ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட நாட்டின் முன்னணி செல்போன் நிறுவனங்கள் அழைப்பு கட்டணங்களை சுமார் 2 மடங்கு உயர்த்தி உள்ளன. எனினும் அதுபற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதையடுத்து, செல்போன் நிறுவன பங்குகள் விலை புதன்கிழமை உயர்ந்து காணப்பட்டன.
செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள ஏர்டெல் நிறுவனம் வர்த்தக மேம்பாட்டுக்காக செல்போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச நிமிடங்களை 25 சதவீதம் வரை குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான சிறப்புக் கட்டண கூப்பன் (பூஸ்டர்/ரேட் கட்டர்) விலையை ரூ.5 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது. இந்தக் கட்டண உயர்வு நாட்டில் உள்ள அனைத்து 22 தொலைத் தொடர்பு வட்டங்களிலும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், ஒரு சில தொலைத் தொடர்பு வட்டங்களில் மட்டும் செல்போன் கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக ஐடியா செல்போன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதாவது வர்த்தக மேம்பாட்டுக்காக செல்போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
இந்நிறுவனம் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதுகுறித்து ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி சஞ்சய் கபூர் கூறுகையில், ""செலவு அதிகரித்து வந்த போதிலும், கடந்த 3 ஆண்டுகளாக செல்போன் கட்டணங்கள் குறைக்கப்பட்டன. இப்போதைய வருமானம் செலவை ஈடுகட்டுவதற்குக் கூட போதுமானதாக இல்லை. எனவே கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது'' என்றார். அதேநேரம், செல்போன்களுக்கான முதன்மை கட்டணம் உயர்த்தப்படவில்லை என ஏர்டெல் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், தொலைத்தொடர்புத் துறையின் நிதிநிலை மோசமாக உள்ளதால் கட்டண உயர்வு அவசியமாகிறது என்றும், அப்போதுதான் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். எனினும், கட்டண உயர்வு குறித்து வோடஃபோன் இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் கருத்து கூற மறுத்து விட்டார். இதன் தொடர்ச்சியாக, ரிலையன்ஸ், ஏர்செல், டாடா ஆகிய செல்போன் நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தும் எனத் தெரிகிறது. ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள், சமீபத்தில் இன்டர்நெட் பயன்பாட்டுக்கான 2ஜி டேட்டா கட்டணங்களை 30 சதவீதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது.
உலகிலேயே இந்தியாவில்தான் செல்போன் கட்டணங்கள் மிகக் குறைவாக உள்ளன. நிறுவனங்களிடையே நிலவிய கடும் போட்டி காரணமாக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வந்ததால் வருமானம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.