தமிழகத்தில் கோவை உள்பட 4 இடங்களில் புதிதாக கேந்திர வித்யாலய பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 1,199 பள்ளிகளும் தமிழகம், புதுச்சேரியில் 49 கேந்திரிய வித்யாலய பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், மத்திய மனிதவளத் துறையின்கீழ் செயல்பட்டுவருகின்றன.
இந்தப் பள்ளிகளுக்கு, மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்வதால், இங்கு கல்விக் கட்டணம் மிகவும் குறைவு. ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கும் 25 சதவீத இடங்கள் போக, மீதம் உள்ள 75 சதவீத இடங்களில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகள் முதன்மையாகச் சேர்க்கப்படுகிறார்கள். குறிப்பாக, அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுபவர்களின் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அடுத்து, மாநில அரசில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கு சேர்க்க முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்த இரண்டு பிரிவினர் சேர்ந்ததுபோக மீதம் உள்ள இடங்களுக்கு மற்றவர்களும் விண்ணப்பித்துச் சேரலாம். இதனால், நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலாய பள்ளிகள் கூடுதலாக அமைக்கப்பட வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், மாணவர்கள் நலன் கருதி இந்தியா முழுவதும் 50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக கேந்திரியா வித்யாலாய பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment