொகையை அரசும் வழங்கி, அந்த ஊழியரின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2011ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி முதல், 8.6 சதவீதமாக உயர்த்தப்படுவதாக, முன்தேதியிட்டு தற்போது, தமிழக அரசு உத்தரவிட்டு, இதற்கான அரசாணையையும் பிறப்பித்துள்ளது.
"குரூப் 2 மறுதேர்வு முடிவுகள் 5 நாள்களில் வெளியாகும்'
குரூப் 2 மறு தேர்வுக்கான முடிவுகள் ஐந்து நாள்களில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு மூலம் துணை ஆட்சியர், போலீஸ் டி.எஸ்.பி. உள்பட 131 பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 262 பேரில் ரேங்க் அடிப்படையில் வந்த 131 பேர் முதல்முறையாக கலந்தாய்வு அடிப்படையில் வியாழக்கிழமை அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் நடராஜ் கூறியது: குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
அதில் ஒவ்வொருவரும் எந்தெந்தப் பணிகளில் சேர விருப்பமோ அதை தேர்ந்தெடுக்க உள்ளனர். வரும் 16-ம் தேதி நடைபெறும் குரூப்-1 தேர்வில் 25 பணியிடங்களுக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். சென்னையில் மட்டும் 26 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டு கிடைக்காதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்குச் சென்று தகவல்களைத் தெரிவிக்கலாம். தேர்வாணைய அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நட்ராஜ். வியாழக்கிழமை நடைபெற்ற கவுன்சலிங்கில் 40-க்கும் மேற்பட்டோர் துணை ஆட்சியர் பதவியையும், 23-க்கும் அதிகமானோர் டி.எஸ்.பி., பதவியையும் தேர்ந்தெடுத்தனர்.
குரூப்-2 மறுதேர்வு முடிவுகள்: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வின் வினாத்தாள் முன்பே வெளியானதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு நவம்பர் 4-ம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவுகளை இன்னும் 5 நாள்களில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
குரூப்–1 முதல்நிலை தேர்வு: 25 காலி இடங்களுக்கு 1¼ லட்சம் பட்டதாரிகள் போட்டி -
துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்காக குரூப்–1 முதல்நிலை தேர்வு (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் 1¼ லட்சம் பட்டதாரிகள் கலந்து கொள்கிறார்கள். புதிய பாடத்திட்டம் குரூப்–1 தேர்வுக்கான பாடத்திட்டமும், தேர்வுமுறையும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. குரூப்–1 தேர்வு, முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களை கொண்டது ஆகும். தற்போது முதல்நிலை தேர்வில் புதிதாக ‘ஆப்டிடியூடு’ என்ற ஆய்வுத்திறன் பகுதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.
முன்பிருந்த 200 பொது அறிவு கேள்விகளின் எண்ணிக்கை 150 ஆக குறைக்கப்பட்டு ஆப்டிடியூடு பகுதியில் இருந்து 50 வினாக்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அதேபோல், மெயின் தேர்வில் முன்பு 2 பொது அறிவு தாள்கள் மட்டும் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் தலா 300 வீதம் மொத்தம் 600 மதிப்பெண். புதியமுறையில் கூடுதலாக ஒரு பொதுஅறிவு தாள் சேர்க்கப்பட்டு மொத்த மதிப்பெண் 900 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆங்கில மொழித்திறனை சேர்க்கும் வகையில் புதிய பாடத்திட்டமும் இணைக்கப்பட்டு உள்ளது.
புதிய முறையில், நேர்முகத்தேர்வு மதிப்பெண் 80–லிருந்து 120 அதிகரித்து இருக்கிறார்கள். முதல்நிலை தேர்வு நாளைமறுநாள் நடக்கிறது இந்த நிலையில், துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. வணிகவரி உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஒரு லட்சத்து 29 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் தகுதி உடையவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த லையில், புதிய பாடத்திட்டம், தேர்வுமுறை மாற்றத்துடன் கூடிய முதல் குரூப்–1 தேர்வு (முதல்நிலைதேர்வு) நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் 33 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. 25 இடங்களுக்கு 1¼ லட்சம் பேர் போட்டி ஏறத்தாழ ஒன்றே கால் லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுதுகிறார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் 26 ஆயிரம் பேர் தேர்வில் கலந்துகொள்கின்றனர். மதுரை, சேலம், கோவை, திருச்சி ஆகிய இடங்களில் தலா 5 ஆயிரம் பேரும், விழுப்புரத்தில் 5,500 பேரும் தேர்வு எழுதுகிறார்கள். குரூப்–1 முதல்நிலை தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் தெரிவித்தார். வழக்கம்போல் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வர்கள் எழுதுவது வீடியோவில் பதிவுசெய்யப்படும். அனைத்து மையங்களையும் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது
. ஒரே மாதத்தில் தேர்வு முடிவு டி.என்.பி.எஸ்.சி. வருடாந்திர தேர்வு பட்டியலின்படி, குரூப்–1 முதல்நிலை தேர்வு முடிவு அடுத்த மாதம் (மார்ச்) வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு மே மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதன் முடிவு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்டு மாதம் நேர்முகத்தேர்வு நடத்தி ஆண்டு இறுதிக்குள்ளாகவே நியமன பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
Wednesday, February 13, 2013
Tuesday, February 12, 2013
பொதுவேலைநிறுத்தம்: 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பர்
வரும் 20, 21-ம் தேதி நடைபெறும் பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் 50,000 ஆசிரியர்கள் பங்கேற்பர் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச்செயலர் முருக.செல்வராசன் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின் அகில இந்திய வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சங்க மாநிலப்பொதுச்செயலர் கூறியது:
வரும் 20,21 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 2 நாள் பொது வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 20,21ம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முழு அளவில் பங்கேற்க உள்ளது. 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். பொது வேலை நிறுத்தத்தின் போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரவும், மக்கள் விரோத கொள்கைகளை திரும்ப பெறவும், தன் பங்கேற்புத்திட்டத்தைக் கைவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை தொடரவும் வலியுறுத்தப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வை முற்றிலும் ரத்து செய்து வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாத சந்தா தொகையை ரூ.50 ஆக குறைக்க வேண்டும் என்றார்.
