பள்ளிகளில், மாதந்தோறும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்த உத்தர விட்டுள்ளதோடு, செலவின நிதியாக, 2.24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் மூலம், மத்திய அரசின் நிதி, பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பராமரிப்பு நிதி, குறைந்தபட்சம், 25 ஆயிரத்தில் இருந்து, அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இத்தொகையை, பெற்றோர் - ஆசிரியர் கழகத்துடன் சேர்ந்து, பள்ளிக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், பல பள்ளிகள் இதை பின்பற்றவில்லை. எனவே, மாநில திட்ட இயக்குனர், சுடலைகண்ணன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, சுற்றறிக்கை மூலம், உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில், ஏப்ரல் மாதம் வரை, மாதந்தோறும் ஒரு முறை பெற்றோர் - ஆசிரியர் கூட்டம், கட்டாயம் நடத்த வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழகத்தில் உள்ள, 37 ஆயிரத்து, 358 பள்ளிகளுக்கு, 2.24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது. இத்தொகையில், ஒரு கூட்டத்துக்கு, சிற்றுண்டி செலவாக, தலா ஒரு பள்ளிக்கு, 100 ரூபாய் வீதம் அளிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment