தமிழக அரசின் சார்பில் விரைவில் தொடங்கப்படவுள்ள கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், குழந்தைகளைக் கவரும் விதமாக அனிமேஷன் திருக்குறள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்படவுள்ளது. இதற்காக 32 மாவட்டங்களுக்கும் ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒளிபரப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்தவும், தகவலை எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாகவும், கல்வித் தொலைக்காட்சி என்ற பெயரில் 24 மணி நேர புதிய அலைவரிசை தொடங்கப்படவுள்ளது.
இதற்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 8-ஆவது தளத்தில் புதிய தொலைக்காட்சிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பத் தேவையான காட்சியரங்கம், ஒளிப்பதிவுக் கூடங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கல்வித் தொலைக்காட்சியின் அனைத்து மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இது குறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியது: கல்வித் தொலைக்காட்சி பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் என்ற வீதத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ஒளிப்பதிவு குழுவினருடன் சென்று மாவட்டத்தில் உள்ள கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை காட்சி பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு கேபிளில் 200-ஆவது சேனலில் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும். 24 மணி நேரமும், கல்வித் தொடர்பான தகவல்கள் மாணவர்களைச் சென்றடையும் விதத்தில் இதற்கான நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் நிகழ்ச்சியாக தினமும் காலை 5 மணிக்கு குறளின் குரல் என்ற தலைப்பில் ஒரு திருக்குறளைப் பற்றிய விளக்க உரையும், அது தொடர்பான அனிமேஷன் விளக்கமும் இடம்பெறும். குழந்தைகளைக் கவரும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் நிகழ்ச்சியைப் பார்க்க தவறிய மாணவர்கள், மாலையில் மறு ஒளிபரப்பில் காணலாம். 17 வகை நிகழ்ச்சிகள்: இதைத் தொடர்ந்து இந்த நாள் இனிய நாள், நலமே வளம், சாதனை படைத்த ஆசிரியர்கள் குறித்த குருவே துணை, சுட்டி கெட்டி, ஒழுக்கம் விழுப்பம் தரும் ஆகியவை உள்பட 17 வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளன.
இவ்வாறு பகல் ஒரு மணி வரை நிகழ்ச்சிகள் தினமும் தொகுத்து வழங்கப்படவுள்ளன. இவை தினமும் மூன்று முறை என 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் இந்த கல்வி தொலைக்காட்சி சேனலைப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வகுப்புக்கான ஒளிபரப்பை அந்த வகுப்பு மாணவர்கள் கண்டறிந்து பயன்பெறுவர் என்றனர்.
No comments:
Post a Comment