மாநிலச் செயலாளர் வின்சென்ட், மாவட்டப் பொருளாளர் தமிழ்செழியன், மாவட்ட துணைச் செயலாளர் தாமஸ் ஆண்டனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Monday, February 11, 2013
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1 முதல் நிலை தேர்வு 16–ந்தேதி நடக்கிறது
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1 முதல் நிலைத்தேர்வு வருகிற 16–ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வு 33 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையாளர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ந்த முதல் நிலைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpsc.exams.net ஆகிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் எம்.விஜயக்மார் தெரிவித்துள்ளார்.
"குரூப்-1 பணிகளுக்கான தேர்வில் கொண்டு வந்த மாற்றம் செல்லும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது
. "குரூப்-1 பணிகளுக்கான தேர்வில் கொண்டு வந்த மாற்றம் செல்லும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, டிசம்பரில், குரூப்-1 பணிகளுக்கான அறிவிப்பாணையை, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், அருண்குமார் என்பவர், தாக்கல் செய்த மனு: முதல்நிலை தேர்வில், மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டு, தேர்வு நடவடிக்கைகள் துவங்கிய பின், நடுவில், இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் தகுதி பெற, முதல்நிலை தேர்வு முக்கியம். இதில், தனித் திறன் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு பாதகம் ஏற்படலாம்; எனவே, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: தேர்வு நடவடிக்கைகளை எளிமையாக்கவும், தரத்தை உயர்த்தவும், திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடவடிக்கைகள் துவங்கிய பின், சேர்க்கை தகுதியில் மாற்றம் கொண்டு வருவது, மாநில அரசு வசம் இல்லை. மனுதாரர், இனி மேல் தான், முதல்நிலை தேர்வில் கலந்து கொள்ளப் போகிறார். பொது அறிவு கேள்விகள் தவிர, ஒரு பதவியை வகிக்க, தனிச் சிறப்பு உள்ளதா என்பதை சோதிக்கும் வகையிலான தேர்வும் நடத்தப்படுகிறது. தனிச் சிறப்பு தொடர்பான கேள்விகளுக்கு, தனியாக மதிப்பெண்கள் அறிமுகப்படுத்தியதை, மனுதாரர் எப்படி எதிர்க்க முடியும் என, தெரியவில்லை.
எந்த ஒரு பணியிலும், ஒருவரை நியமிக்க வேண்டும் என்றால், அந்த நபருக்கு, சரியான நடவடிக்கை, திறன் இருக்க வேண்டும். அந்தப் பணிக்கு தேவையான தகுதி இல்லாமல், அதில் அவரால் பணியாற்ற இயலாது. ஒரு பணியில் நியமிக்க, ஒருவரின் திறமையை சோதிப்பது அவசியம். இந்த வழக்கைப் பொறுத்தவரை, குரூப்-1 பணியிடம் என்பது, மாநில அரசுப் பணியில், உயர் பதவிகளை கொண்டது. எனவே, இந்தப் பணிகளில் நுழைவதற்கு, ஒருவரின் திறமையை சோதிப்பது என்பது, அரசு மற்றும் டி.என்.பி. எஸ்.சி.,யைப் பொறுத்தது. இதில், தலையிட முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
Sunday, February 10, 2013
218 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களைத் தரம் உயர்த்தி அரசு உத்தரவு
தமிழகம் முழுவதுமுள்ள 218 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களாகத் தரம் உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணையில் (11) கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 2001 கல்வியாண்டு முதல் தேவை மற்றும் தகுதியின் அடிப்படையில் தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அதுபோல் 2010-11ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 218 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகள் 2012-2013-ஆம் கல்வியாண்டில் 6, 7, 8 வகுப்புகளுடன் முழுமை பெற்ற நடுநிலைப் பள்ளிகளாக இயங்குகின்றன. எனவே, 218 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களாகத் தரம் உயர்த்தப்படுகின்றன.
அவ்வாறு நிலையுயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களை தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களிலிருந்தும், பட்டதாரி ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் பணியிடங்களிலிருந்தும் முன்னுரிமை பட்டியலின்படி, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மூலமாக நிரப்பிக் கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.